மன்றல்

                        மன்றல்

கண்ணாடி முன் நின்று புடவையை சரி பார்த்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி.. சற்றே பூசிய உடல்வாகு கொண்டவளுக்கு அந்த பட்டுப் புடவை இன்னும் கொஞ்சம் குண்டாக காட்டியது போல் தான் தெரிந்தது..

லேசாய் திரும்பி கண்ணாடியில் பார்க்க முதுகு வரை மட்டுமே வளர்ந்திருந்த முடியை முழுதும் மறைத்திருந்த மல்லிகைப் பூவில் கொஞ்சம் திருப்தியாக இருந்தது.

நெற்றியில் கல்வைத்த பொட்டிற்கு மேல் வைத்த குங்குமம் அவளது மை நிற முகத்தில் எடுப்பாக தெரிந்தது.. பின்னலில் சூடியிருந்த பூவில் கொஞ்சத்தை எடுத்து முன்புறம் போட்டுக்கொண்டு கண்ணாடியைப் பார்த்து திருப்தியாய் புன்னகைத்துக் கொண்டாள்..

முப்பது வயதான மிருணாவிற்கு கடந்த ஐந்து வருட பெண் பார்க்கும் படலத்தில் இல்லாத சந்தோசம் இன்றைய நிகழ்வில் இருந்தது.. காரணம் இவள் புகைப்படத்தை பார்த்ததுமே தன் பிடித்தத்தை சொல்லி விட்ட அரவிந்தனால்..

எத்தனையோ வரன்கள் இவள் நிறத்தையும் உடல் பருமனையும் வைத்து நிராகரித்து செல்ல, இந்த அரவிந்தன் அவளுக்கு தேவ தூதன் போல் தான் தெரிந்தான்.. தன்னை பற்றிய தாழ்வு மனப்பான்மையில் உழன்றவளுக்கு பெரிதாய் காதல் உணர்வுகள் அலையடித்தததும் இல்லை.. அவ்வலையில் நனைந்ததும் இல்லை..

இப்பொழுது அவளையும் ஒருவனுக்கு பிடித்திருக்கிறது என்ற எண்ணமே மனம் முதிர்ந்த பெண்ணவளையும் கொஞ்சம் மயக்கத்தில் ஆழ்த்தி தான் இருந்தது. அறையின் வெளியே அரவிந்தன் அவளுக்காய் காத்திருப்பது பெரும் நாணத்தை தந்திருந்தது..தன்னை பிடித்திருக்கும் ஒருவனின் முன் செல்லவது கொஞ்சம் படபடப்பாக இருந்தது..

நேரில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்து பார்த்து தயாராகி இருந்தாள்..மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் சரி பார்த்து முடிக்க அறையினுள் வந்த, மிருணாவின் அம்மா அவளை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்..

அங்கு அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டு அவள் வீட்டு பெண்களின் அருகில் அமர்ந்தாள்..அறை முழுதும் உறவினர்களின் சலசலப் பேச்சில் நிரம்பியிருக்க மிருணா மெல்ல நிமிர்ந்து தன் எதிரில் அமர்ந்திருந்த அரவிந்தனை நன்றாய் பார்த்தாள்..

முன்புறம் லேசாய் விழுந்த வழுக்கை அவன் முப்பத்தி ஐந்து வயதை சொல்லாமல் சொல்லியது.. இவளைப் போலவே உடல் வாகுடன் கொஞ்சம் மாநிறத்தில் இருந்த அரவிந்தன்  மிருணாவின் கண்களுக்கு அழகாகவே தெரிந்தான்..

அவன் தன்னை பார்த்தால் எப்படி எதிர்வினை செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, அவனோ அந்த எண்ணமே இல்லாதவன் போல் கைபேசியினுள்ளேயே கண்களை வைத்துக் கொண்டிருந்தான்..

அதைக் கண்ட மிருணா 'ரொம்ப சங்கடமா இருக்கும் போலயே.. நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்கறாரு..'என்று மனதில் நினைத்துக் கொண்டாள்..

சம்பிரதாய பேச்சு வார்த்தை முடிந்து மிருணாவை அறைக்குள் அழைத்து வந்த அவள் அம்மா வெளியே சென்றுவிட சற்று நேரத்தில் அரவிந்தன் உள்ளே வந்தான்..

"வாங்க.. "என்றழைத்து அவன் அமர நாற்காலியை நகர்த்தி வைக்க, அதில் அமர்ந்தான் அரவிந்தன்.. மிருணா சுவர் ஓரமாய் கைகளை காட்டியவாறு நின்று கொண்டாள்..உள்ளங்கைகள் வேர்த்து ஈரம் ஆகியது.. அவளை பார்த்து புன்னகைத்த அரவிந்தன்,

"நீங்களும் உக்காருங்க.."என்று சொல்ல,

"இல்லைங்க பரவாயில்ல.."என்று மறுத்து விட்டாள்.. சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே நிலவியது..

"நீங்க எந்த ஸ்கூல்ல்ல ஒர்க் பண்றீங்க...?"என்று அரவிந்தனே பேச்சை ஆரம்பித்தான்..

"கேர்ள்ஸ் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல தமிழ் டீச்சரா இருக்கேன்.."

"ஓ..!ஓகேங்க.. நான் பிரைவேட் கம்பெனில மேனேஜரா இருக்கேன்.."

"ம்ம்.. அப்பா சொன்னாங்க.."

சிறிது நேரம் பொதுவாய் பேசிவிட்டு அவன் கிளம்பி விட, மிருணாவிற்கு அப்பாடா என்றிருந்தது..டீனேஜ் பெண் போல் வியர்த்து வழிந்து நின்ற தன்னைக் கண்டே வியப்பாய் இருந்தது மிருணாவிற்கு..

இருவீட்டினரும் பேசி முடித்து பதினைந்து நாட்களில் நிச்சயதார்தத்தையும் ஒரு மாதத்தில் கல்யாணத்தையும் முடிவு செய்தனர்..

மறுநாள் பள்ளி சென்றவளை எதிர்கொண்ட ஓவிய ஆசிரியர் சத்யா சீலன் ,

"மிருணா டீச்சர் நேத்து நீங்க லீவு போட்டுட்டீங்க போல.. ஏதாச்சும் உடம்பு சரி இல்லையா.."

"அதெல்லாம் இல்லை சார்.. நேத்து பொண்ணு பாக்க வந்தாங்க.."

"ஓ சூப்பர்..எல்லாம் ஓகே ஆகிருச்சா டீச்சர்.."

"ஆமாம் சார். பதினஞ்சு நாள் கழிச்சு நிச்சயம்.. ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்னு ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க..."

"வாழ்த்துக்கள் டீச்சர்.."என்று சொல்ல, நன்றி சொல்லி புன்னகைத்தாள்.

"நீங்க எப்ப சார் கல்யாண சாப்பாடு போடப் போறீங்க.."என்று சிறு சிரிப்புடன் வினவ,

"மனசுக்கு பிடிச்ச பொண்ணு கிடைச்சா உடனே போட வேண்டியது தான்.."

"இன்னுமா சார் கிடைக்காம இருக்காங்க..இப்படியே போனா நேரிடியா அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும்.. "என்ற மிருணாவின் கிண்டலில் வாய் விட்டு சிரித்தவன்,

"அதுக்குன்னு கடமைக்கேன்னு ஒரு கல்யாணம் பண்ணிக்க முடியாதில்ல.. ஒரு பொண்ண மனசார பிடிச்சிருந்தா மட்டுமே கல்யாணம் பண்ணிக்கணும் டீச்சர்.. ஏன்னா காதல் இல்லாத கல்யாண வாழ்க்கையை தவிர சிறந்த நரகம்  வேறேதுவும் இல்லைனு நம்பறேன் நான் .."என்று சொல்லி முடிக்கவும் வகுப்பு தொடங்கியதற்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது..அவளிடம் விடை பெற்ற சத்யா தன் வகுப்புக்கு சென்று விட,

அவன் பேசி சென்ற கடைசி வார்த்தை மிருணாவை நன்றாய் அசைத்துப் பார்த்து விட்டிருந்தது..

"நிச்சயமாய் காதல் இல்லாத கல்யாண வாழ்க்கை நரகம் தான்.."என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் தன் வகுப்பை நோக்கி செல்லத் தொடங்கினாள்..

நாட்கள் அழகாக செல்வது போல் தோன்றியது மிருணாவிற்கு.. அவள் பெற்றோருக்கு அவர்கள் மனதின் அரும்பெரும் பாரம் விலகியது போல் இருந்தது.. முப்பது வயதாகியும் திருமணம் கைகூடாமல் இருக்கும் பெண்ணின் பெற்றோர்கள் கவலை சொல்லித் தெரிய வேண்டியது இல்லையே..

வருவோர் போவோர் என அனைவரின் பேச்சுக்களும் கடைசியில் மிருணாவின் திருமணத்திலேயே வந்து நிற்கும்.. நடுத்தர வர்க்கத்தில் அழகு மட்டுமே திருமணத்தின் முக்கிய தேவையாகி விட்ட சூழலில் மிருணாவின் நிலை மணக்கும் மலர்களில் ஒதுக்கி வைக்கப் பட்ட கதம்ப மலரைப் போல..

அம்மலரை சூடிக் கொள்வோன் கடவுளாகி விடுகிறான்.. காலில் விழுந்து பாத பூஜை செய்யவும் தயாராகி விடும் மனம்.. காலம் என்னதான் முன்னேறட்டும் பெண்ணிற்கு அழகென்பது சிவந்த நிறமும் சிக்கென்ற இடையும் இடை மீறும் கூந்தலுமே. இந்த வரையறைக்குள் சற்றும் பொருந்தாத மிருணாவின் நிலை ரசிக்கும் நிலைக்கு அப்பாற்பட்டதாகவே தெரியும் மற்றவர்களுக்கு..

சிரிக்க சிரிக்க நண்பர்கள் குடுத்த 'சின்ன யானை' பட்டம் கூட அவள் சிரிப்பின் பின்னால் ஒளிந்து கொண்ட சில்லு சில்லான சிதறல் என்பதை யாரும் புரிந்து கொள்ளவும் இல்லை..

இசையில் லயித்திடும் மனதினை போல் இதமாகவே நாட்களை கடத்திய மிருணாவிற்கு அழகாய் விடிந்தது நிச்சயதார்த்த நாளும்..

அழகுநிலைய பெண்களின் உதவியால் நிச்சயதார்த்த விழாவிற்கு தயாராகி மேடையில் அரவிந்தன் அருகில் வந்து நிற்க அவன் முகமோ கடுகடுவென இருந்தது..

"எதுக்கு இப்படி வெள்ளையடிச்சுட்டு வந்துருக்க..?"என்று பல்லிடுக்கில் கடித்து துப்ப,ஆசை ஆசையாய் செய்து கொண்ட அலங்காரத்தில் நைந்து போனது பெண்ணவள் மனம்..

"ச... சாரி.. பார்லர்ல பண்ணி விட்டாங்க."

"எப்படி இருந்தாலும் இருக்குறத யாரும் மாத்த முடியாதுல்ல.. எதுக்கு வீண் ட்ரை.."என்று சொல்ல இவளுக்கு மனதுடன் சேர்த்து கண்களும் கலங்கியது..

அவனுக்கு பதில் சொல்லாமல் கலங்கிய கண்களை காய வைத்தாள்..மிருணாவின் மனதை உணர்ந்தானோ என்னவோ,

"சாரி.. உன்னை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல.. ஏற்கனவே நீ கருப்பு.. இதுல அவங்க மேக்கப் பன்றேன்னு ஓவரா பண்ணி விட்டுருக்காங்க.. பார்க்க ஒரு மாதிரி நல்லா இல்ல.. அதனால் தான் சொன்னேன்.. நீ ஃபீல் பண்ணாத."

"அதெல்லாம் இல்ல.."என்று புன்னகைக்க, அவனுக்குள் ஒரு பெருமூச்சு கிளம்பியது..

பிறகு நலங்கு வைத்து மோதிரம் மாற்றிக்கொள்ள நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தது..

நிச்சயம் முடிந்த மறுநாள் அவள் தன்னுடைய வாட்சப் ஸ்டேட்டசில் அவர்கள் நிச்சய புகைப்படங்களை வைத்திருந்தாள்.. சிறிது நேரத்திற்குள்ளாகவே அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது..

"வாட்சப்ல எதுக்கு என்னோட போட்டோவை வச்சுருக்க.."என்று கோபமாக கேட்டான்.

"நம்ம என்கேஜ்மென்ட் போட்டோவ தான் வச்சுருக்கேன்.."

"அதுல நானும் இருக்கேன் தான.. என்னை கேட்காம எப்படி நீ வைக்கலாம்.."என்று கத்த, மிருணாவிற்குள் எதையோ ஒன்றை இழக்கும் உணர்வு..

"உங்க போட்டோவை என் போனுல வைக்க எனக்கு உரிமை இல்லையா அரவிந்த்.."என்று கேட்க, சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன்,

"இதுல உரிமை இருக்கு இல்ல பிரச்சனை இல்ல மிருணாளினி.. எனக்கு என்னோட போட்டோவை மத்தவங்க யூஸ் பண்றது பிடிக்காது..

'ஓ.. ச்ச.. கொஞ்ச நேரத்தில் உரிமை இல்லாத மாதிரி நினைக்க வச்சுட்டாரு..'என்று நினைத்தவள்,

"சாரி அரவிந்.. இனி வைக்க மாட்டேன்.."என்று மன்னிப்பு கேட்டாள்..

"ம்ம் சரி மிருணாளினி.. எனக்கு வேலை இருக்கு.. அப்புறம் பண்றேன்.."என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

ஆசையாய் வைத்த புகைப்படத்தை டெலீட் செய்தவள் எதேச்சையாய் அவளது காண்டாக்ட் லிஸ்ட்டில் இருந்தவர்களின் ஸ்டேட்டசை பார்வையிட, அதில் நேற்றைய  நிகழ்வில் அரவிந்தன் தன் மாமா பெண்ணுடன் எடுத்திருந்த போட்டோவை வைத்திருந்தாள் அந்தப் பெண் நந்தினி..

நந்தினி நிச்சயத்தின் போதே நன்றாக பழகி இருந்ததால் இருவரின் நம்பரும் இடம் மாறி இருந்தது.. அதே போல் அவன் சொந்தங்களின் சில எண்களும் இவளிடம் இருக்க, அவர்களின் எல்லோருடைய ஸ்டேட்டசிலும் இவர்கள் இருவரின் புகைப்படங்களும் அவர்கள் அரவிந்தனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இருந்தது..

இதையெல்லாம் பார்த்தவளுக்கு "நிஜமாய் அரவிந்தனுக்கு என்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்றாரா" என்று தோன்ற ஆரம்பித்திருந்தது..

குழப்பத்தின் பிடியில் நாட்களை கடந்த மிருணாளினி திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் நண்பர்கள் ட்ரீட் கேட்டதால் உணவகத்திற்கு வந்திருந்தனர்..

உடன் பணிபுரியும் சத்யா மற்றும் சில ஆசிரியர்களுடன் வந்திருந்தாள்.. மனதில் எவ்வளவு குழப்பங்கள் இருந்திட்ட பொழுதிலும் நண்பர்களின் கேலி கிண்டல் பேச்சுக்களில் சந்தோசமாகவே இருந்தாள்..

"மிருணா மேடம் இந்நேரம் எத்தனை கவிதை எழுதி இருப்பீங்க அரவிந்த் சார்க்கு.."என்ற அவளது தோழியின் கிண்டல் கேள்வியில் அசட்டு சிரிப்பை உதிர்த்தாள் மிருணாளினி..

"ஹே அதெல்லாம் கணக்குவழக்கில்லாம எழுதி தள்ளிருப்பாங்க.. தமிழ் டீச்சர் வேற.. பிரண்ட்ஷிப் கவிதையே செம்மயா இருக்கும்.. காதல் கவிதையெல்லாம் சொல்லவா வேணும் "என்று இன்னொரு தோழி சொல்ல அழகாய் வெட்கப்பட்டாள் மிருணாளினி..

"ஹே போதும்.. சாப்பாடு வந்துருச்சு எல்லாரும் சாப்புடுங்க "என்று சத்யா சொல்ல,

"நாங்க சாப்பிடறது இருக்கட்டும் சார்.. நீங்க எப்ப மேரேஜ் பண்ற ஐடியால இருக்கீங்க.. "என்றார் சக ஆசிரியர் வாசு..

"நீங்க வேற வாசு சார்.. அவருக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணு கிடைச்சா தான் கல்யாணம் பண்ணுவாராம்.."என்றாள் மிருணா.

"முப்பத்தி மூணு வயசு ஆகிருச்சு.. இத்தனை வருசமா ஒரு பொண்ணு கூடயா சார் பிடிக்கல..?"

"சார் ஓவியர் இல்லையா.. ரொம்ப ரசனையானவர் ஆச்சே.. அதான் சாமுத்ரிகா லச்சணமா தேடிட்டு இருக்கார் போல.."

"அப்பிடியெல்லாம் இல்ல தேவி டீச்சர்.. எனக்கு மட்டும் பொண்ணை பிடிச்சா போதுமா.. அவங்களுக்கும் பிடிக்கணும்ல.. அந்த வகைல ரெண்டு பொண்ண மிஸ் பண்ணிட்டேன்.."

"அப்போ உங்களுக்கும் கூட லவ் ஃபெயிலியர் இருந்துருக்கு.."என்று மிருணா கேட்க,

"ரெண்டு பேரும் பண்ணா தான லவ்.. இது சும்மா கிரஸ்..இல்ல சின்ன விருப்பம்னு கூட வச்சுக்கலாம்.."

பிறகு வந்த சில பேச்சுகளுக்கு இடையில்,

"மிருணா! அங்க வரது அரவிந்த் சார் தானே..?"என்று தேவி சொல்லவும் அனைவரும் நுழைவு வாயிலை பார்த்தனர்..அரவிந்தன் தான் அவன் நண்பனுடன் வந்து கொண்டிருந்தான்.

இவர்கள் முன் தன்னை குறையாய் எதாவது சொல்லிவிட்டால் தாங்க முடியாது என்றுணர்ந்தவள்,

"அவர் பிரண்டோட வந்திருப்பார் போல.. நாம சாப்பிட்டு கிளம்பும் போது பேசிக்கலாம்.. இப்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.."என்று மிருணா சொல்லவும் அனைவரும் சரியென ஒத்துக் கொண்டனர்..

சத்யா மட்டும் கேள்வியாய் மிருணாவை நோக்க, ஏதோ தவறு செய்யும் உணர்வை உணர்ந்தவள் அவன் பார்வையை தவிர்த்து தலையை குனிந்து கொண்டாள்..

நண்பர்களுடன் வந்த அரவிந்தன் மிருணாவிற்கு பின் இருந்த மேஜையில் அமர்ந்து கொண்டான்.. திரும்பி அமர்ந்திருந்ததால் மிருணாவை கவனிக்கவும் இல்லை..பேரரிடம் உணவு ஆர்டர் செய்துவிட்டு உரையாட ஆரம்பித்தவர்களின் பேச்சு அரவிந்தனின் கல்யாணத்தில் வந்து நின்றது..

"அப்புறம் மச்சி கல்யாண வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு.. ஆபீஸ்க்கு எப்ப இருந்து லீவு போட்டுருக்க.."

"அதெல்லாம் அப்பா அம்மா பாத்துக்கறாங்க.. நல்லா தான் போய்ட்டு இருக்கு.. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடில இருந்து மூணு வாரம் போட்டுருக்கேன்.."

"ஓ சரிடா.. சரி சிஸ்டர் போட்டோவை காட்டவே மாட்டிங்கரியே.."

"அதான் கல்யாணத்துக்கு வருவில்ல. அப்போ பார்த்துக்கோ.."

"ரொம்ப பண்ணாதடா.. ஒழுங்கா உங்க என்கேஜ்மென்ட் போட்டோ காமிடா."என்று வற்புறுத்தவும் அவன் கைபேசியில் இருந்த புகைப்படத்தை கட்டினான்..

"நிஜமா இவங்க தான் பொண்ணாடா.. இல்ல என்னை கலாய்க்க எதாவது மார்ஃபிங் பண்ணினத காமிக்குறியா.."

"டேய் கடுப்பேத்தாத..இது ஒரிஜினல் போட்டோ தான்.."

"ஹே சாரிடா.. நீ இதுவரைக்கும் ரிஜெக்ட் பண்ணின பொண்ணுங்க கூட இவங்கள விட நல்ல கலரா ஒல்லியா இருந்தாங்களே.. இப்போ இவங்களுக்கு எப்படி ஓகே சொன்ன.."

"நிறைய பழிச்சதுக்கு இது தண்டனைனு வச்சுக்கலாம்.. இப்பவே முப்பத்தி அஞ்சு வயசு ஆச்சு.. இந்த பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிட்டா இனி உனக்கு பொண்ணே பார்க்க மாட்டோம்னு வீட்ல ஒரே சண்டை.. அதோட பொண்ணு கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர்.. நல்ல சம்பளம்.. இருபது பவுன் போடுவாங்கன்னு சொல்லி சம்மதிக்க வச்சுட்டாங்க..

எனக்கும் வேற ஆப்ஷன் இல்ல.. அதான் ஒத்துக்க வேண்டியதா போய்டுச்சு."என்று அரவிந்தன் சொல்லி முடிக்கவும், இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மிருணாவின் கண்களில் கண்ணீர் திரையிட்டது..

நிமிர்ந்து யாரையும் பார்க்கும் துணிவின்றி தட்டில் இருந்த உணவையே வெறித்துக் கொண்டிருந்தாள்..

மற்றவர்களுமே அரவிந்தனின் பேச்சில் திகைத்து தான் போயிருந்தனர்.. அரவிந்தன் பேச்சு பெரும்பாலான இன்றைய ஆண்களின் மனநிலை தான் என்றாலும் அதை அவன் வாய் மொழியாகவே கேட்க நேரிடும் பொழுது எந்த பெண்ணாலும் தாங்க முடியாதே..

சிறிது நேரம் கண்களை மூடி தன்னை சமன் படுத்தியவள், எதுவும் நடவாதது போல் சாப்பிட ஆரம்பித்தாள்.. மற்றவர்களும் ஏதும் பேசி அவளை மேலும் காயப்படுத்திட வேண்டாம் என்றெண்ணி அமைதியாய் சாப்பிட்டு முடித்தனர்..

அரவிந்தனிடம் பேசாமலே அனைவரும் உணவகத்தை விட்டு கிளம்பி விட்டனர்.. அவனுமே மிருணாளினியை பார்க்க வில்லை.. பார்த்திருந்தாலும் தெரிந்திருக்குமோ என்னவோ.. 'மனதோடு மனம் இணையாமல் முகம் மட்டும் அகம் பதிந்திடுமா என்ன'..

இரு நாட்கள் கழித்து மிருணாளினி அரவிந்தனுக்கு கைபேசியில் அழைத்தாள்..அவள் அழைப்பை ஏற்றவன்,

" சொல்லு மிருணாளினி "

"உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்..எப்ப ஃபிரீயா இருப்பீங்க?"

"என்ன விஷயம் ? ஈவினிங் ஃபிரீ தான்."

"அதை நேர்லயே பேசிக்கலாம். சாயந்திரம் எங்க ஸ்கூல் பக்கத்துல இருக்குற சிவன் கோவிலுக்கு வந்துடுங்க."என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

மாலை கோவிலுக்கு சென்றவள் ஈசனை தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தில் அமர அரவிந்தனும் அப்போது தான் வந்தான்..

"சாரி கொஞ்சம் லேட்டாகிடுச்சு."என்றவாறே அருகில் இடைவெளி விட்டு அமர்ந்தான்.

"இல்ல பரவாயில்ல... நானும் இப்ப தான் வந்தேன்.."

"ம்ம்..சரி சொல்லு என்ன விஷயம்.. எதுக்கு என்னை வர சொன்ன?"

"கல்யாணத்தை பத்தி கொஞ்சம் பேசணும் அரவிந்த்.."

"அதான் கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிஞ்சுதே.. இனி வேற என்ன பிளான் இருக்கு."

"நீங்க அந்த ஒரு நாள் பத்தி பேசறீங்க.. நான் அதுக்கு பிறகு வர நம்ம வாழ்க்கைய பத்தி பேசணும்.."என்று சொல்லி இடைவெளி விட்டவள் எதிரில் இருந்த கோபுரத்தில் பார்வையை பதித்தவாறே தொடர்ந்தாள்..

"ஒரு கல்யாணத்துக்கு எது ரொம்ப முக்கியம் அரவிந்த்.."

'இப்ப எதுக்கு இந்த கேள்வி 'என்று நினைத்தாலும் பதிலைச் சொன்னான்.

"ரெண்டு பேரோட விருப்பம் தான்.."

"அந்த விருப்பத்தோட அடிப்படை காதலா இல்ல கட்டாயமா?"

"கண்டிப்பா காதல் தான்.."

"அந்த காதல் உங்களுக்கு என் மேல இருக்கா அரவிந்த் "என்று அவனை நேராய் பார்த்துக் கேட்க அவனால் பதில் சொல்ல முடியவில்லை.. அவன் அமைதியை கண்டு வருத்தப் புன்னகை கொண்டு மிருணாளினியே தொடர்ந்தாள்..

"இந்த இடத்துல உங்க அமைதியே சொல்லிடுச்சே அரவிந்த் உங்க காதலோட அளவ.. உங்களுக்கு என்மேல ஒரு பெர்சென்ட் கூட லவ் இல்லைங்கும் போது இந்த கல்யாணம் எந்த விதத்துலயும் நமக்கு நன்மை செய்யாது அரவிந்த்.. அதனால கல்யாணத்தை நிறுத்திடலாம்.."என்று சொல்லவும் கோபமாய் நிமிர்ந்தான்.

"என்ன விளையாடுறியா.. இப்ப போய் கல்யாணத்தை நிறுத்தினா எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா.. சரி ஒத்துக்கறேன் நீ எனக்கு பிடிச்ச மாதிரி இல்ல.. கருப்பா குண்டா இருக்க.. ஏன் சில நேரம் பார்த்தாலே கடுப்பா இருக்கு.. ஆனால் இதெல்லாம் போக போக மாறிடும்..

எல்லாரும் லவ் பண்ணிட்டா  கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டு வாழறாங்க.. பிடிச்சு கல்யாணம் செய்யறதை விட பொண்ணு கிடைக்காம வேற வழி இல்லாம தான் உன்னை மாதிரி பொண்ணுங்க கல்யாணம் நடக்குது..

இப்டியாச்சும் கல்யாணம் நடக்குதே.. அதிலும் என்னை மாதிரி சிவப்பா ஒரு பையன் கிடைக்குறதே உங்க அதிர்ஷ்டம்.. அதை விட்டுட்டு உன்னை பிடிச்சுருக்கவன கல்யாணம் பண்றதெல்லாம் நடக்குற காரியமா.. "என்று ஏளனமாய் முடித்தான்.

"எனக்கு அப்பிடிப்பட்ட எந்த அதிர்ஷ்டமும் தேவை இல்ல.. இப்படி கொஞ்சம் கூட என்னை பிடிக்காத உங்க கூட நரகத்துல வாழுறத விட இப்படியே இருந்துட்டு போறேன்.. அந்த நரகத்தை விட கண்டிப்பா இது மோசமா இருக்காது.."

"முடிவா என்ன சொல்ற நீ..?"என்றவன் குரலில் அடக்கப்பட்ட கோவம் இருந்தது.

"உங்களை கல்யாணம் பண்ணிக்குறதுல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல.. நீங்களே இந்த கல்யாணத்த நிறுத்திடுங்க. இல்லையா மணமேடைல எல்லார்க்கும் முன்னாடியும் உங்களை பிடிக்கலைன்னு சொல்லி நானே கல்யாணத்த நிறுத்திடுவேன்."என்று அவள் உறுதியாய் சொல்ல, அரவிந்தன் முகம் கோவத்தில் சிவந்தது..

"உனக்கெல்லாம் திமிருடி.. சின்ன யானை மாதிரி இருக்கற உன்னை எவன் வந்து கல்யாணம் பண்ணிக்குவான்னு பாக்குறேன்.. காலம் பூரா உங்க வீட்லயே இருக்கும் போது தெரியும் என் அருமை."என்று வெறுப்பாய் சொல்லிவிட்டு அவளை விட்டு விலக முயல,

"மிஸ்டர் அரவிந்தன் ஒரு நிமிஷம்.."என்று சொல்லவும் நின்று இவளை கோவமாய் எதிர்கொண்டான்..

"இன்னும் என்ன?"

"இது இனி எனக்கு சொந்தமில்லை "என்று அவள் கைகளில் இருந்த மோதிரத்தை கழற்றி அவனிடம் குடுத்தாள்.. அவனும் அவன் விரலில் இருந்ததை கழற்றி இவளிடம் வீசினான்.. அதை எடுத்தவள்,

"காதல் இல்லாத கல்யாணம் நரகம் அரவிந்த்.. ஒரு பொண்ணை அவ சம்பளத்துக்காகவோ இல்ல அவ கொண்டு வர நகைக்காகவோ கல்யாணம் பண்ணிக்காதீங்க.. மனசார நேசிச்சு அவளை மனைவியா ஏத்துக்குங்க.. அழகையும் தாண்டி அவ திறமைக்காகவும் குணத்துக்காகவும் காதலிங்க.. கண்டிப்பா வாழ்க்கை நல்லா இருக்கும்.. பெஸ்ட் ஆஃப் லக் என்று கைநீட்ட, அவளை முறைத்துக் கொண்டே சென்று விட்டான்.

அவன் சென்றதும் இழுத்து மூச்சு விட்டாள்.. ஏதோ கண்டத்தில் இருந்து தப்பித்தது போல் இருந்தது.. அவன் உண்டாக்கி சென்ற காயம் அதிகம் தான் என்றாலும் ஒரு ஆசுவாசம் எழுந்ததை அவளால் உணர முடிந்தது..

இனி அவள் பெற்றோரை சமாளிக்க வேண்டும் என்று நினைக்கையில் சற்று மலைப்பாக இருந்தது.. மேலும் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு வீட்டிற்கு சென்றாள்.. இவள் வீட்டிற்குள் நுழையும் போதே அம்மாவின் புலம்பல் தான் வரவேற்றது..

மிருணாவை கண்டதும் கட்டிக்கொண்டு, மாப்பிள்ளை வீட்டில் கல்யாணத்தை நிறுத்தி விட்டதை சொல்லி அழுதவரை விலக்கி நிறுத்தினாள்..

"அம்மா நான் தான் அரவிந்த் கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்தினேன்.."என்று சொல்ல அழுகையை நிறுத்தி விட்டு அதிர்ச்சியாய் பார்த்தார்..

"என்னோட வேலைக்காகவும் நீங்க போடுற பவுனுக்காகவும் என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சவனோட வாழ்க்கை பூரா பிடிக்காத வாழ்க்கைய வாழ முடியாது.."என்று கூறிவிட்டு தன் அறைக்குள் வந்து கதவை சாத்திக்கொள்ள அவள் அம்மா கத்தும் சத்தம் மூடிய கதவை தாண்டியும் இவள் காதை வந்து அடைய தான் செய்தது.. ஏமாற்றத்தின் வலியை அதற்கு மேலும் தாங்க முடியாமல் கண்ணீரில் கரைந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் வந்த அவள் அப்பா கதவை தட்ட ஓடிச்சென்று திறந்தவள் அவர் மார்பில் அடைக்கலம் புகுந்தாள்..

"சாரிப்பா.. உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்துட்டேன்..அவனுக்கு என்னை பிடிக்கவே இல்லப்பா.. நான் குண்டா கருப்பா அவனுக்கு பொருத்தமாவே இல்லையாம். வேற பொண்ணு கிடைக்காம தான் என்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டானாம்.. அதான் ப்பா எனக்கு நீ வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. இது தப்புனா சாரிப்பா.. என்னை எவ்ளோ வேணும்னாலும் அடிங்க வாங்கிக்குறேன்.."என்று சொல்லி அழ, அவள் தலையை கோதியவர்,

"என் பொண்ணு எப்பவும் தப்பு பண்ண மாட்டான்னு தெரியும்டா. நீ அழுகாத பாப்பு.."என்று சொல்லி அவள் கண்களை துடைத்து விட்டார்..

"என்னங்க நீங்களும் அவ பண்ணது சரிண்ணே சொல்றீங்க.. இப்பவே இவளுக்கு முப்பது வயசு ஆச்சு.. இதுல இந்த கல்யாணம் நின்னது தெரிஞ்சா யாரு இவளை கல்யாணம் பண்ணிக்குவாங்க..இவளுக்கு முடியாம அறிவுக்கு எப்படி கல்யாணம் பண்ண முடியும்.."

"அம்மா அதுக்குன்னு பிடிக்காத கல்யாணத்த எப்படி பண்ணிக்க முடியும்..அதோட என் கல்யாணத்துக்கு என்ன அவசரம். இப்ப தான இருபத்தியேழு ஆகுது.. சும்மா இப்படி பேசி பேசி அக்காவ கஷ்டப்படுத்தாத.."

"என்னமோ போங்க.. எல்லாம் உங்க இஷ்டத்துக்கு செய்யுங்க.. நாளைக்கு எல்லாருகிட்டயும் என்ன பதில் சொல்வோமோ. எப்படி சமாளிப்போமோ..?"என்று அழுது புலம்பியவரை சமாதானம் செய்ய சென்றான் அறிவு..

அழுது கொண்டிருந்த மிருணாளியின் கண்ணை துடைத்தவர் "விடும்மா.. மத்தவங்களுக்காக நீ வாழ முடியாதுல்ல.. நீ வருத்தப்படாத எல்லாம் சரி ஆகிடும்.அப்பா எல்லாத்தையும் பார்த்துக்குறேன். " என்றவரின் வார்த்தையில் புரிந்து கொள்ளுதல் எவ்வளவு அழகானது என்பதை உணர முடிந்தது அவளால்..

அடுத்து வந்த நாட்களில் பெரிதாய் பேசி புலம்பி சென்ற உறவுகளிடம் இருந்து ஒருவருக்கொருவர் துணையாய் இருந்து மீண்டு வந்தனர்.. மிருணாவின் அம்மா தான் அவ்வப்போது புலம்புவார்.. அந்த நேரங்களில் எல்லாம் யாராவது ஒருவர் அவரை சமாதானம் செய்வது வாடிக்கை ஆகிற்று..

நான்கு மாதங்கள் கழித்து ஒரு நாள் மாலை சத்யாவுடன் கோவிலுக்கு வந்திருந்தாள் மிருணாளினி..

"என்ன சார் ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு வர சொல்லிட்டு இப்படி அமைதியா மீனுக்கு பொறி போட்டுட்டு இருக்கீங்க.. ஒருவேளை தனியா போட போரடிக்கும்னு என்னை துணைக்கு கூட்டிட்டு வந்தீங்களா "என்று கேட்டவாறு அவளும் பைகளில் இருந்த பொறியை குளத்தில் தூவ ஆரம்பித்தாள்..

அவளது கேள்வியில் மெலிதாய் சிரித்தவன்,

"மீனுக்கு பொறி போட மட்டும் துணைக்கு வர சொல்லலை மிரு.. என் வாழ்க்கை முழுசும் துணையா வருவீங்களான்னு கேட்க அழைச்சிட்டு வந்தேன்."என்று கேட்கவும் திகைப்பாய் சத்யாவை பார்த்தாள்..

அவன் கண்கள் இவள் கண்களுடன் உறவாட முயல இவள் விழி தாழ்த்திக் கொண்டாள்..

"இதென்ன திடீர்னு இப்படி ஒரு எண்ணம் "என்று குரல் தாழ கேட்டாள்.

"பக்கத்துலயே இருந்த உன்னை இப்ப தான் மனசு புதுசா உணர ஆரம்பிச்சிருக்கு.."என்றான் தன் மனதை வெளிப்படுத்தும் விதமாய்.

"ஏற்கனவே நிறைய ஏமாற்றம் சந்திச்சாச்சு சார்.. உங்களுக்கு இப்போ ஏற்பட்டுருக்கறது என்மேல இருக்குற பரிதாபமா கூட இருக்கலாம்."என்றவளின் வார்த்தைகள் ஏமாற்றத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்தான் சத்யா.

மடிமீது இருந்த அவள் கைகளை தன் கைகளுக்குள் பொருத்தி கொண்டான்..அவள் முகத்தை பற்றி தன் புறம் திரும்பியவன்,

"என் கண்ணைப் பாரு மிரு.. இதுல காதலை தவிர வேற எதையாவது உணர முடியுதா."என்று சொல்ல, மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அவள் விழிகள் தானாய் அவன் பார்வையை சந்தித்தது.

இரும்பு துகளை ஈர்த்துக்கொள்ளும் காந்தமாய் இரு விழி பாவைகள் இவளை ஈர்க்க செய்ய, நெஞ்சம் படபடக்க விழியோரம் உவர் நீர் குறுகுறுக்க, அவனிடம் இருந்து கைகளை உருவியவள் பார்வையை திருப்பிக் கொண்டாள்..

"நான் கருப்பா குண்டா இருக்கேன்.. இந்த சமூகம் பொண்ணுக்கு அழகுன்னு ஒதுக்கி வச்சிருக்கிற எதுவும் என்கிட்ட இல்ல.. பின்ன இப்படி ஒரு பிடித்தம் எந்த அளவுக்கு நிலையா இருக்கும்?"

"என்ன பொறுத்த வரைக்கும் எல்லா நிறமும் ஒன்னு தான் மிரு.. ஒரு ரசிகனுக்கு ஓவியம் வண்ணம் பூசப்பட்டதா இருந்தாலும் கருப்பு வெள்ளையா இருந்தாலும் அவனோட ரசனை எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கும்..

அப்புறம் இந்த உடலமைப்பு.. இது வெறும் வெளித்தோற்றம் தான்.. இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானும் தொப்பை போட்டு குண்டா இருப்பேன்.. அப்போ உனக்கு என்னை பிடிக்காம போய்டுமா..?"என்று கேட்க அவள் தலை தானாக மறுப்பாய் தலையசைத்தது..

"எனக்கு உன்னை பிடிச்சுருக்கு மிரு. காதல் நிறைஞ்ச கல்யாண வாழ்க்கையை உன்னோட வாழணும்னு ஆசைப்படுறேன். என்னை கல்யாணம் பண்ணிக்குறியா மிரு.."

அவன் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் கண்களில் துளிர்த்த நீரை துடைத்தவள் அவன் அருகில் இருந்து எழுந்து கொண்டாள்.

"உங்களை உங்க காதலை மதிக்குறேன் சத்யா.. ஆனால் நீங்க எனக்கு இப்ப வாழ்க்கை குடுக்க வந்த தெய்வம் போல தான் தெரியறீங்க.. அது காதலா மாறுற வரைக்கும் அவகாசம் வேணும்.."

"கண்டிப்பா மிரு.. ஆனால் ஒரே ஒரு ப்ரோமிஸ் மட்டும் வேணும்.."என்று கேட்க, அவள் கேள்வியாய் பார்த்தாள் சத்யாவை. அவள் பார்வையின் பொருள் உணர்ந்தவன்,

"எந்த நிமிஷம் கடவுள் நிலைல இருந்து உன்னோட காதலன் நிலைக்கு மாறுறேனோ அப்போ அந்த செகண்டே என்கிட்ட சொல்லிரனும்."என்று சொல்லி சிரிக்க, சரியென தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் சென்ற சிறிது நேரத்திலேயே அவன் கைபேசியில் குறுஞ்செய்தி வந்தது.. எடுத்து பார்த்தவன் முகத்தில் புன்னகை விரிந்தது..

கதம்ப மலரை சூடிக்கொள்ளும்
கடவுள் இல்லை நீ..
அதை ரசிக்க தெரிந்த
ரசிகன் நீ..
காதலோடு சேர்ந்த திருமணம்
சொர்க்கத்தை விட சிறந்தது..
காதல் வைத்து காத்திருக்கிறேன்
உனக்காக..

மிருணாவிடம் இருந்து வந்த செய்தியில் அவள் மனம் அறிந்தவன் விரைந்தோடி சென்றான் அவள் கரம் கோர்க்க..


கருத்துகள்