யாருமில்லா தனியரங்கில் -10


அத்தியாயம் -10

சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவர் அருகில் வளர்ந்திருந்த ஒரு அடர்ந்த மரத்தினடியில் கிடந்த இருக்கையில் வந்தமர்ந்தான் அபிமன்யு. அவன் எண்ணங்கள் பயணித்த திசைகளில் ஆர அமர வேடிக்கை பார்த்திட தனிமை தேடியலைந்தது அவனுள்ளம்.

மனைவி என்ற பதமே மந்திரப்பந்தாய் மொழியொருத்தியையே சுற்றி வந்தது. நிலாவும் அருணும் பேசிய கணத்திலேயே அவன் எண்ணச் சிதறல்கள் மொழியை மையப்படுத்தி கற்பனைங்களுக்கு வண்ணம் தீட்டி பேசிய வார்த்தைகளை சித்திரங்களாக்கி ரசித்து விட்டிருந்தது க்ஷண பொழுதுக்குள்.

'அவள் வினோத்தின் மென்மொழி' என்ற வார்த்தைகள் காற்றில் ரீங்காரமிட்டுச் செல்ல விரக்தியின் முத்தாய்ப்பாய் அவன் வார்த்தைகளை விட்டுவிட்டு வந்துவிட்டான் அவர்களிடமிருந்து.

இரு கைகளாலும் முகம் மூடி அமர்ந்திருந்தவன் அருகில் வந்தமர்ந்தாள் மொழி. அவளின் அருகாமை சிணுங்கல்கள் அவனுக்கு எப்பொழுதுமே அக்கினி பிரவேசம் தான்.உள்ளத்தின் தளர்வுகள் உடலிலும் வந்து விடுமோ என அஞ்சியே இறுக்கிக் கொண்டான் இதயத்தை.

அவன் இதயத்தை நொறுக்கிச் செல்லும் சோதனையாய் அவன் தோள் மீது ஆதரவாய் கரம் பதித்தாள் மொழி.

"இதென்ன அபி இவ்வளவு சின்ன விசயத்துக்கு இப்படி கோவப்பட்டுட்டு இங்க வந்து உக்காந்திருக்க "என்று அக்கறையும் கடிதலுமாய் அவள் கேட்க,அவனோ தோள் படிந்த கரங்களின் வெம்மை தாளாமல் எழுந்துவன் அருகிலிருந்த மரத்தில் சாய்ந்தவாறு நின்று கொண்டு,

"கோவமெல்லாம் இல்ல மெய்மா."என்றான். அவன் பார்வை மொழியின் முகத்தில் படராமல் தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீதிருந்தது.ஆனால் மொழியின் பார்வையோ கூர்மையாய் அவன் முகத்தில் படிந்திருந்தது.

"எந்த விஷயம் உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்துதோ அதை மறந்திடு மனு "என்றாள் ஆழ் குரலில். அதில் அவன் திடுக்கிட்டு மொழியைப் பார்த்தான்.

இம்முறை மொழி அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள். தன் இரு கரங்களையும் அமர்ந்திருந்த பெஞ்சில் அழுந்த ஊன்றியவள் பார்வையோ நிலத்தை தழுவியிருந்தது.

"இரண்டு வருசத்துக்கு முன்னாடி நீ எதுக்காக இங்க இருந்து போனியோ அந்த விஷயத்தை மறந்திடு மனு. அன்னைக்கு நடந்த விஷயங்கள் உன்ன மீறி நடந்தது. வினோத்தோட இதயம் உனக்குள்ள இருக்குறதால ஏற்பட்ட மன பதிப்பு. இத்தனை வருஷங்கள் என் கூட இருக்க உன்னையும் எனக்கு தெரியும், சில நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தாலும் என்னை நேசிச்ச வினோத் பத்தியும் எனக்கு தெரியும்.நடந்த விஷயங்களால உன்ன நீயே குழப்பிக்காத மனு.இதயம் ஒரு உறுப்பு தான். அது வினோத்தோட மனசு கிடையாது. நீ வினோத்தா மாறவும் அவசியம் கிடையாது. அப்படி மாறி நடக்கும் போது தான் ரொம்பவே கஷ்டமா இருக்கு மனு."என்ற மொழியின் இறுதி வார்த்தைகள் வலியில் தொய்ந்து வரவே கலங்கிப் போனான் அபிமன்யு.

அவன் மட்டுமல்ல மொழியின் அருகில் அருவமாய் அமர்ந்திருந்த வினோத்தும் தான். அளவு கடந்த நேசத்தை அவள் மீது பதித்து அவளுடனான காலங்களில் திளைத்து வாழ்ந்து கிடந்தவன் திடீரென கால் நழுவி அதல பாதாளத்தில் விழுவான் என கனவா கண்டான்.

அன்று அவனுடைய சின்னஞ்சிரு தவறு அவனின் உயிரைப் பறித்து உயிரானவளின் வாழ்க்கையை வஞ்சித்து நிம்மதியிழந்த நிலையில் அவளுடனே காற்றைப் போல சுற்றிக் கொண்டிருக்கிறான். அதையும் மீறி அபியின் இந்த முரண்பாடான நேசம் எங்கு தன்னவளை நோகடித்து விடுமோ என அஞ்சியே உயிர் நண்பனே ஆனாலும் அவனை பயமுறுத்தி அவளை விட்டு ஓட வைத்தான்.

ஆனால் அந்த செயல் ஏனோ போதை பழக்கத்தின் அடிமைத் தனத்தை அவனுள் புகுத்திவிட்டிருந்தது. அபியின் மூலம் தன்னவளோடு மீண்டும் இணைந்திட பிரயாசைப் பட்டது அவனது இறந்த மனது. ஆனால் அதனால் அவன் உயிர் நண்பன் அனுபவிக்கும் உயிர் வதையையும் வினோத்தால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. ஆசைக்கும் நட்புக்கும் அல்லாடிக் கொண்டிருந்த அவனது ஆன்மா தன்னவளின் வார்த்தைகளில் ஜீவனிழந்தது. அவளின் மன இடுக்குகளில் அபியின் வாசம் தன் செயலாலேயே நிறைந்திருப்பதை உணர முடிந்த கணம் அவனறியா பெருமூச்சு கிளம்பியது. இருவரையும் தனித்து விட்டுவிட்டு அங்கிருந்து அகன்றது.

மொழியின் பேச்சில் திகைப்பை தழுவியிருந்த அபி மெல்ல மீண்டு அவளருகில் வந்தமர்ந்தான். பெஞ்சிலிருந்த அவள் கரத்தின் மீது தன் கையை வைத்தான்.

"சாரி மெய்மா "என்று மெல்ல முனுமுனுக்க, அவன் முகம் பார்த்தவள்,

"நீ எதுக்கு சாரி சொல்ற "என்று முறைத்தாள்.

"சொல்லணும்னு தோணிச்சு "என்க,

"நீ திருந்த மாட்டா "என்று அவள் திட்டவும், தோள் குலுக்கினான்.

"டேய் அபி நாங்க சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கெல்லாம் இப்படியா கோவிச்சுட்டு வருவ "என்று அவன் பின்னிருந்தவாறு முதுகில் அடித்தாள் நிலா.

"ஹே யாரு கோவிச்சுட்டு வந்தது. அந்த மீனு கேவலமா இருக்கு. அதான் தப்பிச்சு இங்க வந்துட்டேன்"

"நீ சொல்ற சமாளிப்பு ரொம்ப கேவலமா இருக்கு."என்றவள் அவனை இடித்துக் கொண்டு அருகில் அமர நிலவுக்கு அருகில் அருண் அமர்ந்தான். இவர்களைப் பார்த்திருந்த நிவனும் ஆரலியும் அமர பெஞ்சில் இடமின்றி அபி மீது ஏறினர்.

மொழி எழுந்து நிவனைத் தூக்கி அபியின் கழுத்தை சுற்றி அமர வைத்து பிடிக்க, அவனோ அபியின் முடியை பிடித்திழுத்து சிரித்தான்.

"அடேய் அடேய் என்கிட்ட உருப்படியா இருக்கறதே அந்த நாலு முடி தான். நாளைக்கு உன் சித்தப்பன சொட்டைன்னு சொல்லி யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க " என்று அபி கத்திட,

"விட்றா விட்றா.. நீ முழு வழுக்கையாவே ஆனாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன் "என்று நிலா விளையாட்டு போல சொல்லி அபி, மொழி இருவரையும் ஆழம் பார்க்க அவள் நினைத்தது போலேயே இருவரின் முகமும் நிமிட நேரத்தில் சுருங்கிப் போனது. அதை கவனித்தவள் மனதில் மென் முடிச்சுகள் விழ வீட்டினரின் அரசல் புரசல் பேச்சுக்கள் வேறு மனதில் வந்து போனது. அதில்,

'கத்திரிக்கா முத்தி கட தெருவுக்கு வரப் போவுது 'என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த யோசனையில் இருந்தவளை அருண் பிடித்திழுக்க,

"எதுக்குடா இழுக்குற?"என்று சொல்லிக் கொண்டே அவள் இழுப்பிற்கு ஏற்ப நகர்ந்தாள். அதில் அபிமன்யுவிற்கும் நிலாவிற்கும் ஏற்பட்ட இடைவெளியில் வந்து அமர்ந்து கொண்டான் அருண்.அதைக் கண்ட நிலா 

"அடச்சீ அல்ப "என்று தலையிலடித்துக் கொண்டாள்.அதை கண்டு கொள்ளாதவன்,

"இங்க பாருங்க அபி அண்ணா நாங்க ஆல்ரெடி டைட்டில் ரிசர்வ் பண்ணி வச்சுட்டேன் "என்று அபியிடம் சொல்ல மூவரும் புரியாமல் பார்த்தனர்.

"அது வந்து…நான் தான் இவளைக் கல்யாணம் செஞ்சுப்பேன் "என்று போலியாய் வெட்கப் பட்டுக் கொண்டே அருண் சொல்லவும்,

"ஆயுளுக்கும் அடிச்சே சாவடிச்சுடுவாடா "என்று கிண்டல் செய்தான் அபி.

"அதுவரைக்கும் இவன உயிரோட விட்டாத் தான"என்றவள் அருகிலமர்ந்திருந்த அருணின் கழுத்தை நெறிக்க,

"செத்தாலும் உன் காலடியிலேயே மரணம் "என்று வசனம் பேசியவனை,

"சாவுடா "என்று கீழே தள்ளி விட்டாள் நிலா.

"பசங்க முன்னாடி ஒழுங்கா பேசுங்க "என்று மொழி இவர்களை கடியவும் ,

" இவள் ஒரு சீரியஸ் சின்றல்லா அருணு. டேய் பசங்களா வாங்க நாம ரவுண்டு ஊஞ்சல் போய் விளையாடலாம் "என்ற நிலா நிவனை தூக்கிக் கொண்டு செல்ல அருணும் ஆரலியும் அவள் பின்னால் சென்றனர்.

"இவளுக்கு எல்லாத்துலயும் விளையாட்டு அபி."என்று சலித்துக் கொண்டாள் மொழி.

"ஹ்ம்ம் அவ எப்பவுமே அப்பிடித் தான"என்றவாறு அபியும் எழுந்து கொள்ள இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.

"நீயும் அவளும் லவ் பண்றீங்களா அபி "என்று மொழி கேட்கவும் சிரித்தவன்,

"எங்களைப் பார்த்தா அப்பிடியா இருக்கு. காதல் வந்தா நிறைய கள்ளத்தனம் இருக்கும் மெய்மா. ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்காத வரைக்கும் அவங்கள நேரா பார்க்க கூட தயக்கமா இருக்கும். முன்ன மாதிரி பேச பழக எதிலுமே இயல்பா இருக்க முடியாது.எனக்கு தெரிஞ்சி நிலா கிட்ட அது மாதிரி நான் தயங்கி நின்னதில்லயே. அவ என்னோட ரொம்ப ரொம்ப பெஸ்ட் பிரண்ட். அது பியூர் நட்பு மட்டும் தான்."என்று அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.

"அப்போ வேற யாராவது இருக்காங்களா?"என்று மொழி கேட்டதில் நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

'இதற்கு உன்னிடம் எந்த காலத்திலும் என்னால் பதில் சொல்ல முடியாது 'என்று மனதில் வேதனை கொண்டவன்,

"நான் உன்னையும் நிலாவையும் தவிர யாரையும் நெருக்கமா நினைச்சதும் இல்ல. பழகியதும் இல்ல. பிறகெப்படி காதல் எல்லாம். ஸ்கூல் காலேஜ் போகும் போது தரமா சைட்டடிச்சுருக்கேன். அவ்ளோதான் நம்ம திறமை எல்லாம் "

மிக சமாளிப்பாய் பதில் சொன்னவன் அங்கிருந்து வேக எட்டில் நிலா அருணுடன் சென்று விட இனம் புரியாது நிம்மதி இதம் பரப்பியதில் அவளும் சந்தோசமாகவே அவர்களோடு இணைந்து கொண்டாள்.

அந்த இரு புற ஊஞ்சலில் ஒரு புறம் நிலா ஆரலி இருக்க மறுபுறம் அபி நிவனை பிடித்தவாறு அமர்ந்திருந்தான்.மொழி சென்று அபியருகில் அமர்ந்து கொண்டாள். அருண் ஊஞ்சலை மெதுவாய் ஆட்டிவிட ஆரம்பித்தான்.அதில் கடுப்பான நிலா,

"டேய் சொங்கி மாறி தள்ளாம வேகமா ஆட்டு "என்று கத்தவும் வேகமாய் ஆட்ட ஆரம்பிக்க ஊஞ்சலோ பிறை நிலவின் வடிவாய் ஆட ஆரம்பித்தது. அருண் வேகமாய் ஆட்டியதில் பயத்தின் வேகத்தில் அபியின் சட்டையைப் பற்றி அவன் தோளில் முகத்தைப் புதைத்திருந்தாள் மொழி.

பெண்மையின் ஸ்பரிசங்கள் ஆணவன் ஹிருதயத்தின் சுவாசங்களில் ஏற்றங்களை அதிகரித்திட இறுக்கங்களின் இசைவுகள் தளர்ந்தன.

முகம் தவிழும் குழல் கற்றைகள் அவன் செங்குறுதி சிலிர்க்க செய்ய

'இப்படியே செத்துடுவேன் போல மெய்மா 'தன்னோடு சொல்லிக் கொண்டான்.

விலகி நிற்கும் உணர்வுகளை
வீணை வாசிக்கச் சொல்கிறதடி
உன் கருங்குழல்!

தள்ளி வைத்த
சிறுங்காரங்களுக்கு
சிற்பம் வடிக்கிறதடி
உன் கரம்!

எட்டி நில்லடி
எச்சரிக்கின்றேன்.
நான் சில்லு சில்லாய்
உடைந்து போகாமலிருக்க! 









கருத்துகள்