யாருமில்லா தனியரங்கில் -7

அத்தியாயம் -7
அபிமன்யு வந்த மறுநாள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை. உலக நண்பர்கள் தினம். காலையில் எழுந்த அபிமன்யு வெகு ஆவலாய் வாட்சப் ஸ்டேட்டஸ் பார்க்க முகம் பியூஸ் போன பல்பானது.அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஞாபகம் வந்து போனது.

வெண்ணிலா வீதியுலா நடத்தும் இரவின் நிறைவிற்கு பின் வெண்கதிரோன் வீர உலா நிகழும் பகல் பிறந்து இரண்டு மணி நேரம் கடந்த நிலையிலும் படுக்கையை விட்டு நகராமல் சோம்பலாய் கைபேசியை நோட்ட மிட்டுக் கொண்டிருந்த அபிமன்யு சட்டென எழுந்து அமர்ந்தான். அதுவரை அமைதியாய் இருந்த அவனது கைபேசி அவன் சத்தத்தை கூட்டி வைத்ததில் அலறிக்கொண்டு பாடியது.

‘நட்புதான் சொத்து நமக்கு..........
நட்பு தான் சொத்து நமக்கு...........’

என் நண்பன் போட்ட சோறு....
நிதமும் தின்னேன் பாரு.....’

நட்பின் வலிமையை முழங்கும் விதமாய் பாடல் வரிகளும் அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களுமாய் வாட்சப் ஸ்டேட்டஸில் ஓடிக்கொண்டிருந்து.

“அச்சோ மச்சி பிச்சுட்டாளே!” என்று வாய் விட்டே சொன்னவன் உடனடி செயலாய் அவள் எண்ணிற்கு அழைத்தான்.சில நிமிட காத்திருப்பிற்கு பின் அழைப்பு ஏற்கப்பட எதிற்முனையின் பதிலுக்கு முன்னே பட்டாசாய் படபடத்தான் அவன்.

“மச்சி மச்சி செம்ம மச்சி. எங்கிருந்துடி புடிச்ச இத்தன போட்டோஸ? செம்ம வீடியோடி. பாட்டும் வீடியோவும் பார்க்க பார்க்க கண்ணு வேர்த்துருச்சு மாடே. லவ் யூ சோ மச் கண்ணு குட்டி.. ஹாப்பி பிரண்ட்ஷிப் டே டி குட்ட மூன்”

தகரக் கொட்டகையின் மீது பொழியும் மழையின் சத்தத்தினால் சிறிதும் பாதிக்கப்படாத செவிடன் நிலையாய் பதில் மறுபுறமிருந்து வந்தது.

“அவ்ளோதானுங்களா அபிமன்யு மாமா. நன்றிங்க மாமா. சரி வச்சுருட்டுங்களா அபிமன்யு மாமா ?” என்று அவள் வைத்து விட, அவளின் அந்த பதிலில் அதிலும் அந்த ‘அபி மாமா’வில் இவனுள் உறங்கிக் கொண்டிருந்த மூளை அலாரட் ஆறுமுகம் ஆனது.

காலை பல்லு கூட விலக்காமல் பாத்ரூம் கடமையை கூட நிறைவேற்றாமல் உடன் பிறவா கைபேசியை ஓரங்கட்டியவன் தான் செய்து வைத்த வில்லங்கத்தை மூளையின் சிசி டிவில் ஓட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.அப்பொழுதும் செய்து வைத்த பிழை பிடிபடாமல் போகவே தன்னறையை விட்டு வெளியேறி அடுத்த வீட்டிற்கு நேர்வழியில் வரும் பொறுமையின்றி இரு வீட்டிற்கும் இடையிலிருந்த கம்பவுண்ட் சுவரை எகிறி குதித்து மாடிப்படி ஏற எதிரில் மொழி இறங்கிக் கொண்டிருந்தாள்.

ஆறாம் மாதம் நடந்து கொண்டிருக்க லேசாக மேடிட்டிருந்தது வயிறு. இவனைக் கண்டு அவள் சிரித்துக் கொண்டே
“உன் மச்சி செம்ம கோவத்துல இருக்கா அபிபையா.”என்று மென்மொழி சொல்லவும், தன் போக்கில் மேலேறி வந்தவன் மொழியை பார்க்கவும் சட்டென நின்று விட்டான் நான்கு படிகள் முன்னதாகவே.

சட்டென சூழ்ந்த பதட்டமும் பரபரப்புமாய் அவன் மனது மையல் கொள்ள தவிப்பாய் தலை கோதிக் கொண்டான்.
அப்பொழுது தான் அவன் மனம் வெகு கனமாய் மொழி மீது சாய்ந்து கொண்டிருந்த காலம். பார்க்கவும் முடியாமல் பார்க்காமல் இருக்கவும் முடியாமல் அவன் தவித்த காலங்கள் அது. முடிந்த மட்டும் அவளை தவிர்த்தான் என்றாலும் அதையும் மீறி ஏற்படும் சந்திப்புகள் அனல் மேல் பனித்துளி நிலை.

அவனின் நிலையை உணராத மொழி,
“உனக்கும் உன் மச்சிக்கும் என்னடா சண்டை.நைட்டு பன்னெண்டு மணிக்கு ஸ்டேட்டஸ் வைக்கும் போதெல்லாம் நட்புடா உயிருடான்னு கத்திட்டு கிடந்தவ காலைல எழுந்து பார்த்தா உன்ன கரிச்சு கொட்டிட்டு இருக்கா!”என்று கேட்டாள்.

“எனக்கும் தெரியல மெய்மா. இனி தான் பேசி சமாதானம் செய்யணும்”

“அதுசரி நீயாச்சு அவளாச்சு. சீக்கிரம் பேசி சமாதானம் பண்ணு. அவளும் அவளோட அபி மாமாவும். காமெடியா இருக்குடா.”என்றாள் சிரித்துக் கொண்டே.

அந்த அபி மாமாவில் மீண்டும் கடுப்பானான் அபி. என்னவோ அவனுக்கு நிலா அவனை மாமாவென்று அழைத்தால் அவ்வளவு எரிச்சலாக இருக்கும். நிலாவுக்கும் அது தெரியும். அதையும் மீறி அவள் அப்படி அழைத்தாள் என்றாள் அபி மீது அவள் கொலை காண்டில் இருக்கிறாள் என்று அர்த்தம். அதை எண்ணி வேறு பயமாக இருந்தது. ஏனென்றால் நிலா சமாதானம் ஆவதற்குள் வைத்து செய்து விடுவாள் இவனை.அதனால் மொழி சொன்னதைக் கேட்டவன்,

"இருக்குமடி இருக்கும். நானே என்னத்த பண்ணி வச்சுருக்கேன்னு பயத்துல இருக்கேன்.”என்று தன்னையும் மீறி இயல்பாய் உரைத்திருந்தான்.

“டி சொன்னா கொன்றுவேன்.”என்று அவள் ஒற்றை விரல் நீட்டி பத்திரம் சொல்லி போலியாய் மிரட்ட,

“டி டி டிட்டி டி..”என்றதில் அவனையும் மீறிய குறும்புத்தனம் மொழியிடம் வெளிப்பட, அவளின் வேலிகளை மீறிய இயல்பு பாவத்தில் அவன் கையை பிடித்து முறுக்கினாள். அதிலே அவனை சற்றும் நெருங்கியும் நின்று விட்டாள்.

அம்மம்மா புயலிலும் பூகம்பத்திலும் சிக்கி தவிக்கும் சிறு கொடி போல ஆனான் அவன். குற்றவுணர்ச்சியில் குழைத்த நேச பூவது மலர்ந்து மனம் பரப்பியே தீருவேன் என்று தீவிரவாதம் செய்ய, ஹார்மோன்களின் கரகாட்டம் முழு உடலையும் சதிராட செய்ய நிலைகுலைந்து போனானவன்.

அதில் கற்றாகிப் போன குரலில், “சரி சரி இனிமே சொல்லமாட்டேன் “ என்றுரைத்துவிட்டு அவளிடமிருந்த்து கைகளை உருவிக் கொண்டு மேலேறிச் வந்த பிறகு தான் மூச்சே வந்தது அவனுக்கு.
ஆனால் வந்த மூச்சு போய்விடும் தொணியில் நின்று கொண்டிருந்தாள் நிலா.

“வாங்க அபிமன்யு மாமா. என்ன காலைலயே வந்திருக்கீங்க.உக்காருங்க மாமா. காபி சாப்பிடறீங்களா?”

“ஏ மச்சி என்ன கோவம் உனக்கு. நைட்டு கூட நல்லா தானடி இருந்த “என்றவாறு அவள் தோளில் கைபோட பட்டென தட்டி விட்டாள்.

“மச்சி ஏண்டி இப்படி பண்ற.” என்றதில் பொழில் முறைக்கவும்,”சரி நான் தான் ஏதோ சொதப்பிட்டேன் போல. சாரி மச்சி..”என்று குப்புற படுத்து விட்டான் மானசீகமாக.

“நீங்க எதுக்கு மாமா என்கிட்ட சாரி கேக்குறீங்க. அப்பிடி என்ன தப்பு பண்ணுனீங்க?”

“அது தெரியாம தானடி இப்படி முழிக்குறேன். சின்ன பையன் அறியாம புரியாம தவறு செஞ்சிருப்பேன்..ப்ளீஸ் மன்னிச்சு சமாதானம் ஆகிடு மூனு பேபி”

“எதுக்கு.. இல்ல எதுக்கு சமாதானம் ஆகணும் அபி மாமா.எதுக்கு உங்க கூட பழம் விடணும். ம்ம் சொல்லுங்க அபி மாமா. நீ என்ன பண்ணனு நான் உன்மேல் கோவமா இருக்கேன். அத சொல்லிடு பார்ப்போம். பிறகு நான் ஆகிக்குறேன் சமாதானம்.. அது வரைக்கும் என் கூட பேசாதீங்க அபி மாமா “

பொழில் அபி மாமா வில் அத்தனை அழுத்தம் குடுத்து சொல்ல இவனுக்கு அத்தனை அழுத்தமாய் ரோசம் பொங்கியது.

“பேசாத மச்சி. தயவு செஞ்சு பேசாத.. உன் வாயில இருந்து அந்த அபி மாமாவை கேக்குறதெல்லாம் ‘உவ்வேக்’ பச்ச பாவக்காய பந்தில உக்காந்து சாப்பிடற மாதிரி அவ்ளோ கடுப்பா வருது. போடி..”என்றவாறு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

அதன் பிறகு தங்கள் கடையில் வாத்து கறி விருந்து வைத்தும் சிவாதியேட்டரில் ஒரு மொக்கை படத்துடனும் தான் சமாதானம் ஆனாள்.

அன்று அவளுடைய பிரண்ட்ஷிப் வீடியோவை முதலில் வைக்காமல் கல்லூரி நண்பர்களுக்கு வீடியோ வைத்ததற்கு தன்னிடம் அத்தனை கோவப்பட்டவள் இன்று இவனுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. அவளின் ஸ்டேட்டஸ் முழுதும் அவளும் அருணுமாய் மட்டுமே இருந்தனர்.
இந்த இரண்டு வருட பிரிவு தன் ஆருயிர் தோழியை தன்னிடமிருந்து பிரித்து விட்டதோ என்று வருந்தினான் அபிமன்யு.

கருத்துகள்