யாருமில்லா தனியரங்கில் -9
அத்தியாயம் -9
முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…
மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…
நானாக நானும் இல்லையே…
வழி எங்கும் பல பிம்பம்…
அதில் நான் சாய தோள் இல்லையே…
உன் போல யாரும் இல்லையே…
பாடல் காரில் இசைத்துக் கொண்டிருக்க அதனோடு சேர்ந்து பாடிக் கொண்டிருந்தனர் அருணும் நிலாவும்.
பாடல் வரிகள் என்னவோ அவனுக்கென்றே எழுதி வைத்தது போலிருந்தது அபிமன்யுவிற்கு. அவனும் மெல்ல இதழ்களுக்குள் வார்த்தைகளை ரசித்து முனுமுனுத்துக் கொண்டிருந்தான்.
அருண் அபி பக்கத்தில் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க பின்னால் நிலாவின் மடியில் ஆரலி அமர்ந்திருக்க மொழியின் மடியில் கவின் அமர்ந்திருந்தான்.
முன்புறக் கண்ணாடியில் தெரிந்த மொழியின் முகத்தை அவ்வப்போது பார்த்தவாறே இதழைசைத்துக் கொண்டிருந்தான்.
தூர தேசத்தில்…
தொலைந்தாயோ கண்மணி…
உனை தேடி கண்டதும்…
என் கண்ணெல்லாம் மின்மினி…
பின்னோக்கி காலம் போகும் எனில்…
உன் மன்னிப்பை கூறுவேன்…
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்…
பிழை எல்லாமே கலைவேன்…
பின்பாதி வரிகளை மொழியை பார்த்தவாறே சற்று சத்தமாக பாட, அதுவரை வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த மொழி சட்டென கண்ணாடியில் தெரிந்த அவன் முகம் பார்த்தாள்.
ஒரு நிமிடம் இருவர் பார்வையும் ஒருவரில் ஒருவர் ஊடுருவி மீள அவளது பார்வை அவனில் குற்றம் சாடியது. அதில் அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.காரில் காதல் பாடல்களாய் இசைத்துக் கொண்டிருந்ததில் சலித்த ஆரலி
"சித்தப்பா புல்லட்டு சாங் வைங்க"என்று சொல்லவும்,
"சரிடா வைக்குறேன் "என்று விட்டு பாட்டை மாத்தினான். அதில் ஆரலி குஷியாகி முன்னால் தாவிக் கொண்டு அருணின் மடியில் வந்து அமர்ந்தாள். அருணும் அவளும் சேர்ந்து ஆட்டம் போட பின்னாலிருந்த நிவன்,
"நானு நானு.."என்று முன்னால் பாய்ந்தான்.
"முன்னாடி இடமில்லடா நிவா. இங்க சித்திட்ட வா. நானு நீயும் சேர்ந்து ஆடலாம்"என்றவாறு அவனைத் தூக்க, அவனோ வராமல் திமிறினான்.
"ஆரூ.. நீ பின்னாடி வா. நிவா கொஞ்ச நேரம் முன்னாடி உக்காந்து வரட்டும் "என்று நிலா சொல்ல ஆரலியும் வர மாட்டேன் என அடம் பிடித்தாள்.நிவனும் ஒரே பிடிவாதமாய் அழ ஆரம்பிக்க மொழி தான் அதையும் இதையும் சொல்லி சமாளிக்கப் பார்த்தாள்.
"ப்ச் நான் அப்பவே சொன்னேன்ல நிலா. இவனை சமாளிக்க முடியாது நீங்க போய்ட்டு வாங்கன்னு. வம்படியா இழுத்துட்டு வந்துல்ல நீயே இவனை சமாளி"என்று விட்டு சம்மந்தமே இல்லாமல் அபியையும் முறைத்து விட்டு வெளியில் திரும்பிக் கொண்டாள்.
'அவன் பண்ற அடத்துக்கு இவ எதுக்கு என்னைய முறைக்குறா'என்று எண்ணியவாறே காரை ஓரமாய் நிறுத்தினான் அபிமன்யு.
"இங்க வாங்க நிவன் கண்ணா. நாம கார ஓட்டிட்டே வேடிக்கை பார்க்கலாம் "என்றவாறு அவனை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பின்னால் பார்க்க மொழி முகத்தை சுழித்து பழிப்பு காட்டியதில் இவனுக்கு சிரிப்பு வந்தது. இடையிலான வருத்தங்கள் ஓரம் கட்டியதில் புன்னகையுடனே காரை இயக்கினான்.
சில நிமிட தூரத்தில் ஜேடார்பாளையம் அணைக்கட்டு வந்து விட அனைவரும் காரிலிருந்து இறங்கினர்.
அருண் ஆரலியை கைபிடித்து அழைத்துக் கொண்டு டிக்கெட் வாங்கச் செல்ல நிலா கார் டிக்கியிலிருந்த தின்பண்டங்கள் இருந்த பையை எடுத்துக் கொண்டு,
"காரை பார்க் பண்ணிட்டு வா அபி"என்று விட்டு முன்னே செல்ல, அவனிடமிருந்து நிவனை வாங்க மொழி காரிலிருந்து இறங்கி அபியருகில் வந்தாள்.
"இறங்கி வா நிவா "என்று கை நீட்ட, குழந்தையோ இரு கைகளையும் நீட்டி தூக்கு, என்றதில் சற்று குனிந்து அபியை சமீபித்து சின்னதாய் ஸ்பரிசித்து நிவனை தூக்கிக் கொண்டு லேசாக சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு அபிமன்யுவின் முகம் பார்க்காமல் சென்றிருந்தாள்.தடுமாறும் மனதின் ஆசைகள் புரிபடாமல் போனாலும் அந்த உணர்வை அவள் ஆராய விழையவில்லை.
அபியோ கண்களை மூடி ஆழ் சுவாசம் நிரப்பி ரஞ்சிதமவளின் மகரந்த வாசத்தை ரசித்திருந்தான்.
"அண்ணா…"என்று விளித்த அருணின் அழைப்பில் கண் திறந்தான் அபிமன்யு.
"காலைலயே கனவா.. வாங்க உள்ள போலாம் "என்றழைக்க
'இவனொருத்தன்..'என்று மனதில் திட்டிக் கொண்டே,
"நீ போ வரேன்.."என்று விட்டு காரை ஓரமாக நிறுத்த இடம் தேடி நிறுத்தி விட்டு வந்தான்.
உள்ளே ஒரு ஊஞ்சலில் ஆரலி விளையாடிக் கொண்டிருக்க கவினை வைத்தவாறு மொழியும் தனியாக நிலாவும் மற்ற ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தனர்.
"ஏய் வாலு அது குழந்தைங்க ஆடுறதுக்கு "என்று நிலாவை அபி கிண்டல் செய்ய,
"நாங்களும் குழந்தைங்க தான் "என்று சொல்லி மொழியோடு ஹைஃபை அடித்துக் கொண்டாள்.
"யம்மா குழந்தைங்களா நீங்க கொட்டிக்க நாங்க மீனுக்கு சொல்லிட்டு வரோம். எங்கயும் தொலைஞ்சு போயிறாதீங்க "என்று அருண் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.
ஜேடார்பாளையம் தடுப்பணைக்கு அருகில் சிறுவர் பூங்காவும் பரிசல் துறையும் அரசாங்கத்தால் லீசுக்கு விடப் பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது. பூங்கா முழுவதும் குழந்தைகள் விளையாட ஏதுவாய் ஊஞ்சல் சறுக்கல் என வித விதமான விளையாட்டுகளும் நிறைய மரங்களடர்ந்த பகுதியுமாய் இருக்கும். விடுமுறை நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இங்கு இன்னொரு சிறப்பம்சமாய் அங்கு அணையில் பிடித்த மீன்களை நம் ஆர்டரின் பேரில் குழம்பு வைத்தும் பொறித்தும் தருவார்கள்.
குழந்தைகளுடன் விளையாண்டு முடித்து குடும்பமாய் உண்டு ரசித்து என மிக அழகாய் முடியும் அந்த நாள்.
இவர்களும் அடிக்கடி குடும்பமாக வந்திருக்கின்றனர்.தனியாகவும் வருவார்கள்.
அனைவரும் சலிக்க விளையாடிய பின் சோர்வாய் அங்கிருந்த மர நிழலில் மணலில் அமர்ந்து விட்டனர்.பிறகு மொழி அனைவருக்கும் சில சிப்ஸ் பாக்கெட்டுக்களை கொடுக்கவும் அதை கொரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.
"யண்ணா வெளிநாடு போய்ட்டு வந்தீங்களே ஒரு ஃபாரின் சாக்லேட் வாங்கிட்டு வந்தீங்களா."என்று அபியிடம் கேட்டான் அருண்.
"முட்டாய் சாப்பிடுற வயசாடா உனக்கு."
"அப்போ வெளிநாட்டு சரக்கா சாப்பிடறது "என்று கேட்க அவனின் தலையில் கொட்டினாள் நிலா.அதில் "அம்மா…"வென கத்தியவன்,
"இவ கூட இருந்துட்டு அதுக்கெல்லாம் ஆசை பட முடியாதுண்ணா.ஆனா நீங்க இவ இம்சை இல்லாம இரண்டு வருஷம் ஜாலியா இருந்திருப்பீங்களே. அங்க உங்களுக்கு கேர்ள்ப்ரண்ட் இருந்திருப்பாங்கல்ல. அவங்கள எனக்கு இன்ட்ரோ கொடுக்கறீங்களா ஜி.எனக்கும் கொஞ்சம் யூஸ் ஆகும்"
"எதுக்கு கடலை வறுக்கவா "என்று நிலா முறைக்க,
"ச்சே ச்சே.. ஒரு இங்கிலிஷ் நாலேட்ஜ்க்காக"
"நீ மேய்க்கற எருமைக்கு தமிழே அதிகம் அடங்குடா "என்று வாரினாள் நிலா.
"உருப்பட விட மாட்டியே "
"நீ உருப்பட்ட வரைக்கும் போதும். இந்தா நிவனுக்கு சுச்சூ வருதாம் கூட்டிட்டு போய்ட்டு வா."
"ம்ம்மீ "
"இந்த மாதிரி வேலைக்கு தான் உன்னை கூட்டிட்டே வந்தது. டைம் வேஸ்ட் பண்ணாம கூட்டிட்டு போ இல்லனா இப்படியே ஈரம் பண்ணிடுவான். அப்புறம் நீ தான் கிளீன் பண்ணனும் "என்று மொழி மிரட்டவும்,
"யூ டூ அக்கா "என்றவன் வேகமாய் நிவனை தூக்கிக் கொண்டு ஓடினான்.அவன் போன வேகத்தைக் கண்டு சிரித்து ஓய்ந்த பின்,
"டேய் அங்க போய் எனக்கு தெரியாம குடிச்சு கிடிச்சு வைக்கலையே "என்று அபியிடம் கேட்டாள் நிலா.
"உனக்கு சத்தியம் பண்ணிருக்கேன்டி. அப்புறம் எப்படி குடிப்பேன் "
"அப்போ கேர்ள்ஃபிரண்ட்ஸ்?"என்று மொழி ஒரு மாதிரி குரலில் வினவ,
சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து இல்லையென தலையசைத்தான்.
"நம்புற மாதிரி இல்லையே"என நிலா சந்தேகமாய் பார்த்து வைக்க,
"ஹே நம்புடி. எனக்கு தெரிஞ்ச இங்கிலிஷ் வச்சு அங்க நான் சமாளிக்கவே பெரும் பாடு பட்டேன். ஏதோ என் பிரண்ட் வைபவ் இருக்கவும் தான் இவ்வளவு நாள் காலம் இப்படி காலம் ஓட்ட முடிஞ்சுது. இதுல கேர்ள்பிரண்ட்னு லாம் சுத்த நேரமும் இல்ல மனசும் இல்ல."
கடைசி வரிகளை மெல்ல முனுமுனுக்க அருகிலிருந்த மொழி அவனைப் பார்த்தாள். அவனது முகம் அப்போதைய அவனது சூழ்நிலையை பிரதிபலித்தது.
"இப்ப ஏன் இவ்ளோ பீலிங்காகுற"என்று கேட்ட நிலாவிற்கு அவன் மனநிலை புரியவில்லை என்றாலும் மொழிக்கு புரிந்தது.
அருண் வந்து பிறகு மேலும் சிறிது நேரம் கழித்து அபியும் அவனும் சென்று பொரித்து மீனை வாங்கிக் கொண்டு வந்தனர்.
குழந்தைகளுக்கு மொழியும் நிலாவும் முள்ளை எடுத்து ஊட்டிக் கொண்டிருக்க அபியோ ஒரு மீனையே ஒரு மணி நேரமாய் நோண்டிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது தட்டில் முள் நீக்கிய மீனை மொழி வைக்க,
"இல்ல மெய்மா பசங்களுக்கு குடு நானே சாப்டுக்கறேன் "என்று மறுத்தான்.
"எவ்ளோ நேரம்னாலும் நீ இந்த மீன சாப்பிட்டு முடிக்க மாட்ட."என்று சொன்னவள் பின்
"இல்ல நான் குடுத்தா சாப்பிட மாட்டியா என்ன?"என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் வினவவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
நிலா தான் "கழுத வயசாகுது இன்னுமாடா உனக்கு முள் எடுத்து குடுக்கணும். நாளைக்கு உன் வைப் வந்து கொமட்டுலயே குத்தப் போறா பாரு ?"என்று கிண்டல் செய்ய, அபிக்கு புரை ஏறியது.
"பேசாம சாப்பிடுங்க."என்று கண்டித்தாள் மொழி.அதை கண்டுகொள்ளாமல் அருண் அபியிடம்,
"நாளைக்கு வரவங்க உங்களுக்கு ஊட்டி கூட விடுவாங்கண்ணா கவலைப் படாம சாப்பிடுங்க"என்றான். அதைக் கேட்ட அபிக்கு தொண்டையில் சிக்கிய முள்ளாய் வலித்தது.
"நான் கல்யாணமே செஞ்சுக்கப் போறதில்லை."என்றவன் எதுவும் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டான்.
"சாப்பிடறப்ப பேசாம சாப்பிடவே முடியாதா உங்களால. இப்ப அவன் சாப்பிடாம போய்ட்டான். ரெண்டு பேரும் நல்லா கொட்டிக்குங்க."என்று கத்தி விட்டு அபியின் பின்னால் சென்றாள் மொழி.
நிலாவிற்கு முதல் முறையாய் இருவரின் மீதும் சந்தேகம் விழுந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக