யாருமில்லா தனியரங்கில் -6

 அத்தியாயம் 6

நிலா கேட்ட கேள்வியில் முதலில் திகைத்தாலும் விரைவில் தன்னை சுதாரித்துக் கொண்ட அபிமன்யு,

“உன் கூட இருக்க வரைக்கும் அப்பிடி எந்த ஒரு நல்ல விஷயமும் எனக்கு நடக்காது நிலா “என்று சொல்ல,அவள் கடுப்பாகி

“இல்லைனா மட்டும் சார் அப்பிடியே நாலு ஃபிகர லவ் பண்ணி நாப்பது நாள் டேட்டிங் போயிருப்ப.”என்க

“ஒத்த ஃபிகருக்கு வக்கத்து கிடக்குறேன். இதுல நாலு ஃபிகாரம்.நாப்பது டேட்டிங்காம். நடக்குற கதையா இது. நானே பேசாம கைலாசா போயிரலாம்னு நினைச்சுட்டு இருக்கேன் “

“மொத அத செய் “என்றிருந்தாள்.

‘இவள என்ன சொல்லி அனுப்பினா, என்ன பண்ணிட்டு இருக்கா… சிங்காரி’என பல்லைக் கடித்தான் அன்புச் செழியன். பின் கடுப்புடன் உள்ளே சென்றான்.

“டேய் அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்துட்டு தூங்காம என்ன வெட்டி அரட்ட அடிச்சிட்டு இருக்க “என்று அபியை கடிந்து விட்டு,

“நீ கிளம்பலையா இன்னும் “என்று நிலாவிடம் எகிற,

“நீங்க தான மாமா..”என்று அவள் ஆரம்பிக்கும் போதே அவள் தலையில் கொட்டி,

“எந்திரிச்சி போடி “என்று அவளை விரட்டினான்.

‘இவரே பேச சொல்லிட்டு இப்ப வந்து விரட்டுறத பாரு பிஎம்’

வலித்த தலையை தேய்த்துக் கொண்டே அன்புவை முறைத்து விட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

“நீ தூங்கு “என்று அபியிடம் சொல்லிவிட்டு நிலாவின் பின்னே வந்த அன்பு அவளின் பின்னலை பிடித்திழுத்தவாறு அவனறைக்குள் வந்தான். அவன் இழுத்ததில் வலியில் முகம் சுருங்க அவன் பின்னே வந்தவள் தலையில் மீண்டும் கொட்ட வர, அவள் சட்டென பின்னால் நகர்ந்து,

“சும்மா கொட்டிட்டே இருக்காதீங்க மாமா வலிக்குது..”என்றவாறு தலையை கை வைத்து மறைத்துக் கொண்டாள்.

“உன் கிட்ட எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லி அனுப்பினேன். அங்க போய் அவன் கிட்ட வம்புச் சண்ட போட்டுட்டு இருக்க “

“நான்தான் அவன்கிட்ட கேட்டேனே.”

“நீ கேட்ட லச்சனத்தை தான் நான் பார்த்தேனே. ஒரு வேலை உருப்படியா செய்யுறியாடி. ஆனா வாய் மட்டும் வேலுரையே மேச்சுட்டு வந்துடும் “என்று அவன் கடிய முகம் சுருங்கிப் போய் நின்றிருந்தாள்.

“இப்ப எதுக்கு மூஞ்சிய தூக்கிட்டு நிக்குற”என்று அதற்கும் கடுகடுத்தான்.

“ என் மூஞ்சி! நான் தூக்கிட்டு நிப்பேன் இல்ல.தொங்கவிட்டு நிப்பேன் உங்களுக்கு என்னவாம்”

“ இப்ப எதுக்கு எதிர்த்து பேசுற” என்று அதற்கும் கொட்டினான்.

“ நீங்க தான கேள்வி கேட்டீங்க. பதில் சொன்னா எதிர்த்து பேசுறேனு கேக்குறீங்க.கொட்டி வைக்குறீங்க. நீங்க கொட்டி கொட்டி தான் நான் வளராம போயிட்டேன்”

“ இல்லைனா சிங்காரி சின்ராசு ரேஞ்சுக்கு வளர்ந்திருப்பியோ”

“கண்டிப்பா “என்றவிட்டு அவன் தோளோடு உரசி நின்று அவன் காதருகில் கை வைத்து “இங்க வரைக்கும் வளர்ந்துருப்பேனாக்கும் “என்று சொன்னவள் அவனின் தோளிற்க்கும் சற்று கீழே தான் இருந்தாள். அவள் அப்படி உரசி நின்றதில் கடுப்பாகி அவளை தள்ளி விட்டவன்,

“இடத்தை காலி பண்ணுடி “என்க

“சும்மா போய்ட்டு இருந்தவள இழுத்து வச்சு பேசிட்டு, இப்ப விரட்டி விடுறீங்க. இதெல்லாம் நல்லா இல்ல ஆமா “என்று விரல் நீட்டி பேச, நீட்டிய விரலை மடக்கி அழுத்தினான். அதில் வலியில் கத்தப் போனவளை வாயில் கை வைத்து தடுத்தான் அன்பு.

இதுவரை உணராத, உணர தோன்றத இந்த நெருக்கம் இன்று ஏனோ நெஞ்சை அடைப்பது போலொரு உணர்வில் தடுமாற இதழில் பதிந்திருந்த அவன் கைகளின் வெப்பத்தில் குளிர் காய ஆரம்பித்தது மனது. ஆனால் அடுத்த கணம் அவன் கொட்டிய கொட்டில் அனைத்தும் மறந்து போக வலியில் கண்ணீர் தான் வந்தது.அதைக் கண்ட அன்பு தான் பதறி,

“ஏய் சிங்காரி.வலிக்குதா என்ன நான் மெதுவா தானே கொட்டினேன் “என்றவாறு அவள் தலையை தேய்க்க,

“ஒன்னும் வேணாம் “என்று சொல்லி அவன் கையை தட்டி விட்ட நிலா கண்ணிமைக்கும் நேரத்தில் எக்கி அவன் மண்டையில் நறுக்கென கொட்டிவிட்டு மின்னல் வேகத்தில் வெளியே ஓடிவிட்டாள்.

“ஏய் சிங்காரி “என வலியில் கத்தியிருந்தான் அன்பு.

“கையில மாட்டுடி சின்சான் மண்டை மாதிரி வீங்க வைக்குறேன் “என்று தனக்குள் கருவிக் கொண்டான்.

 அன்புவிடம் இருந்து தப்பித்து தங்கள் வீட்டிற்கு வந்தாள் நிலா. அங்கு கவின் அப்போதுதான் எழுந்திருக்க அவனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள் மென்மொழி.

“ஐ என் செல்ல தங்கம் எழுந்துட்டீங்களா.” என்றவாறு கவினை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் நிலா.

“அபியை போய் பாத்துட்டு வந்துட்டியா நிலா “ என்று தன் தங்கையை பார்த்து கேட்டாள் மென்மொழி.

“ம்ம் இப்பதான் பார்த்துட்டு வரேன்”

“ எப்படி இருக்கான்”

“ பேருக்கு தான்க்கா அவன் செஃப்பு. பஞ்சத்தில் அடிபட்ட பரதேசி மாதிரி ஒல்லியா வந்திருக்கான்.நான் கூட செஃப் வெங்கடேஷ் பட் மாதிரி வருவான்னு நினச்சேன்” என்று சொல்ல வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் மென்மொழியிடமிருந்து வேதனையின் வெளிப்பாடாக பெருமூச்சு கிளம்பியது.

“ நீ இன்னும் அவன்கிட்ட பேசலையாக்கா “என்று மென்மொழியிடம் கேட்க,

“ இல்லடி அவன் வரும்போது தம்பி தூங்கிட்டு இருந்தான். அம்மா யாரும் இல்ல. அதனால தனியா விட்டுட்டு போக முடியல. “

“ விடு சீமதுரை தூங்கி எந்திரிச்சு வருவான் அப்ப பேசிக்கலாம்.” என்றுவிட மொழியும் சரியென்றாள்.

 பிறகு இருவரும் சேர்ந்து கவினுக்கு உணவு ஊட்டி முடித்த பின் நிலா அவனுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட மொழி தன்னறைக்கு வந்தாள். அயர்வாய் கட்டியிலில் அமர்ந்தவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

 அன்று வினோத்தின் குரலில் தன்னை மறந்தவள், அவனின் தொடர்ந்த முத்தங்களில் அபியையே மறந்து போனாள். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த வலியில் நிதானம் வரவும் தன் வயிற்றிலிருந்த சிசுவிற்கு முத்தமிட்டு கொண்டிருந்த அபியை கண்டதும் அதிர்ச்சிக்குள்ளானாள். அதன் பின் இடுப்பில் தாங்க இயலாத வலியில் அம்மாவென கத்தி இருக்க, அதில் பதறி அவளிடமிருந்து விலகிய அபியின் முகத்தில் தெரிந்த பயம் இன்றும் அவள் கண் முன்னால் வந்து போனது.

 அதன் பிறகு தொடர்ந்து வந்த வலியினால் கதறி துடித்தவளை கைகளில் அள்ளிக்கொண்ட அபியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவள் முகத்தில் பட்டு தெறித்தது.

“ஒன்னுல்ல மெய்மா. சீக்கிரம் ஹாஸ்பிடல் போய்டலாம் “என்று அழுது கொண்டே சொன்னவன் காரின் முன்னிருக்கையில் அவளை அமர வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினான்.

கியரிலிருந்த அவன் கையை வலி பொறுக்க முடியாமல் மொழி பற்றிக் கொள்ள, தன் கைகளுக்குள் அவள் கைகளை வைத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான். அதில் அவனது இதயத்துடிப்பைக் கேட்டவளுக்கு அழுகை வர

“வினோத் வினோத் “என வாய் விட்டே கதறினாள்.

அதில் அபியின் உடல் இறுகி”மொழிம்மா “என்ற வினோத்தின் குரல் வந்ததில் மொழி திகைத்து விழிக்க அவள் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்ட அபி,

“உன் வினோத் உனக்காக என்ன வேணாலும் செய்வேன் மொழிம்மா “என்றான். அதில் அதிர்ந்த மொழி அவனிடமிருந்து விலகி அமர்ந்து,”அபி அபி “என அழைத்தவாறு அவனை உலுக்கினாள்.

அவளின் செயலில் தலையை ஒரு முறை உலுக்கியவன்,

“என்னாச்சு மெய்மா ரொம்ப வலிக்குதா “என்றிருந்தான்.

மொத்தமாய் குழம்பிப் போனாள் மொழி.

அதன் பின் கவினை பெற்றெடுக்கும் வலியில் அனைத்தையும் மறந்திருந்தவள் மயக்கம் தெளிந்து நார்மல் வார்டிற்கு மாற்றிய பின் அபியை பற்றிய நினைவுகள் வர அவளால் எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடியவில்லை.

அவனிடம் பேசலாம் என்று காத்திருக்க அவனோ நாட்டை விட்டே சென்றிருந்தான்.

மென்மொழிக்கு ஆவி பேய்களில் எப்போதுமே நம்பிக்கை இருந்தது இல்லை. பிறகு அபியின் செயல்களில் குழம்பிப் போயிருந்தவள் வீட்டிற்கு வந்து இணையத்தை ஆராய்ந்ததில் அவளுக்கு தெளிவும் கிடைத்தது.

அதைவிட கடந்த இந்த இரு வருடங்களில் அபியின் மேலான அன்பு அவளறியாமலே பரிணாமம் அடைந்திருந்தது.


கருத்துகள்