யாருமில்லா தனியரங்கில் -4

 அத்தியாயம் 4

மின்னும் ஒளிச்சுடர்களின் ராஜாங்கம், ஜொலித்திடும் வெளிச்சப் பூவாய் இரவு நேர நியூயார்க் நகரம் மின் தாரகையாய் மின்னிட, அந்த வெளிச்சத்தை பிரதிபலித்தவனின் கண்களில் மருந்துக்கும் மலர்ச்சியில்லை. மன மகிழ்ச்சியின் பிரதி பிம்பம் அவன் கண்களில் தென்படவில்லை.

மாறாக தூரத்து இருளில் தொலைந்த போன அவன் மனதையும் தொலைய செய்த அவளையும் தேடி பிடித்திடும் நோக்கமின்றியொரு அசுர பயத்தில் வீழ்ந்து கொண்டிருந்தது அபிமன்யுவின் மனம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னான அந்த நிகழ்வு அவன் மனதை மட்டுமல்ல, அவனையே உலுக்கியெடுத்து போயிருந்தது.இறுக கண்களை மூடிக் கொண்டிருந்தவனில் மின்னி மறைந்தது அந்த காட்சி. அவன் வழியாய் மென்மொழியை நெருங்கியிருந்த வினோத்தின் செயல்.

ஒரு செயல் கொல்லும் வலியை குடுக்க முடியுமென அவன் அப்போது தான் உணர்ந்தான். அந்தக் உயிர் கொய்யும் வேதனையினூடே அவன் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தான் காதல். மென்மொழியின் மீது அவன் கொண்ட அபரிமிதமான நேசம்..

தன்னுயிர் காதலியை ஒருத்தன் பார்த்தாலே பத்தியெரியும்.. அப்படியிருக்கும் போது அவனது உடலை கருவியாக உபயோகித்த வினோத்தால் துவண்டு போனான் அபிமன்யு.

வினோத் மென்மொழியின் கணவன் தான்.. மென்மொழி மீதான முதலுரிமை அவனுக்கு மட்டுமே. அது உயிரோடிருந்தால் தானே. ஆனால் ஆன்மாவாய் இருக்கும் அவனுக்கு மொழி மீதான அபி கொண்ட நேசம் உணர்ந்திருந்தேயிருந்த பொழுதும் எப்படி அபியை உபயோகிக்க எண்ணம் வரும். ஒருவேளை இது தொடர்ந்து விட்டால் அபியால் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது.

இது போல ஒரு சூழ்நிலையில் தான் அபிமன்யு தன்னவளை விட்டும் தன் குடும்பத்தை விட்டும் ஏன் நாட்டை விட்டே ஓடி வந்திருந்தான்...

எவ்வளவு நாள் தான் ஓடுவது. என்றாவது ஒரு நாள் திரும்பி வர தானே வேண்டும்.. அந்த நாள் நாளை என்னும் போது அந்த நள்ளிரவு நேரத்திலும் உறக்கம் இமை தழுவ மறுத்து வெற்று வானையே பார்க்க வைத்திருந்தது.

நிலவற்ற வானம் போல அவன் மனமும் குழுமையின்றி போயிருந்தது. ஒரு பெரு மூச்சுடன் பால்கனியிலிருந்து குளியலறை நுழைந்தவன் நீருக்கு அடியில் தன் நிலையை கரைக்க ஆரம்பித்தான்.

மறுநாள் மதியம் நியூயார்க் நகரத்திற்கும் தனது அஞ்ஞாத வாசத்திற்கும் விடை குடுத்தவன் இந்தியாவை நோக்கி புறப்பட்டான்.

வேலூரில் இருந்த மேக்னா சில்க்ஸின் வெளியே இருந்த உணவகத்தில் ஸ்வீட் கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அருண், அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்தான்.

‘கேட்கலாமா வேண்டாமா?’ அவன் மனம் சா பூ த்ரீ போட்டு பாக்க நினைத்தது.

“மூன்! நா ஒன்னு கேப்பேன். நீ கோவிச்சுக்க கூடாது.”

“அது நீ கேக்குறத பொறுத்து அருணு “

“அப்ப நான் கேக்கல “என்று விட்டு அருண் அமைதியாகி விட, நிலா அவனை முறைத்தாள்.

“மரியாதையா நீ சொல்ல வந்தத சொல்லிடு. வீணா அடி வாங்கி சாவாத.”

“இல்ல, கேட்டா நீ அடிப்ப.”

“ப்ச், ஏன்டா கடுப்ப கிளப்பற “

“சரி சரி டென்ஷன் ஆவாத. ஆனா இப்பயும் சொல்றேன். ஒரு கிளாரிட்டிக்கு தான் இத கேக்குறேன். உன்னை டென்ஷன் பண்ண இல்ல. புரியுதா “

“ரொம்ப பில்டப் குடுக்குறியேடா. சரி கேளு. நான் ஓரளவுக்கு கெஸ் பண்ணிட்டேன் “

“ஹ்ம்ம் அப்ப சொல்லு நிலா, நீ அபிமன்யு அண்ணாவ லவ் பண்றியா?”என்று அருண் கேக்கவும் பதிலுக்கு சிறு சிரிப்புடன் இல்லையென தலையசைத்தாள்.

“ஓஹ். ஆனா உன்னோட ஆக்ட்டிவிட்டி எல்லாம் அவரை லவ் பண்ற மாதிரியே இருக்கே.”என்று சந்தேகமாய் பார்த்தான் அருண்.

“அதுக்கு நான் என்ன பண்றது.”

“இது என்னடி பதில் “

“டேய் அருணு,எனக்கு அவன் சின்ன வயசுலருந்து பிரண்ட் டா. ரொம்பவும் கிளோஸ் கூட.அதனால அவனோட எமோஷனல் டச் ரொம்பவே அதிகம்.அதெல்லாம் பாக்குற உங்களுக்கு அப்பிடி தெரியலாம்.”

“ஹ்ம்ம். சரி ஒருவேளை உங்க வீட்டுல உங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்க நினச்சா என்ன சொல்லுவ. வேண்டாம்னு சொல்லிடுவியா?”

என்று அருண் கேட்டதற்கு இல்லையென மறுத்தாள் நிலா. அருண் அவளை விசித்திரமாய் பார்த்தான்.

“அப்போ அவரை கல்யாணம் செஞ்சுக்குவியா?”

“கண்டிப்பா”

“நீ தான் லவ் பண்ணவே இல்லையே “

“So what. கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் லவ் பண்ணிக்குவேன் “

“நீ ஒரு தினுசா பேசறடி. ஃபிரண்ட எப்படி கல்யாணம் செய்வேன்னு சண்டை போடுவன்னு நினச்சேன். இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கல.”

“நான் ரொம்ப ப்ராக்டிக்கல் அருணு. சும்மா வீண் டையலாக் எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன். அபிய இப்ப வரைக்கும் ஒரு ஃபிரண்டா ரொம்ப பிடிக்கும். இனி பியூச்சர்ல அவன் தான் என் ஹஸ்பண்ட்னு சொன்னால் என்னால மறுக்க எந்த காரணமும் என்கிட்ட கிடையாது.”

நிலாவின் தெளிவான பேச்சில் அருணும் புன்னகைத்தான்.

“அப்போ இப்ப வரைக்கும் நீ சிங்கிள் தானடி. சோ....”

“சோ....”

“என்னை ஏன் உன் லவ்வரா தத்தெடுத்துக்க கூடாது “என்று அருண் கேட்க, எழுந்து அவன் தலையை கலைத்த நிலா,

“அபிக்கு பிறகு நீ தான்டா அருணு என் மைண்டுல இருக்க. சீக்கிரம் வந்து எங்க வீட்ல பொண்ணு கேளு. நானே உன்னை கல்யாணம் பண்ணி தத்தெடுத்துக்கரேன்.” என்று சொல்லி கண்ணடித்து விட்டு பில் குடுக்க எழுந்து சென்றாள்.

அவள் சும்மாதான் சொல்லிச் சென்றாள். ஆனால் அருணின் மனதில் அவளறியாமல் ஆசையை விதைத்துச் சென்றதை அறியவில்லை. ஏனென்றால் நிலா மீது அவன் கொண்ட சிறு ஈர்ப்பே அவனுடைய அபி பற்றிய சந்தேகங்களுக்கு மூல காரணம் என்பதை அருண் நிலா இருவருமே அப்போது அறியவில்லை.

திருச்சி ஏர்ப்போட்டிலிருந்து வெளி வந்த அபிமன்யுவை அணைத்துக் கொண்டான் அன்புச் செழியன்.

“எப்படி இருக்கடா அபி “

“நல்லாருக்கேன் ண்ணா. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.”

“எல்லாரும் உனக்காக தான்டா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இப்ப தான் உனக்கு வர வழி தெரிஞ்சுருக்கு.”

“எல்லாம் ஒரு ஆர்வம் தாண்ணா. எல்லா நாட்டு சாப்பாட்டயும் டேஸ்ட் பண்ணி அதுல பிடிச்சதை கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. நானும் என் கேட்டரிங் பிரண்டும் ரொம்ப நாள் பேசிட்டு இருந்த விஷயம் தான். இன்னும் சொல்லணும்னா இன்னும் நான் கத்துக்க வேண்டியதே நிறைய இருக்கு அண்ணா. ஆனா அம்மா வற்புறுத்தி கூப்பிடவும் தான் வர வேண்டியதா ஆகிடுச்சு.” என்று பாதி உண்மையும் பொய்யுமாய் அன்புவை சமாளித்திருந்தான்.

அன்புவிடம் மட்டுமல்ல இந்த இரண்டு வருடத்தில் அவன் குடும்பத்தில் மற்றவர்களுக்குமே இதே காரணத்தை தான் சொல்லியிருந்தான். இவனை வெளிநாடு அனுப்ப மறுத்து அழுது புரண்ட நிலாவிடம் கூட இதை தான் சொல்லியிருந்தான். ஆனால் அவள் அடிக்கடி இவனை வர சொல்லி நச்சரிக்க, இவன் விடாப்படியாய் மறுத்ததில் நிலா இவனுடன் கடந்த ஆறு மாதமாக பேசுவதில்லை. கோவமாக இருக்கிறாள்.

அவளை சமாதானம் செய்வதை நினைத்தாலே மலைப்பாக இருந்தது. அதை விட மொழியை நினைத்தால் பயமாக இருந்தது. வினோத்தை நினைத்தால் கை கால்கள் நடுங்கியது.

இத்தகைய கலவையானதொரு நிலையில் வேலூரை வந்தடைந்தான் அபிமன்யு.இவனை கண்ட சந்தோஷத்தில் வாசலிலேயே பேசிக் கொண்டிருக்க, அபிமன்யு பக்கத்து வீட்டை பார்த்தான். வெளிகதவு பூட்டியிருக்கவில்லை. ஆனால் இவன் வருகை தெரிந்தும் யாரும் வெளியே வரவில்லையென்கவும் தாமரையிடம் கேட்டான்.

“அம்மா நிலா வீட்ல யாருமில்லையா?”

“அண்ணாவும் அண்ணியும் கோவிலுக்கு போயிருக்காங்க அபி. நிலா எங்கயோ வெளிய போனா. மொழி தான் வீட்ல இருக்கா. கவின தூங்க வச்சிட்டு இருப்பான்னு நினைக்குறேன்.”என்று சொல்லவும் ‘ ஓ’ என்பதோடு நிறுத்திக் கொண்டான்.

“சரி அபி லக்கேஜ் எல்லாம் உன் ரூம்ல வச்சுட்டேன். நீ போய் குளிச்சிட்டு ரெஸ்ட் எடு. “என்று அன்பு சொல்லவும் சரியென மேலே தன்னறைக்கு வந்தான் அபிமன்யு.

பயண அலுப்பு தீர குளித்து விட்டு வந்தவன் கண்ணாடி முன் நின்று தலை வார, அவனுக்குப் பின்னால் சுவரில் சாய்ந்த படி கைகட்டி அவனையே பார்த்துக் கொண்டிருந்த வினோத்தின் அருவத்தைப் பார்த்து திடுக்கிட்டான் அபிமன்யு.


கருத்துகள்