யாருமில்லா தனியாரங்கில் -2
அத்தியாயம் 2 வெற்றிலை கொடிக்கால்கள் வெள்ளாமைக்கு தயாராகிக் கொண்டிருந்த காவிரிக் கரையோரம் அமைந்துள்ள ஊர் பரமத்தி வேலூர். முட்டைக்கு புகழ் பெற்ற நாமக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் சிறு நகரம்.வாழை, பாக்கு, தென்னை, நெல், கோரை என செழித்து குலுங்கும் பூமி. அதி முக்கியமாய் இங்கு பேர் போன வாத்துக்கறி குழம்பும் இட்லியும் சப்பு கொட்டி சாப்பிட வைக்கும்..இப்பொழுதும் பல பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக உண்டு என்று நிறைய பேர் சொல்வதுண்டு. அதே போல் கல்வியிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் நாமக்கல். அதன் ஒரு புகழ் பெற்ற கல்லூரியின் உதவி பேராசிரியர் பணியிலிருப்பவன் அன்புச் செழியன்... அவனின் மாணவர்களுக்கு செழியன் சார். அங்கு அவனிடம் அன்பென்ற வார்த்தைக்கே ஆயிரம் சட்ட திட்டம் வைத்திருப்பான். அத்தனை கண்டிப்பும் கராறும் மிக்கவன். அவன் பாடம் நடத்தும் பாங்கும் குரலில் இருக்கும் கம்பீரமும் அனைத்து விஷயங்களிலும் அவனுக்கு இருக்கும் ஆளுமையும் யாரையும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச வைக்காது. அப்படிப்பட்டவன் முன் பம்மிக்கொண்டு நின்றிருந்தனர் பொழில் நிலாவும் அவள் வகுப்பு தோழன் அருணும்.. செழியன் வகுப்பு முடி...