யாருமில்லா தனியரங்கில் -12


அத்தியாயம் -12


சுழலும் மந்திரக் கொம்பொன்று நம்மை சுழற்றி வைக்கும் நிலையொன்றில் என்ன செய்ய முடியும்? மந்திரத்தில் மயங்கிக் கிடைப்பதைத் தவிர.

காதலும் அப்படித்தான். அது ஒரு மந்திரக் கோல். நம்மை நோக்கி அது நீளும் போது காற்றுக்கு அசையும் இறகு போல நம் மனம் வெகு இம்சையாய் அதன் போக்கில் ஆட ஆரம்பித்து விடும். அதை கட்டி வைத்தால் பிய்ந்து போவது நம் மனம் தானே தவிர காதலல்ல.

பருத்திப் பூவின் மென் இதயம் நேச நீரில் மூழ்கி ஊறி கிடக்கிறது. அதை காய வைக்க இடைவெளி என்னும் வெயிலில் உலர்த்த சறுகானது என்னவோ ஆணவன் இதயமே.

அன்றைய இரவின் மீதியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் எதிர் வினைகளை அஞ்சி அபிமன்யூ அவர்களின் உணவகமான 'அயினி நற்சுவை'யில் தனது வேலையை பிஸியாக்கிக் கொண்டதில் மொழியின் கண்ணிலேயே படாமல் போனான்.

மென்மொழியோ அன்றைய நிகழ்வை கனவோ நனவோ என்ற குழப்பத்தில் அபியிடம் பேசக் காத்திருந்தாள். கற்பனையோ நிஜமோ அதை அவள் மனம் எந்த வித எதிர்ப்புமின்றி அவனில் இசைந்து போனதை நினைத்து பெண்ணவளுக்கு ஒரு வித படபடப்பும் நடுக்கமுமாய் உள்ளூற உராய்ந்து கொண்டிருந்தது நேசத்தின் தடுமாறல்.

நான் அவனைக் காதலிக்கின்றேனா?

மென்மொழியை அசைத்துப் பார்த்தது உள்ளுக்குள் எழும்பிய கேள்வி.

மனம் அமைதியை நாடி கபிலர் மலை முருகனை தஞ்சமடைந்தது. பாலசுப்பிரமணியன் அவனை நம்பியவர்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.அதில் எப்போதுமே அவளுக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. இழப்புகளின் கோரங்களை தாண்டி வரும் மனப் பக்குவத்தையும் தெளிவையும் அவளுக்கு அவன் அளித்திருந்தான். அது போலவே இன்றைய சூழ்நிலையையும் அவன் கையினிடத்தில் ஒப்புவித்து விட்டு கோவிலின் வெளி பிரகாரத்தில் நிலாவுடன் அமர்ந்திருந்தாள் மென்மொழி.

தமக்கையின் அமைதியில் சற்று சலித்தவளாய்,

"என்னக்கா ரெண்டு நாளா ஒரு மாதிரியே இருக்க?"என்று கேட்டாள் நிலா.

அதில் தன் கவனம் கலைந்தவளாய் நிலாவைப் பார்த்து புன்னகைத்த மொழி,

"நான் எங்கடி ஒரு மாதிரி இருக்கேன்? எப்பவும் போல தான இருக்கேன்."என்ற பதிலில் நம்பிக்கை இல்லை என்பதைப் போல பார்த்து வைத்தாள் நிலா.

ஏனென்றால் அன்றைய இரவுக்கு வெண்ணிலவு மட்டும் சாட்சியாகிவிடவில்லை.இந்த பொழில் நிலாவும் சாட்சியாகிப் போனாள்.

அன்று அவள் புரண்டு படுக்கும் போதே அறையில் நிகழ்ந்த அவசர அசைவில் விழித்து விட்டவள் அபியின் உருவத்தைக் காணவும் சட்டென மொழியின் புறம் சிந்தனை மீள தூங்குவது போல் நடித்து நடப்பவற்றை கண்காணிக்க ஆரம்பித்தாள்.

முதலில் கட்டிலின் மறுபக்கத்தின் கீழே என்ன நடக்கிறது என்று புரியாமல் மொழியின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென மொழி கீழே இழுபடவும் இவளும் தன்னிச்சையாய் தன்புறம் கீழே குனிந்து மறுபுறத்தை பார்க்க, அங்கு அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து மேலே திரும்பிக் கொண்டாள். நெஞ்சு திக் திக்கென அதிர்ந்தது. எடுத்த வேகப் பெரு மூச்சில் எங்கே தான் விழித்திருப்பது தெரிந்து விடுமோ என அஞ்சு வாயை இறுக மூடி கட்டில் ஓரமாய் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் கட்டிலின் அசைவையும் அறையின் நிசப்தத்தை மீறி இசைத்த காலடிச் சத்தமும் அபி சென்று விட்டதை உணர்ந்ததும் ஒரு வித உணர்வுக் குவியலில் இவள் மனது தவித்தது.

'இப்படி பண்றீங்களேமா? பச்சப் புள்ளடா நானு.'

இரவு முழுதும் அதிலேயே உருண்டு பிரண்டவள் காலையில் ஓரளவு தெளிந்து தானிருந்தாள்.

'கட்டிப்பிடி சீன் பார்த்ததுக்கு இப்படி ஓவர் ரியாக்சன் கூடாது நிலா 'என தன்னை தானே குட்டிக் கொண்டவள் சுவாரஸ்யமாய் அபி மொழி இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தாள்.

அபியின் ஒளிவு மறைவும் மொழியின் குழப்ப நிலையும் அவர்களின் நிலைப்பாடை சொல்லாமல் இவளுக்கு புரிய வைக்க, இதில் தான் செய்வது எதுவுமில்லை என புரிந்து அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

இப்பொழுது கூட மொழியின் நிலையில் மனது கேளாமல் தான் அவளிடம் கேட்டிருந்தாள். அவள் பதில் சொல்லாமல் மலுப்பவும் மேலும் தூண்டி துருவவில்லை நிலா.

அதன் பிறகு நிவன் அழுவதாக ரேவதி அவர்களை போனில் அழைக்கவும் கோவிலிலிருந்து கிளம்பினர் இருவரும்.

மறுநாள் காலை,

அன்புச் செழியன் அறையில் தன் ஐந்து வயது மகள் ஆரலியை எழுப்பிக் கொண்டிருந்தான்.

“ஆரா தங்கம்.. எழுந்திருங்க அம்மு..”என்று மகளின் கன்னம் தடவ, விழித்த குழந்தை அவன் கழுத்தை கட்டிக்கொண்டு “குட் மார்னிங்ப்பா “என்று சொல்லவும் அவளின் நெற்றியில் முத்தமிட்டு இவனும் “குட் மார்னிங் " சொன்னான்.

எழுப்பி விட்டது மட்டும் தான் அவன் வேலை என்பது போல் மற்ற வேலைகளை அவன் சொல்லுமுன்னே செய்து முடித்தவள் அறையை விட்டு வெளியே வந்தாள். தந்தை மகள் இருவருமாக மாடியில் இருந்த தங்கள் நந்தவனத்திற்கு நீராட்டும் வேளையில் தூக்கம் தெளிந்து எழுந்து வந்தாள் பொழில்நிலா.

அவளைப் பார்த்த ஆரலி "சித்தி "என அழைக்க மாடி சுவர் அருகில் வந்தாள் பொழில்.

“ஒரு ரோஜாவே ரோஜா செடி அருகில் நிற்கிறதே அடடே ஆச்சிரியக் குறி.”என்று பொழில் சொல்லவும் அந்த சின்ன சிட்டுக்கும் சின்னதாய் வெட்கம் முளைத்து கன்னக்குழி விழ சிரித்துக் கொண்டது.

“ஹாய் மாமா. குட் மார்னிங்.”என்றாள் ஆரலிக்கு பின் நின்ற செழியனைப் பார்த்து.

அவனும் இவளைப் பார்த்து முறுவலித்து “குட் மார்னிங்" என்றவன்,

"என்ன இவ்ளோ சீக்கிரம் மேடம் எழுந்துட்டீங்க"என்று கேட்கவும், சோகமாய் முகத்தை வைத்தவள்,

"உங்கள நான் வச்சு செஞ்ச பாவத்துக்கு என்னைய என் ஸ்டுடென்ட்ஸ் வச்சு செய்யறாங்க மாமா.மூணாவது படிக்குற புள்ள கேட்ட கேள்விக்கு நேத்து பதில் தெரியாம முழிச்சு ரொம்ப அவமானமா போச்சுது. அதான் இன்னைக்கு யூடூப்ல கணக்கு போடுவது எப்படின்னு வீடியோ பார்க்கணும் "என்று பாவம் போல சொல்ல வாய் விட்டு சிரித்தவன், சிரிப்பினூடே,

"அதுக்கு தான் உனக்கு இந்த டீச்சர் வேலையெல்லாம் செட்டாகாது. ஆயம்மா வேலைக்கு ஆராயிரம்னாலும் பரவாயில்ல சேர்ந்துருன்னு சொன்னேன் " என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க, எப்பொழுதும் இதை சொல்லும் பொது மல்லுக் கட்டி அவனோடு சண்டைக்கு போவபள் இன்று அவனுடைய அரிதான சிரிப்பில் அவனையே பார்த்திருந்தாள்.

கடந்த வருடங்களில் அதிகமான பொழுதுகளில் சீரியசும் சிடு சிடுப்புமாக இருப்பவன் மிக குறைவான நேரங்களிலேயே முத்தான சிரிப்பையே உதிர்ப்பான். அதுவும் மிக சன்னமாகவே. இப்பொழுது மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வெளி வந்த அவனின் இந்த சிரிப்பில் அவளது கண்கள் கலங்கியது.ஆயிரம் சண்டையிட்டாலும் அவள் அதீத மரியாதையும் அளவற்ற அன்பும் அன்புச் செழியனின் மீது வைத்திருந்தாள். அதனால் தான் அவளையும் அறியாது அவன் மகிழ்ச்சி அவளை நெகழ்த்தியது.

"இப்படியே இருங்க மாமா"என்ற பொழிலின் கரகரப்பான குரலில் தான் தன் சிரிப்பையே உணர்ந்தவன் முகம் மெல்ல கசங்கி பின்னர் இறுகி முடிவில் ஆரலியை பார்த்து கனிந்து விட்டிருந்தது.

மெல்ல பெருமூச்சு விட்டபடி ஆரலியின் தலையை தடவி விட்டவன் அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.

“நீ சொல்லு அம்மு! அப்பா இப்படியே இருக்கவா.?”

அவனின் வாயை இரு பக்கமும் விரிந்தார் போல் இழுத்த குழந்தை “இப்படி இருந்தா நீ அழகா இருக்கப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சுது.”என்று சொல்லவும், இதழ் விரித்து முகத்தில் புன்னகை விரிய,

“இருக்கேன் ஆரா குட்டி. இனி எப்பவும் இப்படியே சிரிச்சுட்டு சந்தோசமா உனக்கு மட்டுமே அப்பாவா வாழ்க்கை முழுசும் இருப்பேன் அம்மு குட்டி”என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தவன், அப்போது தான் மாடியேறி வந்து தன் சிரிப்பையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த தாமரையிடம் ,

“என் முகத்துல இந்த சிரிப்பு இருக்கனும்னா ஆரா க்கு மட்டும் அப்பாவா இப்படியே இருக்க விட்டுருங்க. இல்லைனா இந்த சிரிப்பை எப்பவும் என் முகத்துல பார்க்க முடியாம போயிரும் “என்று விட்டு உள்ளே சென்றுவிட்டான்.

அவன் குரல் உயர்த்தவில்லை. கோபமாய் பேசவில்லை. ஆனால் அத்தனை அழுத்தம் அந்த வார்த்தைகளில். தாமரை மௌனமாய் கண்ணீர் விட்டார். அதைக் கண்ட நிலா,

"அத்தை அழாதீங்க. மாமா அவருக்கு பிடிச்ச மாதிரியே இருக்கட்டும். நாம எதாவது செய்யப் போய் இவரோட இப்பத்த நிம்மதிய தொலைச்சிடக் கூடாது."என்று சிறு கண்டிப்புடன் சொல்ல, கண்ணை துடைத்துக் கொண்ட தாமரை,

"நான் என்ன வேணுன்னாடி இப்படி பண்றேன். உங்க அம்மாச்சி தான் கேக்க மாட்டேன்னு ஊரு பூரா இவனுக்கு பொண்ணுக்கு கேட்டுட்டு இருக்கு. அதுல சில சம்மந்தம் சரி வரும் போது நானும் இவனுக்கு நல்லது நடந்துரும்ங்கற ஆசையில இவன்கிட்ட பேசிடறேன். இப்படி அவன் கிட்ட பேச்சும் வாங்கிக்குறேன்."

"அந்த கிழவிக்கு வேற வேலையென்ன. பேரனுக்கு கல்யாணம் செய்ய ஆசையிருந்தா அந்த அரமெண்டல் அபிக்கு பொண்ணு பார்க்க வேண்டியது தானே "என்று பேச்சோடு பேச்சாய் கொளுத்தி போட்டு விட,

"அதெல்லாம் பொண்ணு பொறந்தப்பவே பரிசம் போட்டு முடிச்சாச்சுடி "என தாமரை அவளைப் பார்த்துக் கண்ணடித்தார்.

'அந்த வெண்ணை வேற பொண்ணுக்கு ரூட்டு விடுது அத்தை 'என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், வெளியில் அவரிடம் சமாளிப்பாய் பல்லிழித்து விட்டு கீழிறங்கிப் போய்விட்டாள்.

'இவர்கள் ரெண்டு பேர் கல்யாணம் மட்டும் தான் எங்களுக்கு மிச்ச இருக்க சந்தோசம்.இதையாவது விட்டு வை கடவுளே ‘ என்று மனதுக்குள் வேண்டிக் கொண்ட தாமரை, ஆரலியை அழைத்துக் கொண்டு கீழே சென்றார்.

அவர் வேண்டுதலின் நாயகன் அபிமன்யுவோ 'அயினி நற்சுவை' யில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனை அழைத்தார் அவன் தந்தை சிதம்பரம்.அதன் காரணமாய் அருகிலிருந்த சிப்பந்தியிடம் பொறுப்பை ஒப்படைத்தவன் கேஸ் கவுண்டரில் இருந்த தன் தந்தையிடம் சென்றான்.

"சொல்லுங்க ப்பா "

"தம்பி நம்ம ராஜா மாமா பண்ணைல நூறு நாட்டுக் கோழி முட்டைக்கு சொல்லியிருந்தேன். அங்க டெலிவரி பண்ற பையனுக்கு ஏதோ அடி பட்டுருச்சாம். அதனால நம்மள வந்து எடுத்துட்டு போக சொன்னாரு மாமா. இங்கயும் வேலு இன்னைக்கு லீவு. நீ போய் முட்டைய வாங்கிட்டு வந்துரு நான் இங்க பாத்துக்கறேன்."என்றிட

"சரிப்பா "என்று கிளம்பியவன் தங்கள் உணவகத்திலிருந்து பத்து நிமிட தொலைவிலிருந்த ராஜா நாட்டுக்கோழிப் பண்ணைக்குச் சென்றான்.

நாமக்கல் மாவட்டம் முட்டைக்கு பிரபலம் என்றாலும் தற்போது மாறி வரும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப தன் தொழிலிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார் காமராஜ்.

வேலூரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருபது ஏக்கர் நிலபரப்பில் நாட்டுக்கோழி பண்ணை வைத்திருந்தார்.நான்கு வகையான நாட்டுக் கோழிகளை திறந்தவெளி பண்ணை முறையில் வளர்த்து வந்தார். மற்ற முறைகளை விட இதில் பராமரிப்பு செலவு குறைவு. இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள நாட்டுக் கோழிகளுக்கு மருத்துவ செலவும் குறைவு என்பதால் பண்ணை கோழிகளை விட இதில் வரும் லாபமும் அதிகம். மேலும் இயற்கையான முறையில் கோழிகளுக்கு தீவனங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு இருப்பதால் தீவனங்கள் செலவும் குறைவு.

அதனால் நியாயமான விலையில் கோழிகளையும் முட்டைகளை விற்பதால் ராஜா பண்ணைக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. வெளி மாநிலங்களில் இருந்து கூட ஆர்டர்கள் வரும்.

இன்றும் அது போல ஒரு ஆர்டரை டெலிவரி செய்ய காமராஜே நேரில் சென்றிருக்க பண்ணையை கவனித்துக் கொள்வதற்காக வந்திருந்தாள் மென்மொழி.

இதையறியாமல் எலிப் பொறியில் சிக்கும் வகைமையாய் பண்ணையினுள் நுழைந்தது அபிமன்யுவின் வாகனம்.





கருத்துகள்