யாருமில்லா தனியாரங்கில் -2
அத்தியாயம் 2
வெற்றிலை கொடிக்கால்கள் வெள்ளாமைக்கு தயாராகிக் கொண்டிருந்த காவிரிக் கரையோரம் அமைந்துள்ள ஊர் பரமத்தி வேலூர். முட்டைக்கு புகழ் பெற்ற நாமக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் சிறு நகரம்.வாழை, பாக்கு, தென்னை, நெல், கோரை என செழித்து குலுங்கும் பூமி.
அதி முக்கியமாய் இங்கு பேர் போன வாத்துக்கறி குழம்பும் இட்லியும் சப்பு கொட்டி சாப்பிட வைக்கும்..இப்பொழுதும் பல பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக உண்டு என்று நிறைய பேர் சொல்வதுண்டு.
அதே போல் கல்வியிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் நாமக்கல். அதன் ஒரு புகழ் பெற்ற கல்லூரியின் உதவி பேராசிரியர் பணியிலிருப்பவன் அன்புச் செழியன்... அவனின் மாணவர்களுக்கு செழியன் சார். அங்கு அவனிடம் அன்பென்ற வார்த்தைக்கே ஆயிரம் சட்ட திட்டம் வைத்திருப்பான்.
அத்தனை கண்டிப்பும் கராறும் மிக்கவன். அவன் பாடம் நடத்தும் பாங்கும் குரலில் இருக்கும் கம்பீரமும் அனைத்து விஷயங்களிலும் அவனுக்கு இருக்கும் ஆளுமையும் யாரையும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச வைக்காது.
அப்படிப்பட்டவன் முன் பம்மிக்கொண்டு நின்றிருந்தனர் பொழில் நிலாவும் அவள் வகுப்பு தோழன் அருணும்..
செழியன் வகுப்பு முடிந்து ஸ்டாப் ரூம் செல்லும் போது, காலியாக இருந்த அறையில் பேச்சுக் குரல் கேட்கிறதே என எட்டி பார்த்தவன், தரையில் அமர்ந்து இருவரும் ஏதோ எழுதி விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்ததும், வெளியே வர சொல்லி விசாரித்து கொண்டிருந்தான்.
“ம்ம் வாய தொறந்து சொல்லுங்க.. இப்படி ஆள் இல்லாத கிளாஸ் ரூம்ல ரெண்டு பேருக்கு மட்டும் என்ன வேலை..”என்று செழியன் அதட்ட,
“அது வந்து மாமா...”என்று ஆரம்பித்த நிலா அவன் பார்த்த உக்கிர பார்வையில் “சாரி சாரி சார்..”என்றாள் அந்த சாரில் அழுத்தம் குடுத்து.
“அது வந்து சார்....”நிலாவின் அருகிலிருந்த அருண் இழுக்க,
“என்ன வந்து..”செழியன் அதற்கும் அதட்ட,
“சார் “என விழித்தான் அருண்..
“இப்ப ரெண்டு பேரும் சொல்ல போறீங்களா இல்லை பிரின்சிபால் கிட்ட கூட்டிட்டு போகவா..”
“ஹய்யோ மாமா இவனுக்கு நான் அக்கௌன்ஸ் சொல்லி குடுத்துட்டு இருந்தேன். நெக்ஸ்ட் ஹவர் நம்ம ஹச் ஓ டி டெஸ்ட் குடுத்துருக்காரு அதான்..”என்று நிலா சொல்லவும் அருண் மானசீகமாய் மரத்தில் முட்டிக்கொண்டான்.
நிலாவை முறைத்த செழியன் “யாரு நீ.. இவனுக்கு சம் சொல்லிக் குடுத்த.. இத நான் நம்பனும்.. “என்று இழுத்தவன் “சரி வா அப்பிடி என்ன சம் சொல்லி குடுத்தன்னு பாக்குறேன்.”என்றுவிட்டு அவன் அவர்கள் வகுப்பறைக்குள் செல்ல,
“அடியே குரங்கு.. உனக்கு பொய் கூட ஒழுங்கா சொல்ல வராதாடி. உன் மாமன் நம்ம சட்னியாக்க போறாரு..”என்று அருண் நிலாவை திட்டிவிட்டு செழியன் பின்னே சென்றான்.
அருண் பின்னே ஓடி அவன் தோளில் அடித்தவள் “அடேய் அரிச்சந்திரனுக்கு ஆப்போசிட்டு, உனக்கு தான் வகை வகையா வாயில பொய் வருமே.. நாலஞ்ச எடுத்து விடறத விட்டுட்டு ஏன் வந்து போயின்னு ரயிலு விட்டுட்டு கிடந்த.
“ஹான் உன் மாமன் பனைமர ஹல்க்காட்டம் இருக்கார்.. அடிச்சி வச்சிருவரோன்னு பயமா இருக்கு..”
“சல்லிகாசுக்கு பிரயோசனமில்ல டா நீயி. வாயி மட்டும் வாசப்படி கணக்கா அடுக்கிட்டு போவும் “இவள் பேசி முடிக்கவும் இருவரையும் நோக்கி டஸ்டர் ஒன்று பறந்து வந்தது...அதை பார்த்த நிலா அவசரத்தில் அருணை பிடித்து தன் முன் இழுக்க அந்த டஸ்டர் அவன் தோளில் பட்டு கீழே விழுந்தது...
“ஆஆஆஆ கொலைகார கிறுக்கி.. என்னத்துக்குடி என்னை பிடிச்சு இழுத்த..”
“அது ஒரு பயத்துல..”
அவன் பீப் சவுண்டு வரும் வார்த்தையை சொல்ல வரும் முன்,
“ரெண்டு பேரும் வாய தொறந்தீங்க கொன்றுவேன்..பொழில் நிலா மேடம் நீங்க சொல்லி குடுத்த சம்ம வந்து போர்டுல எஸ்பிளைன் பண்ணுங்க..”என்றுவிட்டு முதல் பெஞ்சில் சட்டமாக அமர்ந்து கொண்டான்..
‘செத்தடி சிங்காரி..’மனதுக்குள் திட்டினான் செழியன்.
நிலாவோ கையை பிசைந்து கொண்டு நிற்க, அருகிலிருந்த அருண்,
“நிலா ப்ளீஸ்டி எதாவது சிம்பிள் சம்மா போர்டுல எழுதி எஸ்பிளைன் பண்ணிருடி..”என்று அவள் காதில் முனுமுனுத்தான்.
“இப்ப பாரு என் திறமையை..”அருனிடம் சொல்லிவிட்டு டேபிளில் இருந்த புத்தகத்தை எடுத்து அவள் பாட்டுக்கு சம்மை எழுதி விளக்கிக் கொண்டிருக்க, அருண் அவளிடம் ஏதோ ஜாடை மாடையாக சொல்லி பார்த்தான்.. அவளோ கன காரியமாக செழியனிடம் விவரித்துக் கொண்டிருந்தாள்..
அதைப் பார்த்து அருண் தலையிலடித்துக் கொள்ள, செழியனுக்கோ அவனின் இயல்பையும் மீறி சிரிப்பு வந்து தொலைத்தது.கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
நிலா எல்லாவற்றையும் விளக்கி முடித்து, அருணை பார்த்து எப்படி என்று கண்ணால் வினவ,
“ஜோலி முடிஞ்சுது..”என்று முனுமுனுத்தான்..
‘இவன் கிடைக்குறான் பைத்தியக்காரன்.. அதிசயமா அந்த சம் எவ்ளோ புரிஞ்சுருக்கு எனக்கு. அதிலும் இந்த சம்ம இன்னும் நம்ம ஹச் ஓ டி சொல்லி தர கூட இல்ல.. இவ்ளோ டேலண்ட் நமக்கு இருக்குன்னு இன்னைக்கு புரிஞ்சிருக்கும் இந்த பிஎம் க்கு ‘என்று தனக்குள் நினைத்துக்கொண்டவள் செழியனை நோக்கி,
“இப்ப நம்புறீங்களா சார்..”என்று கெத்தாக கேட்க எழுந்து வந்து அவள் தலையில் தட்டினான் செழியன்..
“ஒழுங்க மரியாதையா ஓடி போயிருங்க. இனி எங்கயாச்சும் தனியா சுத்திகிட்டு வம்பு பண்ணிக்கிட்டு அலையரத பார்த்தேன் பாவமே பார்க்காம நூறு தடவ இம்போஸ்ஸிஷன் குடுத்துருவேன்.. போய் கிரௌண்ட்ல புல்லு புடுங்குங்க உங்க கிளாஸ் கூட சேர்ந்து.. “என்று திட்டி விரட்டி விட்டான்..
வகுப்பை விட்டு வெளியே வந்த நிலா அருணிடம்,
“நான் தான் சம்ம சரியா போட்டுட்டேன்ல. பிறகு ஏன்டா பிஎம் என்னை அடிச்சாரு.”
அவளை மேலும் கீழும் பார்த்தவன், “எப்பிடிறி நீ எம்காம் வரைக்கும் வந்த?”என்று கேட்கவும் புரியாமல் நிலா புரியாமல் அவனை பார்க்க,
“மக்கு நிலவே நீ போட்டு காமிச்சது பிகாம் பர்ஸ்ட் செம்ல படிச்ச சம்ம..ஆனாலும் அந்த மொக்க சம்ம போட்டு முடிச்சு நீ குடுத்த பில்டப் இருக்கே, சத்தியமா ஒரு மாஸ்டர் பீசுடி.. அதிலும் மக்குக்கே மாஸ்டர் டி “என்று கிண்டல் செய்து விட்டு ஓடிவிட, அவனை அடிக்க முடியா எரிச்சலில் காலை உதைத்துக்கொண்டே அவன் பின்னால் சென்றாள் நிலா..
‘அசிங்கப்பட்டாள் நிலா ‘என்ற கேப்சனுடன் அருனின் வாட்ஸப் ஸ்டேட்டஸ் அனைவர்க்கும் பரவ ஆரம்பித்தது.
வகுப்பறையிலிருந்த செழியன் வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.. எப்பொழுதாவது வரும் அவனுடைய அரிய சிரிப்பை அவன் முன்னே அமர்ந்து கன்னத்தில் கை வைத்து பார்த்திருந்தாள் ஒரு பெண்.. ரோஜா நிற லாங் கவுன் அணிந்து அவனையே ரசித்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
சிரித்துக் கொண்டிருந்த செழியன் சட்டென எழுந்து நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவனின் கைகள் தானாக நெஞ்சை தடவியது. ஏதோ பழகிய வாசத்தை உணர்ந்தது போல விடைத்த மூக்கை நிரடினான்.. வகுப்பறையின் குறுக்கும் நெடுக்கும் எதையோ தேடுவது போல் நடந்தவன் இறுதியில் உணர்ந்த இயலாமையில் கைகளை மேஜையில் குத்தினான்.
“என்னை விட்டு போய்டு மீனம்மா.. உன்ன பாக்க முடியாம இப்படி உணறது வேதனையா இருக்குடி.. நீ எங்க எங்கன்னு தேடி அலையுதுடி மனசு.. நாலு வருசமா அனுபவிக்குறேன் மீனம்மா.. தாங்க முடியலடி..”அவன் தொய்ந்து பெஞ்சில் அமர்ந்தவன் முகத்தை மூடிக்கொண்டு டேபிளில் தலை வைத்து படுத்து விட்டான்.
அவன் அருகே வந்து நின்றாள் மீனா.. அவனையே வெறிக்க பார்த்திருந்தாள்..
“போ போ ன்னு சொன்னா நான் எப்படி செழியன் போக.. உன்ன விட்டுட்டு நம்ம ஆரும்மாவை விட்டுட்டு எங்கடா போவேன்..”என்று அழுகையில் கரைந்தவள் அவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தாள்..
வெறும் காற்றில் அவனுயிரை தேடி தோற்றுப் போன செழியன் கண்ணை துடைத்துக் கொண்டு அவளை தாண்டி வெளியே சென்றான். அவன் பின்னே காற்றில் மிதந்து சென்றாள் அவனின் மீனா.
தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக