யாருமில்லா தனியரங்கில் -5
அத்தியாயம் -5
கண்ணாடியில் தெரிந்த வினோத்தின் அருவத்தைக் கண்டு திடுக்கிட்டான் அபிமன்யு. நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. மெல்ல திரும்பி பார்க்க அவ்விடம் வெறுமையாக இருந்தது.சுவரின் அருகில் சென்றான். கைகளால் காற்றில் தடவினான். எதையாவது உணர முடிகிறதா என்று கூர்ந்து கவனித்தான்.
அப்படி எதுவுமில்லை என்று தோன்றவும் பிரம்மை என்று நினைத்துக் கொண்டு கொஞ்சமாய் ஆசுவாசமானான்.லேசாய் தலை வலிப்பது போல் இருந்தது. சிறிது தூங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவன் உடை மாற்றிக் கொண்டு படுத்து விட்டான். சிறிது நேரத்திலேயே தூங்கியும் போனான்.
அவன் படுத்திருந்த மெத்தையின் மறுபக்கத்தில் இருந்த போர்வையில் சிறிதாய் வண்ண ஓவியமோன்று தோன்ற ஆரம்பித்தது. அது வினோத்தின் உருவத்தை கொண்டிருந்தது. சட்டென மேல் எழுந்த வினோத்தின் உருவம் அபியின் மேல் படர ஆரம்பித்தது. அந்த அறை முழுவதும் மகிழம்பூவின் மனம் நிறைந்திருந்தது.
அப்போது கதவைத் திறந்து கொண்டு வந்தாள் நிலா. அபி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்த நிலா குளியலறைக்குச் சென்று வாளியில் நீரை எடுத்து வந்தவள் அப்பிடியே அதை அவன் மீது கவிழ்த்து விட்டாள். ஈரத்தில் நனைந்த அபியிடமிருந்து வினோத்தின் ஆவி வெளியேறிவிட தன்னை உதறிக் கொண்டே எழுந்தான் அபிமன்யு.
எதிரில் வாலியுடன் தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்த நிலாவைக் கண்டதும் வேகமாய் சென்று அணைத்துக் கொண்டான்.
அவன் அணைப்பிலேயே நிலாவின் கோவம் ஓடிவிட்டாலும் வீம்பாய் அவனை பிடித்து தள்ளி விட்டாள்.
“கிட்ட வந்தா கொன்றுவேன்டா எரும. ஓவர் பாசம் உள்ளவனாட்டம் பொங்காத என்ன!”என்று நிலா முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் பக்கவாட்டில் நின்று தோளோடு அணைத்து அவள் தலை மீது தன் தலையை வைத்தவன்,
“உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்டி.”என்றதும் தோளை குலுக்கி அவனை விலக்கியவள்,
“பொய் சொல்லாத. ரொம்ப பாசம் வச்ச மாதிரி நடிக்காத என்ன! என்னை விட்டு இவ்ளோ நாள் உன்னால இருக்கு முடிஞ்சுருக்கு. அத்தை கட்டாயப் படுத்தலன்னா இப்பவும் வந்துருக்க மாட்ட.”
“அப்பிடியில்லடி..”
“நீ நிறுத்து பேசாத. என் மூஞ்சிலயே முழிச்சு தொலைஞ்சுராத “ என்றுவிட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.அபி தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டான்.
அபியின் அறையை விட்டு கோவமாய் வெளியே சென்ற நிலவுக்கு அழுகை வரும் போல் இருந்தது. இப்படியே கீழே போனால் என்ன ஏதென்று கேட்டே உயிரை எடுப்பார்கள் என்று தோன்றவும் அபியின் பக்கத்து அறையான அன்புவின் அறைக்குள் நுழைந்து விட்டாள். அறையின் கதவை சாத்திவிட்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.அழுகை தேம்பலாய் வெளிப்பட்டது.
இவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து இரண்டு பேரும் ஒன்றாகவே தான் இருப்பார்கள். இவள் என்ன சொன்னாலும் அபி கேட்பான். இவளுக்காக அவன் எதுவும் செய்வான். அவனின் எல்லா செயலிலும் நிலா இருப்பாள். நிலாவுக்குமே அப்பிடித் தான். அவனுக்காக இவள் எதுவும் செய்வாள்.அப்பிடி ஒரு பிணைப்பு இருவரிடமும்.
ஆனால் மொழியின் பிரசவம் முடிந்த மறுநாள் நிலாவிடமும் மற்றவர்களிடம் வெளிநாடு செல்வதாய் சொன்னதும் யாரும் முதலில் ஒத்துக் கொள்ளவே இல்லை.
ஆனால் பிடிவாதமாய் நின்று விட்டான் அபிமன்யு. அவன் ஒன்றைக் கேட்டு யாருக்கும் மறுத்துப் பழக்கமில்லை. அதனால் அவன் போக்கிலேயே விட்டுவிட்டனர். நிலா கூட அவன் விருப்பத்திற்காக மட்டுமே சம்மதித்தாள். விரைவில் வந்து விடுவான் என்றுதான் நினைத்தாள்.
ஆனால் அபி வராமல் இழுத்தடிக்கவும் கோபமே வந்தது நிலாவிற்கு. காதலைவிட நட்பின் பிரிவு எவ்வளவு வலியைத் தரும் என்பதை நம்மாளும் உணர்ந்து கொள்ள முடியுமே. மூன்று வருட கல்லூரி நட்பின் பிரிவே நம்மை அழ வைக்கும் போது நிலா அபியின் நட்பானது கிட்டதட்ட இருபது வருடத்திற்கும் மேலானது எனும் போது நிலா அழுவதில் வியப்பில்லை.
அபி வெளிநாட்டில் இருக்கும் போது நிறைய முறை அவனிடம் சண்டையிட்டு அழுதுள்ளாள். ஆனால் அபியோ அதற்கெல்லாம் சற்றும் இறங்காமல் அழுத்தமாய் இருந்து விட நிலாவும் கடந்த ஆறு மாதமாக அவனிடம் பேசக்கூட இல்லை.அவன் அழைப்புகளையும் ஏற்கவில்லை.வாட்சப் முகநூல் என எல்லாவற்றிலும் பிளாக் செய்துவிட்டாள்.
இன்று அவன் வருவது தெரிந்தும் அவனிடம் பேசவே கூடாது என்ற நிலையில்தான் இருந்தாள். ஆனால் வீட்டிற்கு வந்ததும் தன் வீட்டிற்கும் கூட போகாமல் அவனைப் பார்க்க வந்துவிட்டாள்.அதன் பின் அவனைக் கண்டதில் சந்தோஷத்தை விட கோபமே முன்னிருக்க இப்போது ஆதங்கமே மிச்சமிருந்தது.
திருச்சிக்கு சென்றுவந்த அலைச்சல் போக குளித்து முடித்து வெளியே வந்த அன்பு தன்னறையிலிருந்த நிலாவைப் பார்த்து புருவம் சுருக்கினான்.
“இங்க என்ன பண்ற நிலா. எதாவது பேசணுமா?” கேட்டுக்கொண்டே ஹேங்கரில் இருந்த பனியனை அணிந்தான்.
அவனைக் கண்டதும் வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள் நிலா.
“இல்ல ...அது வந்து சாரி மாமா...” என்று அவசரமாய் சொன்னவள் அறையை விட்டு வெளியே செல்ல முயல,
“ஒரு நிமிஷம் நில்லு நிலா” என்று தடுத்து நிறுத்தினான் அன்பு. மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் குடுத்தான். மறுபேச்சின்றி வாங்கி குடித்தாள் நிலா.
“நிலா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உக்காரு” என்று சொல்லவும் கேள்வியாய் பார்த்தாள்.
“ஹ்ம்ம்..அபி ஏனோ நார்மலா இல்லைன்னு தோணுது நிலா.உனக்கும் அவனுக்கும் இடையில் எதாவது பிரச்சனையா நிலா ? “
“இல்ல மாமா.அவன் வெளிநாடு போனதுல நான் கொஞ்சம் சண்டைபோட்டுருக்கேன். மத்தபடி வேற பிரச்சனைன்னு எதுவுமில்லையே.”
“ஓஹ்! ஆனா அவன் வெளிநாடு போனதே எனக்கு இயல்பா தோணல நிலா. இப்பெல்லாம் அவன் கிட்ட ஒரு இறுக்கம் அமைதி தெரியுது. அவன் வெளிநாட்டுல இருந்தப்ப அவன் கூட பேசினதுலயும் அத உணர முடிஞ்சுது. அவன் எவ்ளோ ஜாலி டைப்ன்னு உனக்கும் தெரியும். இப்ப அதெல்லாம் மிஸ்ஸிங் நிலா.”
அன்பு சொல்லவும் யோசிக்க ஆரம்பித்த நிலாவிற்கு அதுவும் உண்மையோ என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது. அவள் யோசிப்பதை கண்டவன்,
“நிலா உன் கோபத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு அவன் கிட்ட பேசி அவனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு. சும்மா அவன் பேசல, வெளிநாடு போய்ட்டான்னு சண்டை போடாம அவன் அப்பிடி செய்ய காரணம் என்னனு கண்டு பிடி. நீ இன்னும் சின்ன பிள்ளையா என்ன. அவன் கூட சண்டை போட்டு அழறதுக்கு. கொஞ்சம் மெச்சூருடா பிஹேவ் பண்ணு.”என்று சாதாரணமாய் ஆரம்பித்து கண்டிப்பாய் சொல்லவும் நிலாவிற்கும் ரோசம் வந்தது.
“நான் ஒன்னும் வேணும்னு அவன் கூட சண்டை போடல. எனக்கும் அவன் மேல அக்கறை இருக்கு.எந்நேரமும் சிடு மூஞ்சியா இருக்குற நீங்க ஒன்னும் நான் அழறத பத்தி சொல்ல வேண்டாம். அபிக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிச்சி அவனை சரியாக்குறது என் பொறுப்பு.”
நிலா சொன்ன வேகத்தில் தனக்குள் சிரித்துக் கொண்டான்.ஆனால் வெளிப்படுத்தவில்லை.
“சரி சரி இந்த வீராப்பு எல்லாம் பேச்சுல இருந்தா மட்டும் பத்தாது. செயல்ல காட்டணும்.”
“அதெல்லாம் எனக்கு தெரியும்.”
முகத்தை திருப்பிக் கொண்டு சென்றவளை சன்ன சிரிப்புடன் பார்த்திருந்தான் அன்புச் செழியன்.
‘ப்ச் பெரிய அக்கறை அருணாச்சலம்.. வந்துட்டாரு என்னை குறை சொல்றதுக்கு. எல்லாம் இந்த அபி எருமையால வந்தது. ‘
அண்ணன் தம்பி இருவரையும் கரித்துக் கொட்டிக் கொண்டே மீண்டும் அபியின் அறைக்குச் சென்றாள். அவன் இன்னமும் அப்பிடியே தான் அமர்ந்திருந்தான். அவனருகில் சென்ற நிலா அவனை இடித்துக் கொண்டே அமர்ந்தவள்,
“சீன் போட்டதெல்லாம் போதும்.ஒழுங்கா உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு.”என்று நிலா அபியிடம் கேட்கவும், நிலாவின் பின்னாடி வந்த அன்பு பல்லைக் கடித்தான்.
‘இவ கேக்குற அழகுக்கு அவன் சொல்லிட்டுத் தான் வேற வேலை பார்ப்பான்.’என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.
உள்ளே அபியோ நிலா கேட்டதையே கவனிக்காதவன் போல,” ஹே நிலா என் மேல கோவம் போயிருச்சா.? என்று ஆச்சிரியமாய் கேட்கவும்,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.நிறைய கோவம் இன்னும் பேலன்ஸ் இருக்கு அதுக்காக பேசாமெல்லாம் இருக்க முடியாது..சரி நீ டாபிக் டைவேர்ட் பண்ணாத. நீ நிஜமா எதுக்காக வெளிநாடு போன. இங்க எதாவது பிரச்சனையா.இல்ல........ எதாவது லவ் ஃபெயிலியரா “என்று கேட்க திடுக்கிட்டான் அபிமன்யு.
கருத்துகள்
கருத்துரையிடுக