யாருமில்லா தனியரங்கில் -11


அத்தியாயம் -11

மழையும் இருட்டுமாய் அந்நேரம் வாகனங்களின் இரைச்சல் ஒலியிலும் முகப்பு விளக்கின் வெளிச்சத்திலும் நிறைந்திருந்தது நொய்யல் சாலை. அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வரும் டிராக்டர்களின் வரத்து அதிகமிருப்பதால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும்.மழை வேறு இடைவிடாமல் பொழிந்து கொண்டிருக்க வாகனத்தை ஓட்டவே சிரமப் பட்டனர்.

ஆனால் அதில் விதி விலக்காய் நெஞ்சத்தில் துள்ளும் உற்சாகத்தின் விளிம்பில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் வினோத். அவன் பின்னால் அமர்ந்து கொண்டு வந்த அபிமன்யு தான் புலம்பிக் கொண்டே வந்தான்.

“ஏன் அண்ணாத்த மழை தான் இப்படி ஊத்துதே, கொஞ்ச நேரம் நின்னுட்டு மழை நின்ன பிறகு போனா தான் என்ன?” முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே கேட்டான் அபிமன்யு.

“மொழி தனியா இருப்பா டா.”

“அதுக்கு தான் சொன்னேன் மெய்மாவ ரேவதி அத்தை வீட்ல விட்டுட்டு வரலாம்னு “

“ப்ச் சீக்கிரம் வந்துரலாம்னு நினச்சேன். அந்தாளு லிஸ்ட் கொடுக்கறேன் மெனு கொடுக்கறேன்னு இழுத்தடிச்சுட்டான்”வந்த கடுப்பிற்கு வாடிக்கையாளரை தாளித்தான்.

“சரி சரி பொலம்பாத. அந்த ஹெல்மெட்டயாச்சும் போட்டுட்டு ஓட்டுடா “
“இந்தா நீ போட்டுக்க. எனக்கு மழைல அத போட்டு ஓட்ட முடியல “என்று அவனது ஹெல்மெட்டை அபியிடம் நீட்டினான்.

“ஏன்டா இப்படி பண்ற”என சலித்தவாறே அபியும் தலைக்கவசத்தை போட்டுக் கொள்ள, வினோத் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் அந்த குறுகிய சாலையில் வேகமாக செல்ல ஆரம்பித்தான். இரு சக்கர வாகனங்கள் மழையில் ஆங்காங்கே நின்றிருக்க பெரிய வாகனங்களின் போக்குவரத்தே அதிகமிருந்தது..

தங்களுக்கு சில தூரம் முன்னால் இரட்டை கரும்பு லோடுகளை ஏற்றியவாறு ட்ராக்டர் சென்று கொண்டிருக்க எதிர் புறமிருந்தும் வாகனங்கள் வந்த வண்ணமிருந்தது.
காத்திருக்கப் பொறுமையற்ற வினோத்தோ முன்னால் இருந்த வாகனங்களை கிடைத்த கேப்பில் எல்லாம் முந்திக் கொண்டிருக்க பின்னாலிருந்த அபி மெதுவாக போகுமாறு கத்திக் கொண்டிருந்தான்.
அதையெல்லாம் காதில் வாங்காமல் வினோத் டிராக்டரயும் அதன் பின்னால் நின்றிருந்த காரையும் ஒன்றாக முந்த நினைத்து வண்டியை வேகமாக செலுத்தினான். ஆனால் அந்த மழையின் வேகத்தில் எதிரில் வந்த லாரியின் தூரத்தை சரியாக கணிக்க மறந்து விட்டிருந்தான்.

விளைவு சற்று நேரத்தில் இருவரும் லாரி மீது தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த தென்னந்தோப்பிற்குள் போய் விழுந்தனர். ஹெல்மெட் போட்டிருந்தும் நெஞ்சில் பலத்த அடியை வாங்கி அபிமன்யு உயிருக்குப் போராட, தலையில் அடிபட்ட வினோத்தின் மூளை அந்த கணத்திலேயே செயலிழந்து போயிருந்தது.

இயற்கையிலேயே இதய பாதிப்புள்ள அபிமன்யுவிற்கு விபத்தின் காரணமாய் இதயத்தின் வலிமை குறைந்து மரணத்தை நோக்கி காத்திருக்க பல சோதனைகளுக்கு பிறகு மூளைசாவு அடைந்திருந்த வினோத்தின் இதயம் அபிமன்யுவிற்குப் பொருத்தப்பட்டது. வினோத்தின் மற்ற உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அபியின் மொழி மீதான காதல் இந்த இதய பரிமாற்றத்தின் விளைவா அல்லது அவனது மனதின் வெளிப்பாடா என சத்தியமாய் தெரியவில்லை அபிமன்யுவிற்கு. அவன் ஆராய்தல்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது அவனின் மொழி மீதான காதல்.

இரவின் அந்தகாரத்தைப் போல அவனது எதிர்காலம் அவனை பயமுறுத்திப் பார்க்கிறது. மொட்டை மாடியின் வெட்ட வெளியில் பாயில் படுத்திருந்தவனுள் ஆயிரம் எண்ணங்கள். அத்தனையிலும் மொழியும் அவனும் மட்டுமே.
வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வெற்றுடம்புடன் படுத்திருந்தவன் கைகள் அணிச்சையாய் மார்பிலிருந்த தழும்பை தடவியது.

“நீயிருந்து நானில்லாம போயிருக்கலாம்டா வினோத்.”மெதுவாய் சொல்லிக்கொண்டான். அப்போது குளிர்ந்த காற்று அவன் முகத்தை தழுவியது.ஆனால் அதுவும் அவனை குளிர்விக்கவில்லை.

“இப்பக் கூட என்னை கொன்னுடுடா. “ என்று சொல்ல அவன் கன்னத்தில் சுளீரென விழுந்த அடியில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.சுற்றிலும் இருளைத் தவிர வேறில்லை. நெஞ்சுக்கூடு சில்லிட்டது.

“வி…வினோத்.”என்று மெல்ல அழைக்க குளிர் காற்று மீண்டும் அவன் முகம் மோதியது. அப்போது அவனருகில் யாரோ அமருவதை உணர்ந்தான். அவன் கைகளால் துழாவ அவன் கை ஜில்லிட்டது. எதுவோ அவன் கையை இறுக பற்றியது. அவன் கண்கள் ஒரு முறை அழுந்த மூடித் திறக்க உடல் விரைப்புற எழுந்து நின்றான்.அபியினுள் நுழைந்திருந்தான் வினோத்.

மாடிப்படியில் சுவரேறி மறுபுறம் குதித்து மொட்டை மாடி வழியாக மொழியின் அறைக்கு வந்தான் அவன். நிலா ஒருபுறமும் மொழி ஒரு புறமும் படுத்திருக்க நடுவில் நிவன் படுத்திருந்தான். மெல்ல சத்தமிடாமல் மொழியின் புறம் வந்தவன் அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவனின் முத்தங்களிலும் முயங்களிலும் களைத்து மென் புன்னகையூடே அவளின் தூக்கத்தை பார்த்து பழகியிருந்த வினோத் இன்று அவளின் நிர்மலமான முகத்தைப் பார்த்தான். மெல்ல மேலெழும்பிய அவனின் கரங்கள் அவளின் முகத்தை வருடியது.

‘உன்ன ரொம்ப தவிக்க விட்டுட்டேன்ல மொழிம்மா.’என்று மனதிற்குள் தவித்தவன் விழிகளிலிருந்து கசிந்தது உவர்நீர். அதை துடைத்துக் கொண்டவன்,
“அபி உன்னை நல்லா பார்த்துப்பான். என்னைப் போல பொறுப்பில்லாம இருக்க மாட்டான். நீ நிவன் அபி எப்பவும் சந்தோசமா இருக்கனும் மொழிம்மா “மனதார சொல்லிய வினோத் மொழியின் நெற்றியில் இதழ் பதிக்க முனைந்து விட்டு பின் முத்தமிடாமலே எழுந்து கொண்டான்.

“நீ இப்ப அபியோட மெய்மா “என்று வலியோடு சொல்லிக் கொண்டவன் அருகிலிருந்த நிவனின் சிகை வருடி குனிந்து மென் முத்தமிட்டான். பின் காற்றில் கரைந்து அபியை விட்டு வெளியேறினான். பிரம்மை பிடித்தது போல் நின்றான் அபிமன்யு.

“உனக்கும் மொழிக்கும் இடையில இனி நான் எப்பவும் வர மாட்டேன் அபி “என்ற வினோத்தின் குரலில் திடுக்கிட்டு குரல் வந்த திசையை நோக்க அவனது கண்களுக்கு தென்பட்டது வினோத்தின் உருவம்.அதில் அபிமன்யு சற்று பின்னடைய,

“என்னைய பார்த்து பயப்படுறியா அபி “என்று வினோத் கேட்டதில் அபியின் கண்கள் அவனறியாமல் கலங்கியது.

“நா.. நான்…என்னை மன்னிச்சுடு வினோ “கைகள் கூப்பி மன்னிப்பு வேண்டியவன் அப்படியே மடிந்தமர வினோத்தின் உருவம் மெல்ல அவனை நெருங்கியது.

“மன்னிக்க வேண்டியது நானில்ல அபி, நீதான். உன்னால மொழி வருத்தப்பட கூடாதுன்னு தான் உன்னை பயமுறுத்தி மொழிகிட்டயிருந்து விலக்கினேன். ஆனா இனி எதுக்கும் அவசியமில்லன்னு புரிஞ்சுது. உன் வாழ்க்கை… உன்னோட விருப்பப்படி சந்தோசமா இருடா.”என்றவாறு அவனை கட்டித் தழுவியவ வினோத் பின் கரைந்து செல்ல முயல அவனை தானும் தழுவ முயன்று வெற்றிடத்தை தழுவி தோல்வியடைந்தான் அபிமன்யு.

பின்னர் ஜன்னல் வழி நோக்க மகிழம் பூவொன்று அதன் மணத்தை பரப்பியபடி தொலை தூரம் சென்று மறைந்தது.அப்படியே உறைந்து நின்றிருந்தான் அபி.

“மனு..”

திடீரென கேட்ட மொழியின் அழைப்பில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.

“இந்த நேரத்துல இங்க என்ன பண்ற மனு “
அவனில் பார்வையை பதித்து மெல்லிய அலைப்புறுதலுடன் அவள் கேட்க, என்ன பதில் சொல்லிடுவான்? திருதிருத்து விழித்தான் அவன்.

அப்பொழுது நிலா திரும்பி படுத்ததில் தெரிந்த அசைவில் சட்டென அபியை கட்டிலின் கீழ் நோக்கி இழுத்து விட்டு அவளும் மெத்தையில் படுத்துக் கொண்டாள்.
அவன் அதிர்ந்து எழ முயல அவன் நெஞ்சில் கை வைத்து எழ விடாமல் செய்தாள்.

தளிர் விரல்களின் மென் அழுத்தம் அவனது வெற்று மார்பில் படிந்திட வெற்றுத் தரையில் அமிழ்ந்து போனானவன்.முழுவல் மலரொன்று அறையெங்கும் மணந்தது.
நிலா உறங்குவதை உறுதி செய்து விட்டு அவன் புறம் பார்த்த மொழி அப்போது தான் உணர்ந்தாள் அவன் நெஞ்சில் பதிந்திருந்த தன் கரத்தை.
சட்டென கரத்தை விலக்க முயல மாறாய் அபியோ அவன் நெஞ்சில் அழுந்த வைத்து தன் இரு கரங்களாலும் பொதிய வைத்துக் கொண்டான்.

நெஞ்சம் படபடக்க உதடுகள் உலர்ந்து போனது பெண்ணவளுக்கு.
ஆணவன் மேல் அதுவரை எழும்பாத சிறுங்காரங்கள் அந்த இரவுப் பொழுதின் சலனத்தில் அவளுக்குள் ஆசனமிட அவள் மனம் புரியாது தடுமாறியது.
அவனோ யாவும் மறந்து அவனின் மெய்மாவிற்குள் சரியத் துவங்கியிருந்தான். மார்பிலிருந்த கைகள் அவனின் இதழுக்கு முன்னேறி அவற்றின் இசைவுகளை அதனிடத்தில் பதித்தது.

அதில் அதிர்ந்து கைகளை உருவ முயன்றவளை இழுத்து அவன் மேல் விழ வைத்து பக்கவாட்டில் கிடத்தி அவளின் கந்தரத்தில் முகம் அழுந்த இறுக அணைத்திருந்தான் அபிமன்யு.

அவனின் ஏக்கங்கள் மொட்டவிழ்ந்து மொழியினிடத்தில் படர்ந்தது.கட்டமைக்கும் கண்ணிய கோட்பாடுகள் கரை உடைய காத்திருந்த தருணம். ஆணவன் மூச்சுக்குள் பெண்ணவள் மட்டுமே சுவாசமகிப் போகும் நிலை.

கெடுதல் விகரமாய் இருவருள்ளும் தொலைய முனைந்தது எல்லைகள்.
சட்டென சுதாரித்தான் அவன்!

மொழியை மெத்தையில் கிடத்திவிட்டு அவள் முகத்தை போர்வையால் மூடியவன் அதன் மேலேயே அவளுதட்டில் மென் முத்தமிட்டான்.

நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் தொய்ந்து கிடந்தவள் சிறிது நேரம் கழித்தே போர்வையை விலக்க அவனில்லை. அறையை விட்டு வெளியே வந்து துழாவ எங்கும் அவனில்லை.
அத்தனையும் கனவா..!

மிச்சமிருந்த மேனியின் வெப்பம் இன்னும் அவளுள் இருந்த பிரம்மை. அவனின் அறையிருந்த திசையில் விழியை ஓட்டியவள் குழப்பத்தை சுமந்தவாறே அறைக்குள் சென்று மறந்தாள்.

அவள் வெளியே வந்து தன்னை தேடியதை மறைந்திருந்து பார்த்த அபி மடிந்தமர்ந்து நிலத்தில் கைகளை மடக்கி வெறி பிடித்தவன் போல குத்தினான்.
கைகள் கன்றி சிவந்தது.

‘என்னை தப்பா நினைச்சுறாத மெய்மா ‘என தவித்தது அவனுள்ளம்.

கருத்துகள்