யாருமில்லா தனியரங்கில் -3

 அத்தியாயம் 3

வெயில் மண்டையை பிளந்தது அபிமன்யுவிற்கு. தங்கள் உணவகத்தின் பின் பகுதியில் அந்த வாரத்திற்கான மளிகை சாமான்கள் இறங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..

“தம்பி கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வரியா.. உங்க அப்பத்தா வெத்தல தீந்திருச்சுன்னு காலைலயே சொல்லி விட்டுச்சு.. மதியம் சாப்பிட போகும்போது கொடுக்கலாம்னு வச்சிருந்தேன். அதுக்குள்ள வேற வேல வந்துருச்சு. ஒரு எட்டு போய் குடுத்துட்டு வந்துடுயா.. இல்லைனா ராத்திரிக்கு ஒரு மூச்சு பாடி தீத்திரும்..”

“வரவர பொண்ணாத்தாக்கு ஓவர் வாய் ஆகிப் போச்சுப்பா.. இதுக்கொசரம் நான் வெய்யில்ல அலையனுமா..”

“வயசானவங்க தம்பி.. ஏதோ முடியாத வேலைக்கு நம்ம கிட்ட கேக்குது.. நீ நம்ம கார்லயே போய்ட்டு வந்துடுயா “என்று ராகவன் சொல்லவும்,

“சரி சரி குடுங்கப்பா.. நான் போய்ட்டு வரேன் “என்றவன் அவரிடம் வெத்தலையை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான்.

“இந்தா தாமர தம்பிக்கு ஒரு போனு போட்டு கேளு.. மத்தியானம் வீட்டுக்கு வரேன்னு சொன்னவன இன்னும் காணோம்..இந்த வெத்தலைய போடாம வாயெல்லாம் சவசவன்னு கிடக்கு.. ஊரே சுத்தரானுவ, இந்த கிழவிக்கு கொண்டாந்து குடுக்க மட்டும் நேரம் ஒய மாட்டாம கிடக்கு..”வழக்கம் போல ஆரம்பித்த தன் மாமியாரை கண்டும் காணாமல் செழியனின் மகள் ஆரலியை அழைத்து வர பள்ளிக்கு புறப்பட்டார்..அப்போது அங்கு வந்து சேர்ந்தான் அபிமன்யு.

“ஏத்தா ஒரு நாளு வெத்தலை போடாம இருந்தா உன் வாயிக்கு பொறுக்காதா.இந்தா உன் வெத்தல.இத போட்டு அங்கங்க துப்பி வைக்குறத பார்த்தேன் அவ்வளவு தான்..”என்று மிரட்டியவாரே அவரிடம் பையை குடுத்தான் அபிமன்யு..

அப்போது “தாமரக்கா! பாப்பாவ கூட்டிட்டு வர கிளம்பிட்டியா..”என்றவாறு வந்தார் ரேவதி.

“ஆமா ரேவதி.. இப்ப போன தான் சரியா இருக்கும். ஏன் வரும்போது எதாவது வாங்கிட்டு வரணுமா..”

“இல்லக்கா.. போஸ்ட் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வரணும்.. மொழி தனியா இருக்கா. அதான் கொஞ்சம் பார்த்துக்க சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.”

“அம்மா! அப்ப நீங்க மெய்மா கூட இருங்க. நான் அத்தைய கொண்டு போய் விட்டுட்டு அப்பிடியே ஆருவ கூட்டிட்டு வரேன்.”என்ற அபிமன்யு கார் சாவியை எடுக்க,

“இல்ல அபி நீயே இப்ப தான் வந்த. திரும்ப ஏன் அலையனும். நான் ரேவதிய கூட்டிட்டு போய்ட்டு வரேன். நீ போய் கொஞ்ச நேரம் மொழி கூட இரு.”என்றுவிட்டு அவன் பதிலை எதிர் பாராமல் ஸ்கூட்டயை இயக்கி, ரேவதியை எற்றிக் கொண்டு சென்றுவிட்டார்.

“இப்படி கோர்த்து வீட்டுடீங்களே மா..”என்று நொந்தவன் அப்பத்தாவைப் பார்த்தான்.

“அப்பத்தா நீ போய் மொழி கூட இருக்கியா.. எனக்கு வெயில்ல அலஞ்சது கச கசன்னு இருக்கு..”என்று இல்லாத வேர்வையை துடைத்துக் கொண்டான்.

“எனக்கு காலல்லாம் நோவுதுய்யா..எட்டு வைக்க முடியல “என்றவாறு காலை பிடித்துக்கொள்ள,

“ஊரு நாயம் பேச வீடு வீடா திரிஞ்சா இப்படித்தான்..”என்று திட்டிவிட்டு வேறு வழியின்றி மொழியின் வீட்டிற்கு சென்றான்.

வரவேற்பரையில் சோபாவில் அமர்ந்து டீபாயின் மீது கால் வைத்து அமர்ந்தவாறு கண்மூடி சாய்ந்திருந்தாள் மென்மொழி. டிவியில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

தான் வந்ததற்கு அடையாளமாய் கதவை தட்டினான் அபிமன்யு.கண்ணை திறந்து அபியை பார்த்தவள்,

“ஹே வாடா.. உக்காரு.. என்ன அம்மா உன்கிட்ட பாடிகார்ட் வேலைய குடுத்திட்டு போய்ட்டாங்களா..”என்று கேட்டு சிரிக்கவும், ஆமென்பதாய் தலையசைத்தவன் அவளுக்கு அருகில் இருந்த தனி சோபாவில் அமர்ந்து கொண்டான்.

“கடைல மாமா இருக்காங்களா?”என்று மொழி கேட்க,

“ம்ம் “என்றான்.

அவனின் களைத்த தோற்றத்தை பார்த்தவள் “இருடா வரேன் “என்றவாறு சிரம பட்டு எழ,

“ஹே எதாவது வேணுமா.நீ உக்காரு நான் கொண்டு வந்து தரேன்.”என்று எழுந்து நின்றான்.

“அதெல்லாம் இல்லடா. ஜுஸ் தான் கொண்டு வரேன்..”

“இல்ல வேண்டாம் மெய்மா. நீ சிரம படாத. உக்காரு மொதல்ல.”

“இதுலென்ன சிரமம்.. சீன் போடாம உக்காருடா..”என்று அவனை அதட்டிவிட்டு எழுந்து சமையலறை சென்றவள் ஃபிரிட்ஜ்ஜிலிருந்த ஆரஞ்சு ஜுசை டம்ளரில் ஊற்றிக் கொண்டு வந்து அவனிடம் குடுத்தாள்.

அதை வாங்கிய அபி “நீ குடிக்கலையா..”என்க,

“இப்ப தான்டா குடிச்சேன். நீ குடி “ என்றுவிட்டு ஆசுவாசமாய் இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் நெற்றியில் அள்ளித் தெளித்த தீர்த்த நீராய் வியர்வை முத்துகள் முகாமிட்டுருந்ததை இவன் பார்வை அலைப்புறுதலுடன் பதட்டத்துடன் வருடியது. ஜூசை குடிக்கும் சாக்கில் சிந்தனையை திசை திருப்பினான். அவன் ஓடித்திரிந்த வீட்டை புதுசாய் பார்ப்பது போல் பார்த்து வைத்து நேரத்தை கடத்தினான்.

அடம்பிடித்து அழும் குழந்தையாய் அவன் மனதை கெஞ்சி கூத்தாடிய விழிப்பாவைகள் மென்மொழியிடமே சென்றது. அப்போது தான் அவளின் செல்ல வாரிசு அசைந்தான் போல. மென்மொழி வயிற்றை மெதுவாய் வருட, அபியின் பார்வையும் தன்னாலே கீழிறங்கியது.

அவனுக்கும் குழந்தையின் அசைவை உணர பேராசையாய் இருந்தது. அவனறியாமலே அந்த குழந்தை மீதான உரிமையுணர்வு மெல்லிதாய் துளிர்விட்டிருந்தது.

இருக்கையிலிருந்து எழுந்தவன் மொழியினருகில் சென்று அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்.அவனின் இந்த செயலை வியப்பாய் பார்த்தவள்,

“என்னாச்சுடா, ஏன் இப்படி இங்க உக்காந்திருக்க?” என்று கேட்டவளை ஏக்கமாய் பார்த்தான்.

அவன் பார்வையின் பொருள் பிடிபடாமல் கேள்வியாய் அவனை நோக்கினாள்.

“மெய்மா நான் ....”மிக தயக்கமாய் இடைவெளிவிட்டவன் “பேபியை தொட்டு பார்க்கவா” என்று கேட்டு விட்டு அவள் முகத்தையே பார்த்தான்.

திகைத்துப்போனாள் மென்மொழி. என்ன விதமான கோரிக்கையிது. அவள் மனது ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் முதல்முறையாய் அபியிடம் ஒரு சங்கட நிலையை உணர்ந்தாள்.

அபிமன்யு மொழியை விட ஒரு வயது இளையவன். தம்பியென்ற உறவு முறை எண்ணமெல்லாம் அவளிடம் கிடையாது. அபி அவளின் நண்பன்.சிறு வயதிலிருந்து அடித்து பிடித்து விளையாடியவர்கள். ஆனால் கொஞ்சம் பெரியவர்கள் ஆன பின்னே அனாவசிய தொடுதல்கள் நிகழ்ந்ததில்லை இவர்களுள். நிலாவும் அபியும் தான் சகஜமின்றி அடித்து பேசி அன்பும் வம்புமான தொடுகைகளுடன் இருப்பவர்கள்.

அவன் இதே கேள்வியை நிலாவிடம் கேட்பானா என்பதை விட அப்படி ஒரு அனுமதியே அவர்களுக்குள் இருந்ததில்லை. இது மென்மொழியாக இருக்கவும் தான் அவன் இவளின் சம்மதத்திற்காக காத்திருக்கிறான்.

மென்மொழி சிறிது நேர யோசனைக்குப் பின் அவனைப்பார்த்து மெல்லிய தலையாட்டலுடன் அனுமதியளிக்க, மெலிதாய் நடுங்கும் விரல்களை பட்டும்படாதவாறு அவளின் வயிற்றில் வைத்தான்.

சில்லென்ற பூக்காட்டு மலரொன்று இவன் மனதை தழுவியது. நெஞ்சமது வேகமாய் துடித்தது. நெற்றியிலும் மேலுதட்டிலும் வியர்வை அரும்பியது. அவனில் பொங்கி பெருகிய உவகையுள்ளம் தணியாத வகையில் உள்ளிருந்த சிசுவின் மெல்லி அசைதலை அவன் விரல்கள் உணர்ந்த நொடி, இதயத்தில் சுளீரென்ற வலிதாக்கியது.

அவன் கண்கள் ஒருமுறை அழுத்தமாய் மூடித் திறக்க, இப்பொழுது அவன் கைகளின் நடுக்கம் நின்றிருந்தது. கைவிரலின் அழுத்தம் மென்மொழியின் வயிற்றில் பதிந்தது.அவன் கைகளின் கதகதப்பு மொழியின் வயிற்றில் அங்குமிங்கும் அலைமோத, அசவுகரியத்திற்கு உள்ளானாள் மொழி.

அபியின் கைகளை வயிற்றிலிருந்து அகற்ற நினைத்து அவன் கையை பிடிக்க, அவனின் மறுகை மொழியின் கையை பற்றியது. அவள் விடுவிக்க முயல,

“மொழிம்மா” வென்ற அழைப்பு அபியிடயிருந்து வரவும் ஸ்தம்பித்துப்போனாள் மொழி.அது அவள் உயிரானவனின் குரல்.

‘’வி.... வினோத் “பயந்து பதறி வந்தன வார்த்தைகள்...அவன் ஆமோதிப்பாய் தலையசைத்து வாரியணைத்தான் மொழியை. முகம் முழுதும் ஆவேச முத்தங்களிட்டு வைத்தான். இதழும் இதழும் இணைந்து போயின. இருவிழிகளிலும் தங்குதடையற்ற நீர் பிரவாகம்.

அபியின் வாயிலாக வினோத் அவன் சிசுவிற்கும் முத்தமிட, சட்டென தெளிந்த நிலையாய் தன் வயிற்றில் முகம் புதைத்திருந்த அபியின் உருவத்தை பார்த்ததும் அடிவயிற்றில் எழுந்த சுளீரென்ற வலியில் “அம்மா” வென கத்தியிருந்தாள் மென்மொழி.


கருத்துகள்