யாருமில்லா தனியரங்கில் -14
யாருமில்லா -14
"நம்ம மொழிக்கு ஒரு வரன் வந்திருக்கு ரேவதி"என்றார் பொன்னாத்தாள்.
"நல்ல இடமா பெரியம்மா "
"அதெல்லாம் அருமையான இடம் தான். எங்க சின்னாத்தா சொந்தம். பையன நான் பாத்துருக்கேன். ரொம்ப தங்கமான குணம். அவன் மொத பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பையனை விரும்பியிருக்கு. அவிங்க அப்பா அம்மா கட்டாய படுத்தி அந்த புள்ளைய கண்ணாலம் பண்ணி வச்சுருக்காங்க. தாலி கட்டி மறுநாளே அந்த புள்ள இவன் கிட்ட உண்மைய சொல்லிடுச்சு. இவன் அந்த புள்ள விரும்புன பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சுட்டான். இப்ப ஒரு ஆறு மாசம் மின்னாடி முறப்படி விவாகரத்தும் வாங்கிட்டான்."
"இப்படியுங்கூடவா இருக்காங்க?" ஆச்சிரியப்பட்டார் ரேவதி.
"அந்த பையன் குணம் அப்பிடி ரேவதி. ஆனா இதுல கெட்ட விஷயம் என்னன்னா அந்த பையன் ரெண்டாந்தாராம்னு இப்ப ஒருத்தரும் பொண்ணு தர மாட்டிங்குறாங்க." என்று தாமரை சொல்ல,
"அட கடவுளே " என வருத்தப் பட்டார் ரேவதி.
"போன வாரம் ஒரு விசேஷத்துல அவங்க அப்பா அம்மாவை பார்த்தேன் ரேவதி. அவங்க நிலைமைய சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க. நம்ம பக்கம் பொண்ணு இருந்தா சொல்ல சொன்னாங்க. எனக்கு டக்குன்னு நம்ம மொழி நியாபகம் தான் வந்துச்சு. அவங்க கிட்ட மொழி பத்தி சொன்னேன். அப்ப அந்த தம்பியும் பக்கத்தில தான் இருந்தாப்டி. 'கல்யாணம் பண்ணி மறுநாள் பிரிஞ்சத ஏத்துக்கவே எனக்கு இத்தனை நாள் ஆகிருக்கு. அந்த பொண்ணு நடந்த விஷயங்கள கடந்து அடுத்த கல்யாணம் பத்தி முடிவெடுக்கறது அவ்வளவு சாதாரண விஷயமில்ல. நீங்க அவங்க விருப்பத்தை கேளுங்க. எனக்கு மனைவியா வர பொண்ணை முழு மனசோட நான் நேசிப்பேன். அவங்க எந்த நிலைமைல இருந்தாலும் அப்பிடியே தான் ஏத்துக்க விரும்பறேன்' அப்படின்னனு சொல்லவும் மனசே நிறைஞ்சு போச்சு ரேவதி.
கண்டிப்பா மொழிய இந்த பையன் நல்லா வச்சுக்குவான். நீ அண்ணாகிட்டயும் மொழி கிட்டயும் பேசிட்டு சொன்னா அவங்கள பொண்ணு பார்க்க வர சொல்லிடலாம்"
"ரொம்ப சந்தோசமா இருக்குக்கா. இந்த இடம் அமஞ்சுட்டா நல்லாருக்கும். ஆனா மொழிய நினச்சா தான் கவலையா இருக்கு. எப்ப கேட்டாலும் வேண்டாம்னு சொல்ற. அதனால அவகிட்ட சொல்லாம தான் மாப்பிள்ள பார்த்துட்டு இருக்கோம்."
"அப்ப இப்பயும் எதும் சொல்ல வேணாம் ரேவதி. நீ காமராசு கிட்ட மட்டும் பேசிட்டு சொல்லு.நேருல கொஞ்சம் பேசி பார்த்தா மனசுக்கு புடிச்சு போகலாமில்ல "என்று பொன்னாத்தாள் சொல்ல தாமரையும் ஆமோதிப்பாய்,
"எனக்கும் அதான் சரின்னு தோணுது." என்று சொல்ல ரேவதி அரை மனதாய் தலையசைத்தார்.
இதையெல்லாம் வெளியே கேட்டுக் கொண்டு நின்றிருந்த அபிமன்யு தான் உடைந்து போயிருந்தான். முகம் முழுதும் குப்பென வியர்வை படர மயங்கி தரையில் விழுந்தான்.
வாசலில் தடாரென சத்தம் கேட்டதில் உள்ளிருந்த பெண்கள் மூவரும் அவசரமாய் வெளியே வந்தனர். அங்கு விழுந்து கிடந்த அபியை பார்த்ததும் பதறியவர்கள் அன்புவிற்கும் ராகவனிற்கும் போன் செய்தனர்.
அடுத்த அரைமணி நேரத்தில் நாமக்கல் மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்க்கப் பட்டான் அபிமன்யு. மருத்துவமனை வளாகத்தில் மொழியைத் தவிர அனைவரும் நின்றிருந்தனர்.
அபியை பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர்,
"அபியை அதிகம் டென்ஷன் படுத்தக் கூடாதுன்னு சொல்லிருந்தேனே ராகவன்.இப்ப என்ன பிரச்சனை. பிபி அவ்ளோ ஏறியிருக்கு "என்று கேட்க குடும்பத்தினர் அனைவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர்.
"அப்பிடி எதுவும் பிரச்சனை இல்லை டாக்டர். சின்ன வயசுல இருந்தே அவனுக்கு ஹார்ட் ப்ரோப்லம் இருக்குறதால அவனை நாங்க அதிர்ந்து கூட பேச மாட்டோமே. இப்ப செத்து பொழச்சு வந்திருக்கப்ப முன்ன விட இப்ப ரொம்ப கவனமா தான் டாக்டர் பாத்துக்கறோம். இடையில வெளிநாடு போகணும்னு சொல்லும் போது கூட உங்க கிட்ட கேட்டு அனுப்பி வச்சு அவன் பிரண்ட் கிட்ட கூட நல்லா பார்த்துக்க சொல்லியிருந்தோம் டாக்டர். இப்ப கொஞ்ச நாள் முன்னாடி தான் வந்தான். கடையில கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவான். இன்னைக்கு டையர்டா தெரியறான்னு நான் தான் வீட்டுக்கு அனுப்பி வச்சேன். இப்படி ஆக என்ன காரணம்னு தெரியலை டாக்டர்." ராகவன் வாய் பொத்தி அழ ஆதரவாக அவரின் தோளை தட்டினார் மருத்துவர்.
" அழாதீங்க ராகவன். அபி இப்ப நல்லாருக்கான். பிபிய நார்மல்க்கு கொண்டு வந்துட்டோம். ட்ரிப்ஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. ரெண்டு நாள் வெளிய அலைய வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். டேப்லெட் கொஞ்சம் மாத்தி கொடுக்கறேன். மறக்காம எடுத்துக்க சொல்லுங்க. இனிமேற்கொண்டு கொஞ்சம் பார்த்துக்குங்க ராகவ். " என்றுவிட்டு மருத்துவர் அங்கிருந்து நகர்ந்தார்.
"என்னங்க டாக்டர் இப்படி சொல்லிட்டு போறாங்க. நமக்கு தெரியாம அபிக்கு என்ன பிரச்சனைங்க இருக்கும்." கவலைப் பட்டார் தாமரை.
"அவன் நம்ம கேட்டாலும் மலுப்ப தான் பார்ப்பான்."ராகவன் அலுத்துக் கொண்டார்.
"அண்ணா இந்த நேரத்துல இத பத்தி பேசறோம்ன்னு நினைக்க வேண்டாம். நம்ம நிலா அபி கல்யாணத்த சீக்கிரம் வச்சுறலாம். நாளைக்கு பொண்டாட்டி புள்ளைங்கன்னு வந்துட்டா அவனுக்கும் பொறுப்பு வரும் "
"நானும் அதான் நினச்சேன். ஆனா அபி இப்படியிருக்கும் போது நீங்க ஒத்துக்குவீங்களோன்னு தயக்கமா இருந்துச்சு ரேவதி "என்று சொல்ல அவரின் கையை பிடித்துக் கொண்டார் காமராஜ்.
"என்ன மச்சான் இப்படி சொல்லிட்டீங்க.அபி யாரோ வேத்து ஆளா. நம்ம வீட்டு புள்ள. நாங்க போய் மறுப்பமா. அதோட மொழிக்கும் நல்ல வரன் தகஞ்சிருக்கறதா தாமரை சொன்னதை ரேவதி சொன்னாப்படி. மொழிக்கு முதல்ல கல்யாணத்த முடிச்சுட்டு அடுத்து அபிக்கும் நிலாவுக்கும் நிச்சயதார்த்தம் கல்யாணம் ரெண்டையும் ஒன்னாவே வச்சுடலாம்."என்று சொல்ல அனைவர் முகத்திலும் சிறிது நிம்மதி வந்தது.
இவர்கள் அடுத்தடுத்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்க, ஓரமாய் நின்றிருந்த பொழில் நிலாவை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் அன்புச் செழியன்.
மருத்துவமனை வளாகத்தின் ஓரத்தில் அமைந்திருந்த உணவு விடுதிக்கு வெளியில் மரங்கள் அடர்ந்திருக்க கீழே கல் இருக்கைகள் அமைக்கப் பட்டிருந்தன. அங்கு நிலாவை தர தரவென இழுக்காத குறையாய் அழைத்து வந்தான்.அவள் மூச்சு வாங்க அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.பின்,
" எதுக்கு மாமா இப்படி இழுத்துட்டு வரீங்க. வா நிலான்னு கூப்பிட்டா வர மாட்டேனா " என அவனிடம் சத்தமிட்டவள் வலித்த மணிக்கட்டை தேய்க்க அவளின் மண்டையில் நறுக்கென கொட்டினான்.
"நீலாம் நான் சொல்றத என்னைக்காவது கேக்குறியாடி"அவளிடம் காய்ந்தான்.
"இப்ப என்ன கேக்காம போய்ட்டாங்க உங்க கிட்ட." பதிலுக்கு சிலுப்பிக் கொண்டு நின்றாள்.
"அன்னைக்கே அவனுக்கு என்ன பிரச்சனைன்னு கேக்க சொன்னேன்லடி.இன்னைக்கு பாரு எப்படி வந்து கிடக்குறான்.நீயெல்லாம் என்ன பிரண்டு மயிருன்னு அவன் கூட சுத்திட்டு இருக்க "
"அதே என்ன இதுக்கு அவன் கூட அண்ணன்னு நீங்க சுத்திட்டு இருக்கீங்க. உங்க தம்பி தான அவன். அவன் மனசில என்ன இருக்குன்னு கூட தெரியாம நீயெல்லாம் என்ன அண்ணன் "
அவளுக்கு வந்த கோவத்தில் மரியாதை மண்ணாகிப் போயிருந்தது.ஆனால் அடுத்த கணமே அவளின் அலறல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.அவளின் அந்த மரியாதையற்ற பேச்சில் பெரும் கோபம் அடைந்தவன் அவள் உச்சி மண்டையில் நன்றாகவே கொட்டி விட்டுருந்தான்.
நேர்வகிடு எடுத்து தலைவாரியிருக்க முடி மறைக்காத அவளின் நடு வகிட்டில் விழுந்த கொட்டில் தலையே கிறுகிறுத்து போயிருந்தது.
"யோவ் அவ்வளவு தான்டா உனக்கு மரியாதை. நானும் நம்ம மாமாவாச்சேன்னு பொறுத்துப் போனா கொட்டியே கொன்றுவ போல. இப்ப உனக்கு என்ன தெரியணும்,உன் தம்பிக்கு என்ன பிரச்சனைன்னு தான. இப்ப சொல்றேன் உன் விளங்காத காத வச்சு நல்லா கேட்டுக்க, உன் தொம்பி லவ்வு பண்றான். மொழிய.. மென்மொழிய லவ் பண்றான். அவளுக்கு கல்யாண விஷயத்தை கேட்டு கோழையாட்டம் இங்க வந்து கிடக்கான். போதுமா…இனி கிளம்பி போயிட்டே இரு.." அவனிடம் ஆவேசமாய் கத்திவிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். வலித்த தலையை கை வைத்து நன்றாக தேய்த்து விட்டாள். பின் வலி தாங்க முடியாது தேம்பியவள்,
"உனக்கு உன் தம்பி வலின்னா கசக்கும் என் வலின்னா சக்கரையாட்டம் இனிக்கும் அப்பிடித்தான" என்றுவிட்டு அவனை பார்க்க பிடிக்காதவளாய் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவள் முதுகு அழுகையில் குலுங்கியது.
பேச்சு மூச்சற்றுப் போனான் அன்புச் செழியன்.
கருத்துகள்
கருத்துரையிடுக