யாருமில்லா தனியரங்கில் -8

அத்தியாயம் -8


நிலாவிடமிருந்து தான் விலகி விட்டோம் என்று நினைத்து வருந்தினான் அபிமன்யு. இந்த இடைவெளியை சரி செய்ய எங்கேயாவது வெளியில் அழைத்துச் சென்று பேசவேண்டும் என எண்ணி கைபேசியில் அவளுக்கு அழைத்தான்.

சில நேரங்கள் கழித்து அழைப்பு ஏற்கப்பட,

"டி குட்ட மூன் எங்கயாச்சும் வெளியே போய்ட்டு வரலாமா? ஃப்ரெண்ட்ஷிப் டே செலிபிரேட் பண்ண சிவா தியேட்டர் போலாமா?"என்று எடுத்த எடுப்பில் அபி கேட்க,பதிலாக வந்த 

" எப்படி இருக்க அபி? "என்ற மொழியின் குரலில் அப்படியே சமைந்து விட்டான். பதில் பேச வார்த்தைகள் வெளி வர மறுத்து இதழ்களுக்குள் பதுங்கி கிடக்க, நெஞ்சுக்கூட்டுக்குள் பொதிந்து கிடந்த இதயத்தின் தாளம் தப்பி ஒலிக்க ஆரம்பித்தது.எத்தனை நாட்கள் கழித்து அவள் குரலைக் கேட்கிறான். அக்கறையும் மென்மையுமாய் அவள் குரல் அவனை நெகிழ்த்து உயிர் தீண்டியது.

இடைவெளியின் இளைப்பாறல்களை அவள் கரங்களுக்குள் இறக்கி விட தவித்தது அவனுள்ளம். 'அணுவுக்கும் இடமில்லா ஆலிங்கனம் அவளோடு இந்த கணமே வேண்டுமே 'அடம் பிடித்தது அவன் உணர்வுகள்.

"ஹலோ அபி.. லைன்ல இருக்கியா?" இவனின் அமைதியில் அவள் கேட்க அவன் இதழசைத்து பேச முற்பட்டான்.

"ஹ.. ஹான் இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க மெய்மா?"தப்பி பிழைத்து வந்த வார்த்தைகளில் தப்பிக்கும் பாவத்தில் சிக்கிக் கிடந்த மரியாதை தொணியில் மறுமுனை அமைதியை கையாண்டது.

"ஹலோ மெய்மா.."என இந்த முறை அவள் பதிலைத் தேடி விளிப்பது இவன் முறையானது.

"ஹ்ம்ம் இருக்கேன். வாயடைச்சு போயிருக்கேன் இந்த திடீர் மரியாதைல. அவ்வளவு மாறி போய்டியா மனு.."கரகரத்து மெலிந்து வந்த கேள்வியிலும் மொழியின் அந்த பிரத்தியேக அழைப்பும் அவன் செவிகளுள் நுழைந்து செங்குறுதியில் கலந்து இதயத்தை தொட்டுப் போனது.

"நான்.. நான் அப்பிடியில்ல மெய்மா.நான் அப்புறம் பேசறேன்"என்றுவிட்டு போனை வைத்து விட்டான். அவனால் அவளிடம் இயல்பாய் பேசவே முடியவில்லை. ஒரு பக்கம் அவள் மீதான காதல் இவனை உயிரோடு கொல்லுகிறது. மறுபக்கம் வினோத்தை நினைத்து பயம் கூடுகிறது.

இந்த இதயத்தை பிச்சு தூர எரிந்து விட்டால் தான் என்ன? எல்லாவற்றிற்கும் அடி நாதம் இதுவல்லவா.

அவன் நினைவுகள் அலைமோத கைபேசி இசைத்தது. எடுத்துப் பார்த்தான். நிலா தான் அழைத்திருந்தாள். மீண்டும் மொழியாக இருந்தால் என்ன செய்வது என்று யோசித்தான் அபிமன்யு. அலைபேசி இசைத்து சலித்து ஓரமாகக் கிடந்தது. அபியோ குப்புற படுத்து தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை தலையணையை மொழியின் மடியாக எண்ணியிருந்தானோ என்னவோ. அப்பிடியாவது அவன் ஆறுதலை தேடிக் கொண்டிருந்த வேளையில் அவன் பின்னால் முட்டியால் எக்கியதில் வலிக்கவும் தலையை திருப்பிப் பார்த்தான்.

"தொர போனை எடுத்து பேச மாட்டியோ. பிறகு என்ன வெட்டி கண்ராவிக்கு அதை வெச்சுட்டு இருக்க. அந்த கிழவியோட வெத்தல கும்பால போட்டு இடிச்சு திங்குறதுக்கா?"என கேட்டு மீண்டும் அவன் பின்னால் எக்கினாள். அதில் நன்றாக வலித்து விடவே, துள்ளிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்,

"வலிக்குதுடி குண்டாத்தி."என்றவாறு டிக்கியை தேய்த்துக் கொண்டான்.

"வலிக்கணும்னு தான் எத்தறதே "என்று மீண்டும் எத்த வர சட்டென நகர்ந்தவன்,

"ராங்கி புடிச்சவளே. நான் உனக்கு போன் பண்ணப்ப நீ மட்டும் எடுத்தியாடி."

"அதான் அக்கா எடுத்தாளேடா. நான் நிவனுக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருந்தேன்.ஆமா நீ அவ கிட்ட என்ன சொல்லி வச்ச. என்கிட்ட போன் குடுக்கும் போது முகமே சரியில்லை."

"நான் ஒன்னும் சொல்லல "என்று முணங்கினான்.

"அத நல்லா வாய தொறந்து தான் சொல்லேன். சரி விடு உங்க பஞ்சாயத்து நீங்களே பார்த்துக்குங்க. போனது போவட்டும் ஹாப்பி நட்பு டே நெட்ட பையா "என்று கையை நீட்டி பல்லைக் காட்ட அவனோ கையை கட்டியவாரு அவளை முறைத்தான்.

"என்னடா?"

"உனக்கு அந்த அருண் தான பிரண்ட் "என்று கேட்க,

"ஆமா "என்றாள் அசராமல்.

"அப்ப நீ இடத்தை காலி பண்ணுடி. "என்று அவளை பிடித்து தள்ளினான்.

"முடியாதுடா. நீ வேணா கிளம்பு "என்று சொல்லவும் அவன் வேகமாக ரூமை விட்டு வெளியேற போக, அவனை இழுத்து வந்து கட்டிலில் அமர வைத்தாள்.

"ரொம்ப சீன் போடாத. நீ என்னை செஞ்சதுக்கு நான் பதிலுக்கு பழி வாங்குறேன். மத்தபடி ஃபிரண்டு நட்பு எல்லாம் நீதான் ஃபர்ஸ்ட்." என்று இறங்கி வந்தாள் நிலா.அதில் புன்னகைத்துக் கொண்டவன்,

"ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப்டே டி நிலாப் பொண்ணு "என்று சொல்லி தோளோடு அணைத்துக் கொண்டான்.

"இப்ப தான்டா நிம்மதியா இருக்கு. இனி எங்கயாச்சும் ஓடுனா என்னையும் கூட்டிட்டு ஓடிடு என்ன?"

"இம்சைய இடுப்புல வச்சுட்டே சுத்த எனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு "என்று சொல்லவும் அவனை மொத்த ஆரம்பித்தாள்.
 சிறிது நேர அடிதடிகளுக்குப் பின்,

"டேய் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாரு. சீக்கிரம் கொட்டிக்கிட்டு கிளம்பி வா. ஜேடர்பாளையம் போகலாம்"

"ஹே சூப்பர்..யாரெல்லாம்டி போறோம்?"

"எல்லாம் நம்ம கூட்டம் தான்.சரி சரி பேசியே லேட் பண்ணாம நானும் போய் கிளம்பறேன்." என்று விட்டு கிளம்பி விட,

"எனக்கு கட்டங் கட்டிட்டா ஆட்டகாரி "என்று நொந்து கொண்டான் அபிமன்யு.

அங்கிருந்து வந்த நிலா அன்புவின் அறைக்கு வெளியே நின்று "ஆரா பேபி.. "என்றழைக்க,

"அவ கீழ இருப்பா "என்ற அன்புவின் குரல் முனகலாய் வெளி வந்தது.

'இந்த பிஎம் குரல் ஏன் டல்லடிக்குது'என்று நினைத்தவள் தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்த்தாள் நிலா.அங்கே கட்டிலில் இழுத்துப் போர்த்தியவாறு படுத்திருந்தான் அன்புச்செழியன்.அதை பார்த்தவள் உள்ளே அவனருகில் சென்று,

"என்னாச்சு மாமா? உடம்பு சரியில்லையா "என்று கேட்டாள்.

"ம்ம் ஃபீவர்."என்று பதிலளிக்க அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.சூடாக இருந்தது.

"ரொம்ப சூடா இருக்கே மாமா. டாக்டர் கிட்ட போலாம்ல."என்றாள் கவலையாய்.

"போய்ட்டு வந்துட்டேன் நிலா. வைரஸ் ஃபீவர் ரெண்டு நாள் இருக்கும்னு சொல்லிருக்காங்க.மாத்திரை போட்டுருக்கேன்."

"ஆனாலும் இன்னும் சூடு குறையல மாமா. துணிய நெனச்சு போடலாம்ல."

"ப்ச் எந்திரிக்கவே முடியல நிலா. அதான் அப்பிடியே விட்டுட்டேன் "எனவும்,

அருகிலிருந்த துணி அலமாரியை குடைந்து கர்ச்சீப்பை எடுத்து தண்ணீரில் நனைத்து அவன் நெற்றியில் வைத்து விட்டாள். பிறகு இன்னொரு துணியை எடுத்து வந்து நீரில் நனைத்து அவன் முகத்தை துடைக்க வர அதில் சங்கடப் பட்டவன் 

"நானே துடைச்சுக்கறேன் "என்று அவளிடமிருந்து வாங்கி தானே துடைத்துக் கொண்டான்.

"இது மாதிரி அப்பப்போ கை கால கூட துடைச்சு விடுங்க மாமா.அப்போ தான் காய்ச்சல் விடும்"என்றாள் அக்கறையாய்.

"ம்ம் "

"மாமா! நான் அக்கா அருணு எல்லாரும் அபி கூட ஜேடர்பாளையம் போய்ட்டு வரோம் அப்படியே ஆரலியையும் கூட்டிட்டு போகவா? நிவன்லாம் வரான். ஆராக்கும் ஜாலியா இருக்கும் "என்று சொல்லவும் சிறிது நேரம் யோசித்தவன் பின்,

" சரி பார்த்து கூட்டிட்டு போயிட்டு வாங்க. "

" அதெல்லாம் பாத்து பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரேன் மாமா நீங்க ரெஸ்ட் எடுங்க "என்று விட்டு கிளம்ப,

"நிலா " என்றழைத்தான், அதில் அவள் திரும்பிப் பார்க்க,

" தேங்க்ஸ்"என்க,

" அய்ய இதுக்கு போய் யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களா. " என்றுவிட்டு சென்றுவிட்டாள்.

 இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகையொன்று வந்தமர்ந்தது. வெளியே சென்ற நிலாவின் முகத்தை வருடிய மீனா,

"என் மாமாவுக்கு ஏத்த மைனா நீதான்டி மயிலு "என்றவளை கடந்து சென்றாள் பொழில் நிலா.

 
இரு மனங்களும்
இருவேறு பாதைகளில்
பாதைகள் கூடுமிடம்
உறவுகளின் சங்கமமா?
பிரிவுகளின் ஆரம்பமா?










கருத்துகள்