யாருமில்லா தனியரங்கில் -1

 அத்தியாயம் 1



வெளிச்சப் புள்ளிகள் தீற்றுக் கீரலை விதைக்கத் துவங்கியிருந்த காலை நேரம். மஞ்சளும் ஆரஞ்சுமாய் ஆதவன் கிழக்கு வானில் கொலு வைக்க, எதிர்த்த வீட்டு கூண்டிற்குள் சிறகை படபடவென அடித்து வழமை அலாரத்தை தெருவெங்கும் சிதறடித்தது சேவல் ஒன்று.


நீண்டு விரிந்திரிந்த அந்த தெருவில் ஒரிரண்டு வீடுகளில் வெளிச்சங்கள் வீதியில் தெறிக்க, சலப் சலப்பென வாசல் தெளிக்கும் சத்தம் ஒருவித ரிதத்தை தந்தது மென்மொழிக்கு.


கலைந்திருந்த முடியை கொண்டையிட்டு, அணிந்திருந்த நைட்டியை சற்று எற்றி சொறிகிய பின் இரும்பு கேட்டை திறந்தவள், உள்ளிருந்த ஹோஸ் பைப்பை கொண்டு வாசலில் நீர் தெளித்தாள். முன்பெல்லாம் வாலியில் தெளிப்பது தான் வழக்கமென்றாலும், அதிக எடை தூக்க  வேண்டாமென டாக்டர் சொன்னதின் பேரில் இவள் வேலையை இலகுவாக்கிக் கொண்டது.


வாசல் தெளித்த பின் ஹோஸ் பைப்பை அருகிலிருந்த மகிழ மரத்தடியில் போட்டுவிட்டு உள்ளே சென்று பைப்பை மூடிவிட்டு வர, பக்கத்து வீட்டு வாசலில் அரவம் கேட்கவும் திரும்பி பார்த்தவள் அங்கு நின்றிருந்த தாமரையைப் பார்த்து சின்னதாய் சிரித்து வைத்தாள்.


பதிலுக்கு அவரோ முறைத்து வைத்தார். மென்மொழி அதை கண்டு கொள்ளவில்லை. வாசலை பெருக்க ஆரம்பித்தாள்.


“உங்க அம்மா எங்கடி போனா. பொழுதன்னைக்கும் உன்ன வேலை செய்ய வச்சுட்டு? “ஆதங்கமாய் கேள்வி வந்தது தாமரையிடமிருந்து.


“அத்தை.. “கொஞ்சம் அழுத்தமாய் ஒரு மறுப்பு அவளிடம். தாமரைக்கு அவளைப் புரியும். ஆனாலும் மென்மொழியின் அம்மா ரேவதி மேல் கோவம் தான். பிள்ளைத்தாச்சி பிள்ளையை வேலை செய்ய விடுகிறாளே என்று.


வேகமாய் மென்மொழியிடம் சென்றவர் அவள் கையிலிருந்த துடைப்பத்தை வாங்கி சரசரவென பெருக்க ஆரம்பித்தார்.


“ரெண்டு நிமிஷம் பெருக்கிப்புட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிற. புறவு ஏண்டி புடிவாதம் புடிக்குற. உங்க வீட்லயுந்தான் ஏன் தான் இப்படி உன் பேச்சுக்கு ஆடுறாங்கன்னு தெரியல. நீ உஞ் சொன்னா ஆமா சாமி போடுறாங்க.. “என்று பேசிக்கொண்டே சென்றவர் தன் வீட்டு வாசலில் பெருக்கும் சத்தம் கேட்கவும் தான் நிமிர்ந்து பார்த்தார்.


மென்மொழி தான் பெருக்கிக் கொண்டிருந்தாள்.


“அடங்கவே மாட்டியாடி “கோவமாக முறைக்க 


“பச்” என கண்ணை சிமிட்டினாள்..


அவளின் அந்த நிமிட அழகில் அத்தனை ஆயாசம் வந்து ஒட்டிக்கொண்டது தாமரையிடத்தில்.


அவளின் அருகே சென்று அவளின் முகத்தை வருடிக் கொடுத்தவர், “அத்தை சொல்றேன் கேளுடி. இப்படியே எத்தனை நாளைக்குத் தான்…”அவரின் வாயை மூடியவள்,


“வேண்டாம்த்தை…இந்த வார்த்தை கெட்டு சலிச்சுருச்சு. மீண்டும் மீண்டும் இதை பத்தியே கேட்க எனக்கு ஒரு மாதிரி பாரமா பீல் ஆகுது. என்னை என் போக்குல விடுங்களேன்.. “


அவளின் கையை தட்டி விட்ட தாமரை, “உன் மாமனும் இதே புராணம் தான் அஞ்சு வருசமா பாடுறான்.. ஆனா எங்க மனச புரிஞ்சுக்க முயற்சி பண்ண மாட்டிங்கறீங்க நீங்க. ரெண்டு குடும்பமும் ஒடஞ்சி கிடக்கோம்டி.”கண்ணை துடைத்துக் கொண்டார்.அவரை அணைத்துக் கொண்டவள்,


“மாமா பாவம்த்தை.. ரெண்டு மாசம் வாழ்ந்த எனக்கே இவ்வளவு வலிக்குதே கல்யாணம் ரெண்டு வருஷம் காதல் ஏழு வருஷம்ன்னு ஒண்ணுமன்னா இருந்தவங்களுக்கு எவ்ளோ வலிக்கும்... “


“யாரு இல்லைனு சொன்னாங்க.. ஆனா அதுக்காக அந்த வலிய காலம் முச்சூடும் அனுபவிக்கனும்னு என்னடி விதி..”என்று அவர் ஆற்றமையுடன் புலம்ப அவரின் கையை பிடித்துக்கொண்ட மொழி,


“அத்தை யாரும் எதையும் வம்படியா சுமக்கறது இல்ல.. அதோட நாளைக்கு இது இப்படி தான் இருக்கும்னு நாம குறிச்சும் வைக்க முடியாது. அத அத அது போக்குலயே விட்டுருங்க அத்தை.” என்று அவள் பேசிகொண்டிருக்கும் போது,


“நல்லா சொல்லுக்கா.. மனசனுக்கு ரசிக்கவும் நேசிக்கவும் வெறுக்கவும் வெம்பவும் நிறைய விஷயங்க வந்து போய்ட்டு தான் இருக்கும்.. அதுவும் அதுவா கடந்தும் போய்டும்.. இப்படி அழுது புலம்பி மாமாவை சங்கடபட வைக்குறத விட்டுட்டு கொஞ்சம் பேசி சிரிச்சு அவரையும் சிரிக்க வைங்க..”என்று போற போக்கில் தாமரையிடம் சொல்லியவள் பேச்சு வாக்கில் மென்மொழியிடமிருந்து துடைப்பத்தை வாங்கி தன்னைப் போல பெருக்க ஆரம்பித்தாள் பொழில் நிலா.


“நா என்னடி வேணும்னே...”என்று ஆரம்பித்த தாமரையை தடுத்த மொழி “அவ சொல்றது சரிதான் அத்தை.. விடிஞ்சி வெளிச்சம் வர ஆரம்பிச்சிருச்சு.. அவ கூட்டி முடிச்சுட்டு கோலம் போட்ருவா.. நீங்க உள்ள போய் சமையல் வேலைய கவனிங்க. அபி கடைக்கு கிளம்பிருவான்..”என்று அவரை அனுப்பி வைத்த மொழி தங்கள் வீட்டு வாசலிலும் சின்னதாய் ரங்கோலியை போட ஆரம்பித்தாள்..


அவள் போட்டு முடித்து பக்கத்து வாசலை பார்க்க பெரிய ரங்கோலியை போட்டு நிமிர்ந்த நிலா “நானும் முடிச்சுட்டேன்க்கா “என்று விட்டு தாமரை வீட்டு மாடியை பார்த்து,


“டேய் நெட்டமன்னா குட் மார்னிங்..”என்று கத்தவும் மொழியும் சிரிப்புடன் மேல பார்த்தாள்..


அதுவரை அவனை சுற்றி இருந்த மாயத்திரை விலகியது போல் திடுக்கிட்ட அபிமன்யு தன்னை சுதாரித்தவனய் “குட் மார்னிங் குட்டமூன் “என்று அவளை பார்த்து கையசைத்து விட்டு கீழிறங்கி வந்தான்.


அவனுக்கு மொழியின் அருகில் வர வர இதய துடிப்பு அதிகமாவது போல் தோன்றியது.


அவனின் சின்னஞ்சிரு வயதின் ஆதியிலிருந்தே பார்த்து வளர்ந்த மொழியிடம் இவனுக்கு சமீப காலமாய் புது உணர்வொன்று தோன்ற ஆரம்பித்திருந்தது... அதை பாசம் பரிதாபம் என்று முயன்று தள்ளித்தான் வைக்கின்றான். ஆனால் மலர்ந்த மலர் சட்டென பரப்பும் அந்த வாசத்தை போல அவனின் பூ மனம் மலர்ந்து மென்மொழியை தேடிச் செல்வதை தடுக்கவே முடியவில்லை..


செங்கதிரோனின் செம்மையை முகத்தில் தாங்கிக் கொண்டிருக்கும் மொழியின் வதனம் அபிமன்யூவை மந்திரித்து விட்டது..


“குட் மார்னிங் அபி பையா..”என்று புன்னகைத்த மொழியை நெருங்கி அவள் கைப்பற்ற போக சட்டென வீசிய காற்று அவன் கண்ணில் தூசியை தூவி செல்ல தடுமாறினான் அபிமன்யு..


“டேய் என்னாச்சு...”என்று நிலாவும்


“அபி கண்ணை தேய்க்காத..”என்று மொழியும் ஒரு சேர சொல்ல,


அபிக்கு அவன் மேலயே வந்த கோவத்தில் கண்களை வலிக்கும் படியாக துடைத்தான்.


‘இந்த கண்ணு தான என் மெய்மாவை தப்பா பாக்குது.. ஒழிஞ்சு போகட்டும்.’என்று தனக்கு தானே தண்டனை குடுத்துக் கொள்ள, அவன் தலையில் வலிக்க கொட்டினாள் நிலா..


“அறிவு கெட்ட எரும.. கண்ணை தேய்க்காதன்னா உரைக்காதா உனக்கு..”என்று திட்டிய நிலா அவன் கையை கண்ணிலிருந்து வெடுக்கென தட்டி விட்டவள் அவன் கண்ணில் ஊதி தூசியை அகற்ற முயற்சி செய்தாள்.


“அடியே ஊதி என் கண்ணை உள்ள தள்ளிராத “என்று அலறியவனை நிலா கண்டு கொண்டால் தானே..


“பாத்துடி உன் பல்லு விளக்காத வாயில இருந்து ஊதி அவன் கண்ணனுக்கு ஏதாச்சும் ஆயிட போவுது..”என்று சொல்லி சிரித்தவாறே மொழி உள்ளே செல்ல,


 “அய்ய ச்சி..” என்று நிலாவை தள்ளிவிட்டான்..


அதில் விழுந்த நிலா எழுந்து “டேய் உன்ன அடி நொறுக்க போறேன் பாரு..”என்று துரத்த ஆரம்பித்தாள்.


இவர்கள் அடிதடிக்கு சற்று தள்ளி இருந்த மகிழ மரத்தின் பூக்கள் நடந்து கொண்டிருந்த மென்மொழியின் மீதி விழ, அவள் அந்த மரத்தை அண்ணாந்து பார்த்தாள்..


அதன் வாசனை அவள் மனதில் பழைய நினைவைக் கிளற இமையோரம் துளிர்ந்த நீரை துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


அவள் கால் மிதியில் கிடந்த பூக்கள் சட்டென சேர்ந்து அருவ உருவம் பெற்று போகும் மென்மொழியை பார்த்தவாறே கீழே விழுந்தன.. அவைகளில் ஈரம் ஒட்டிக் கிடந்தது..


மீண்டும் ஆவேசமாய் சேர்ந்த பூக்கள் நிலாவுடன் இருந்த அபியை நோக்கி சென்றது.. அவன் அருகில் செல்ல செல்ல பூக்கள் கீழே விழுந்து அந்த அருவ உருவம் அபியின் கழுத்தை நெருக்குவது போல் அவனருகில் சென்று விலகியது.


“அவளை காயப்படுத்தினால் உன்ன கொன்னுடுவேன் அபிமன்யு..”என்ற அசரீரியாய் ஒரு குரல் அபிமன்யுயூவின் காதில் விழவும் திகைத்துப் போனான்..



கருத்துகள்