யாருமில்லா தனியரங்கில் -13
அத்தியாயம் -13
சுடும் வெய்யிலின் தீரத்தில் நெற்றியில் பொடித்த வியர்வை துளிகளை துப்பட்டாவில் துடைத்தபடி ஏற்கனவே எண்ணி வைக்கப் பட்டிருந்த முட்டைகளை தன் திருப்திக்காக ஒரு முறை எண்ணிக் கொண்டிருந்த மொழி அந்நேரத்தில் வாசலில் கேட்ட கார் சத்தத்தை கேட்டுவிட்டு,
'வேலு முட்டை எடுத்துட்டு போக வந்துட்டான் போல 'என நினைத்தவள் வேகமாய் முட்டைகளை கணக்கிட்டு முடிக்க,
"முட்டையெல்லாம் எடுத்து வச்சாச்சா ராணிக்கா "என்று பண்ணையில் வேலை செய்யும் ராணி என்ற பெண்மணியிடம் அபி பேசும் குரல் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள்.
ராணியிடம் பேசியவாறே உள்ளே வந்து கொண்டிருந்தவன் பார்வையில் தன்னை எட்டிப் பார்த்த மொழி படவும் நடந்து கொண்டிருந்தவன் கால்கள் தன்னால் நின்றது.
'ஆகா! யாரு கண்ணுல படவே கூடாதுன்னு நினைச்சேனோ அங்கேயே வந்து கோர்த்து விட்டுருக்கியே முருகா 'என்று எண்ணியவாறு,
கண்ணாமூச்சி ஆட்டத்தின் நிறைவில் அகப்பட்ட சிறுவன் நிலையில் கைகளை பிசைந்தவன்,மொழி தன்னை நோக்கி வருவது கண்டு
"அக்கா இருங்க ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன் " என்றவாறு கார் நிறுத்துமிடம் நோக்கி ஓடினான்.
அவன் திடுமென ஓடியதில் திகைத்த ராணி "ஏதாச்சும் மறந்துடீங்களா தம்பி?"என்று கேட்க,
"ஆமாக்கா "என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போனான்.அது மொழியின் காதிலும் விழுந்தது.
காரினருகில் வந்த அபி வேக மூச்சுக்களை விட்டு தன் மனதை சமன் படுத்தும் முயற்சியில் இறங்கினான். அனலிட்ட பனித்துளி கரைந்து போவது தானே இயற்கை. அவன் மனம் கரைந்து போகாமலிருக்க எங்கனம் தடுப்பான்.
'பி ஸ்டெடி அபி…ஸ்டெடி..'அவன் மனதில் உருப் போட்டுக் கொண்ட வேளை,
"மனு "என்ற மொழியின் அழைப்பில் பின் முதுகு ரோமங்கள் சிலிர்த்து நின்றிட அவஸ்தை நொடிகளை அவனுக்குள் புதைத்து விட்டு மொழியிடம் திரும்பினான்.
"போன் மறந்து வச்சுட்டேன் மெய்மா. அதையெடுக்க வந்தேன். முட்டை ரெடியா இருக்கு தானே. சீக்கிரம் எடுத்திட்டு ஹோட்டல் போகணும்.அப்பா பார்த்திட்டு இருப்பார்.வா போலாம் "என படபடவென பேசிவிட்டு முன்னால் செல்ல,
'நின்னு பேசக் கூட நேரமில்லையாம் இவனுக்கு 'என முனங்கியது பெண்ணவள் உள்ளம்.சிறு பொறுமலோடு அவன் பின்னே சென்றாள்.
அவனோ ராணியையே சாக்கிட்டு பேசிக்கொண்டு இவள் புறம் மறந்தும் திரும்பாதவனை கண்டு குழப்பம் மேவிட அதன் காரணமாய் விளைந்த சிறு கோபத்தில் அலுவலக அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அப்படி அவள் அகன்றதும் வெளியிட்ட பெருமூச்சில் சுவாசங்கள் சீராக அவனும் ராணியுமாய் சேர்ந்து முட்டைகளை அவன் காரில் அடுக்கினர்.
அதன் பின் ராணி தன் வேலையைப் பார்க்க பண்ணைக்குள் சென்றுவிட, மொழியிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டிய கட்டாயத்திலும், மற்றுமொரு முறை அவளை பார்க்க வேண்டும் என்ற மனதின் நிலைப்பாடு ஏக்கமாக இருக்கவும் அலுவலக அறையை நோக்கிச் சென்றான்.
அங்கே கைபேசியில் பார்வை பதித்திருந்த மொழி அறைக்குள் வந்தவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
அவள் தன்னை கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டு சிறு புன்னகை முகிழ்க்க எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
"முட்டையெல்லாம் ஏத்தியாச்சு. நான் கிளம்பவா மெய்மா?"
"கிளம்பு "என ஒற்றையாய் பதில் வந்தது அவளிடமிருந்து. முகமென்னவோ கைபேசியில் தான் குவிந்திருந்தது.
ஆனால் அவனுக்கு அப்பிடியே கிளம்ப மனதில்லாமல் பேச்சை வளர்த்தான்.
"மாமா இல்லையா?"
"வெளியூர் போயிருக்காரு"
"நிவன் உன்னை விட்டுட்டு இருந்துக்குவானா?"
"ம்ம் பழகிட்டான் "
"நிலாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல "என்று கேட்க கைபேசியிலிருந்து பார்வையை விலக்கி அவனை முறைத்தாள்.
"இப்ப எதுக்கு வெட்டியா பேச்சு வளர்த்துட்டு இருக்க. நிலவுக்கு இந்த ஸ்மெல் சேராதுன்னு உனக்கு தெரியாதா.. உனக்கு நிறைய வேலை இருக்குல்ல.. கிளம்பு மொதல்ல "என அவனை விரட்ட, பாவமாய் பார்த்து வைத்தான் அவளை.
"இப்ப எதுக்கு என்கிட்ட கோவமா பேசற மெய்மா "
"ப்ச் கோவமாவெல்லாம் இல்ல"
'நீ அவாய்ட் பண்றது தான் கஷ்டமா இருக்குடா மனு. இத எப்படி உன்கிட்ட நான் சொல்ல 'மனதுக்குள் மறுகினாள் மொழியானவள்.
"மெய்மா…"அபிமன்யு எதையோ சொல்லத் தவித்து அழைக்க,
"நீ அன்னைக்கு நைட்டு எங்க ரூம்க்கு வந்தியா மனு "என நேரிடையாக கேட்டுவிட்டாள் அவள். ஏனோ இந்த விடயத்தை மனதுக்குள் மறுகி அலைய முடியாதிருந்தது அவளால்.
அவளின் இந்த கேள்வியைத் தவிர்த்து தானே ஓடிக்கொண்டிருந்தான்.என்ன பதில் சொல்வதென்ன தவித்தான் அவன்.
அவனின் அலைப்புறுதலை கண்டவளுக்கு நடந்த நிகழ்வுகள் கனவொன்றும் இல்லையென புரிந்திருந்தது.
இவன் மீண்டும் வினோத்தென எண்ணிக் கொள்ள ஆரம்பித்து விட்டானோ என்ற சந்தேகம் அந்நேரத்தில் முளைக்க,
"நீ திரும்ப வினோத் போல…"அவளால் வார்த்தைகளை தொடர முடியா வண்ணம் அபியின் கைகள் அவள் இதழை மறைத்திருந்தது.மேஜையின் மறுபக்கத்திலிருந்து இவள் நோக்கி குனிந்திருந்தவன் முகம் அவளின் மிக அருகாமையில் இருந்தது. வெப்பமான மூச்சுக் காற்று அவளின் நெற்றியில் பதிந்து முத்தமிட்டு செல்ல, இம்சை நொடிகளை சுவாசிக்கும் நிலையில் பெண்ணவள் விழிகள் விரிந்து அபியின் பிம்பத்தை உள்வாங்கியது.
ஆனால் அதை உணராத அபியோ,
"அது நான் தான். உன்னோட மனு மட்டும் தான். இதுக்கும் மேல எதும் கேக்காத மெய்மா.. உன் முன்னாடி இப்படி நிக்க எனக்கே அசிங்கமா இருக்கு. நான் பண்ணத மன்னிச்சுடு. இனி இப்படி நடக்காது.."என்றுவிட்டு விருட்டென அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
நெஞ்சத்தின் தவிப்பில் பெரும் பனி நதியொன்று சலசலத்து ஓட மனம் முழுதும் சில்லிப்பின் புகை மூட்டம்.
'இவன் என்னை காதலிக்கிறானா என்ன! உறுதியிட்டு ஆமாம் என்றது அவள் மனதின் அடியாழம்.'
பின்னே அன்றைய அவனின் செய்கை கனவில்லை எனும் போது அவனின் மனம் கண்ணாடியாய் தெரிகிறதே அவளுக்கு.
ஆனால் அவனின் இந்த விலகல்? இந்த யோசனையின் முடிவில் அவள் முகம் பளிச்சிட்டது.
'என்னை நினைத்து பயப்படுகிறான் இவன்.நான் இதை எப்படி எடுத்துக் கொள்வேன் என தயங்குகிறான். இவனை தவறாக நினைத்து விடக்கூடாது எனத் தவிக்கிறான்.'
அபியின் மன உணர்வுகளையும் அவன் சங்கடங்களையும் ஒரு சேர புரிந்து கொண்டவளுள் ஒரு மந்தகாச மனோரம்யம் வந்தமர்ந்தது.
"உன்னோட மெய்மா உன்னை எப்படி புரிஞ்சுக்காம போவேன் மனு "வாய் விட்டே சொல்லிக் கொண்டாள் அவள்.
அப்போதே அவன் தவிப்பை போக்க விளைந்தது பெண்ணவள் உள்ளம்.ஆனால் வாடிக்கையாளர் ஒருவர் வந்திருப்பதாய் ராணி வந்து அழைக்கவும் வேறு வழியின்றி அதை கவனிக்க சென்றுவிட்டாள்.
காரில் சென்று கொண்டிருந்தவன் உள்ளம் பெரும் நடுக்கத்தை நவிழ்ந்து கொண்டிருந்தது.
'உன் மனதை அடக்க முடியாததன் பலன் இன்று மொழியின் முன்னால் ஒரு குற்றவாளியைப் போல் நின்றாய் 'என அவன் புத்தி அவனைச் சாட நொந்து போனான் அபிமன்யு.
'என்னை மிக கேவலமாக நினைத்திருப்பாள் 'என்ற எண்ணமே அவனை வதைத்தது.
சூழ்நிலை போராட்டங்களில் அவன் நிதானமாக காரை ஓட்டி வந்ததே அதிசயம் என்பது போல் மனதளவில் அத்தனை களைத்திருந்தவன் முட்டையை இறக்கி கடையில் வைத்து விட்டு பணியாளர்கள் ஓய்வறையில் சென்று அமர்ந்து விட்டான்.
அங்கு அவனை தேடி வந்த சிதம்பரம்,
"தம்பி இங்க ஏன் வந்து உக்காந்துருக்க. உடம்பு ஏதும் சரியில்லையா?"என்றவாறு அவனருகில் வந்து அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தார்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா "என்றவாறு எழுந்து கொண்டான்.
"வெயிலுக்கு அலைஞ்சது முடியலையா தம்பி. நீ வேணா வீட்டுக்கு போ. இங்க நான் பார்த்துக்கறேன்."என்று சொல்ல, அவனுக்கும் தனிமை தேவையாக இருக்கவே சரியென ஒத்துக் கொண்டான்.
காரை ஹோட்டலிலேயே விட்டு விட்டு தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். வெளியே மகிழ மர நிழலில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் வீட்டினுள்ளேயிருந்து வந்த பொன்னாத்தாவின் பேச்சில் உறைந்து போய் நின்றான்.
கருத்துகள்
கருத்துரையிடுக