யாருமில்லா தனியரங்கில் -15
யாருமில்லா -15
அபிமன்யு மருத்துவமனையிலிருந்த அதே நேரம் நிவனை தூங்க வைத்தவாறே அவனின் அருகில் படுத்திருந்தாள் மென்மொழி. உள்ளத்தின் வருத்தங்களை உதடுகள் வெளிப்படுத்தி விடா வண்ணம் இறுகி இணைந்து கிடந்தது அவளிதழ்கள்.
தனிமையான உள்ளத்து அரங்கில் சமீப காலமாய் உணர்ந்து கொண்டிருந்த ஒருவனது நேசக் குரல் இன்று அதி கனமாய் கானம் இசைத்து துடிக்க வைத்தது.
'மனு…' பெரும் கேவலொன்று அவளிடமிருந்து வெளிப்படத் துடிக்க, நிவனின் இருபுறமும் தலையணையை வைத்து விட்டு அறையோடு இணைந்திருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
ஷவரை முழுதாய் திறந்து விட்டவள் அப்படியே அமர்ந்து விட்டாள் அதனடியில். இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொள்ள விரல் இடுக்குகளில் வழிந்தது கண்ணீர்.
"நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா மனு" தேம்பல்களின் இடையினில் விளம்பரமாய் இடைவிடாது புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவளை தொப்பலாய் நனைத்துச் சென்றிருந்த நீரினைப் போலவே நேரமும் தீர்ந்து கொண்டிருந்தது கணக்குவழக்கின்றி. அழுகையும் தேம்பலும் மெல்ல குறைந்து முற்றிலுமாய் நின்றிருக்க இமை மூடி அமர்ந்திருந்த மொழியின் மனதில் மனு மட்டுமே மிச்சமிருந்தான். சிவந்து கலங்கியிருந்த விழிகளில் வழக்கத்திற்கு மாறான மின்னல். நனைந்த உடைகளில் நடுங்கிய உடலுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளத்தில் கதகதத்த வெப்பத்தின் இளஞ்சூட்டில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான் அபிமன்யு.
எவ்வளவு நேரம் சென்றதோ வெளியே கதவை தட்டும் சத்தத்தில் ஷவரை நிறுத்தினாள். முழுக்க நனைந்திருக்க மாற்றுடை எடுக்க கூட வெளியே தான் செல்ல வேண்டும். அப்பிடியே செல்வதா என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது,
"மொழி " என நிலா அழைக்கும் சத்தம் கேட்டது.சட்டென யோசித்தவளாய் கதவை திறந்து தலையை வெளியே நீட்டியவள்,
"ட்ரெஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன் நிலா. கொஞ்சம் எடுத்து தரியா?"என்று கேட்க அவளின் சிவந்த கண்களை கண்டு முகம் சுருக்கியவள் மொழியை கூர்ந்து நோக்கினாள்.
'அண்ணல் ஆஸ்பத்திரில இருக்காங்கன்னு அம்மணிக்கு வருத்தம் போல'என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். பிறகு எதுவும் பேசாமல் மாற்றுடையை எடுத்து அவளிடம் தந்து விட்டு தூங்கிக் கொண்டிருந்த நிவனின் பக்கத்தில் படுத்து விட்டாள்.
வழக்கத்திற்கு மாறாய் அழுதத்தில் நிலாவிற்கு கண்ணை சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. அயற்சியாய் கண்ணை மூட தான் வரும் வரையிலும் சாரி சாரியென கண்ணாலேயே கெஞ்சிக் கொண்டிருந்த அன்புவின் செயலில் இப்போது சிரிப்பு தான் வந்தது.
நிலாவின் அழுகையிலும் அவளின் பேச்சிலும் திகைத்த அன்புவிற்கு அபியின் மொழி மீதான காதல் பின்னுக்குத் தள்ளப் பட்டது. அவசர செயலாய் நிலாவை சமாதானம் செய்வதே அப்போதைய தேவையாய் இருந்தது.
"ஹே சாரி சாரிடா.. ப்ளீஸ் அழாதேயேன் சாரிம்மா " குனிந்திருந்த அவளை நிமிர்த்தி அவள் கண்ணை துடைத்து விட்டு அவளின் தலையை மெல்ல தேய்த்து விட்டான். ஆனால் அதிலெல்லாம் நிலாவின் கோவம் போகவில்லை. தலையை தேய்த்து விட்ட அவனின் கையை தட்டி விட்டாள்.
"பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடறீங்களா. ஒன்னும் தேவையில்லை. போங்க இங்கிருந்து. போய் உங்க தொம்பிய கவனிங்க."
என்றவள் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். அபியை டிஸ்சார்ஜ் செய்யும் வரையிலுமே கண்ணாலும் வார்த்தையாலும் மன்னிப்பு கேட்டு கெஞ்சியவனை கிஞ்சித்தும் சட்டை செய்யவில்லை அவள்.
'இப்பொழுது இறங்கி வரும் பொழுது கூட கண்ணால் கெஞ்சினானே ஹா இப்படி சுத்தல்ல விட்டா தான் நாளபின்ன கொட்டி வைக்க தோணாது'
'ஆறடி அருணால்டு அரையடி இன்னைக்கு குறைஞ்சிருக்கும். ஹாஹா ஆனாலும் மாமு உனக்கு இது தேவைதான். அப்பிடி கொட்டி வச்சுட்டு சாரி கேட்டுட்டா தொரைய மன்னிக்கணுமோ? நெவர்!'
இவ்வாறு அவள் சிந்தித்துக் கொண்டிருக்க அவளின் காலை சுரண்டினால் மொழி.
"என்னக்கா?" அரைக்கண்ணை விழித்து கேட்டாள்.
"அபி எப்படியிருக்கான்."தவிப்பாய் கேட்க,
"எல்லார் பிபியையும் ஏத்திட்டு திவ்யமா இருக்கான்." என்றாள் கூலாக.
"ப்ச் விளையாடாத நிலா. டாக்டர் என்ன சொன்னாங்க. ஏன் திடிர்னு இப்படி ஆச்சாம்?"
" ஹான் சாரு ஏதோ மன வருத்தத்துல இருக்காராம். அதனால சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க சொன்னாரு "
முற்பாதியை கவனித்தவள் பிற்பாதியை டீலில் விட்டபடி "ஓஹ் " என்றாள்.பின்,
"எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க"
"ஆல்ரெடி வீட்டுக்கு டெலிவரி பண்ணிட்டாங்க. அவன் ரூம்ல ஹாயா உக்காந்து போன் பார்த்துட்டு இருப்பான் இந்நேரம் " அவள் சொன்னது தான் தாமதம், அபியை பார்க்க ஓடினாள் மொழி.
அங்கே அபியின் அறையிலிருந்து வெளி வந்த தாமரையைக் கண்டவளது ஓட்டம் தடைப்பட்டது.
"அத்த அபி.." என்றிழுக்க,
" உள்ள தான்டா இருக்கான் போய் பாரு " என்று விட்டு சென்று விட்டார்.
மொழி உள்ளே சென்ற பொழுது அபிமன்யு இல்லை. பாத்ரூமினுள் சத்தம் வந்தது. அவன் வெளியே வரட்டுமென காத்திருந்தவள் அங்கிருந்து இருக்கையில் அமர்ந்தாள். சற்று நேரத்தில் பாத்ரூம் கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.
வெறும் லோயர் மட்டும் அணிந்து முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே வந்த அபிமன்யு அறையில் மொழியைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றான்.
அவளது தலை முடியிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த நீர் அந்த இடத்தை நனைத்துக் கொண்டிருந்தது. அவளின் செவ்வரியோடிய விழிகள் அவனின் முகத்தையே துளைத்துக் கொண்டிருந்தது.
'அழுதிருக்கிறாள் ' என்றெண்ணியவன் ஒரு பெருமூச்சுடன் அவளருகில் சென்றான். தான் துவட்டிக் கொண்டிருந்த துவாலையைக் கொண்டு அவள் கூந்தலை சுற்றி கொண்டையிட்டான்..ஊடே,
"தலையை கூட துவட்டாம என்ன அவசரம் மெய்மா?" என்று கேட்க, நாற்காலியில் அமர்ந்திருந்த மொழி அவனை திரும்பிப் பார்த்தாள். அவளது பார்வை அவனது முகத்தை தாண்டி நெஞ்சிலிருந்த தழும்பில் நிலைத்தது. அவளது வலக்கரம் தன்னைப் போல் மேலெழும்பி அந்த தழும்பை வருடியது.
மின்சாரம் பாய்ந்தது போல் திடுக்கிட்டு விலகினான் அபிமன்யு. மொழியின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றது. கண்களில் நீர் கோர்த்து கருவிழி தாண்டி நிறைந்து சொட்டு துளியொன்று அவளின் கன்னத்தில் வீழ்ந்தது.
"மெய்மா " என பதறியவனாய் அவளின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.
"நா…. நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேனா மனு " அல்லாடலுடன் ஒலித்தது அவள் குரல்.
வாயடைத்துப் போனவனாய் மறுப்பாய் தலையசைத்தான்.
"பின்ன இது ஏன்?" என்று கேட்டவள் அவனின் புறங்கையிலிருந்த ட்ரிப்ஸ் போடப்பட்ட அடையாளத்தை சுட்டிக் காட்டினாள்.
முகத்தை திருப்பி தலையைக் கோதிக் கொண்டான்.
'என் மெய்மாவிற்கு எல்லாம் புரிந்து விட்டது. என்னை கோபிக்க முடியாமல் வருத்தப் படுகிறாள்.' தவித்துப் போனான். சில பெருமூச்சுடன் மனதை சமன் படுத்தினான். நாளை மொழிக்கு திருமணம் பேச நினைக்கும் நேரத்தில் தன்னால் அவள் குழம்பிவிடக் கூடாது என்று நினைத்தான். கல்லாக்கினான் மனதை. அவனுமே கல்லாகிப் போய் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்.
"நீ என்னை எப்பவுமே கஷ்டப்படுத்த முடியாது மெய்மா. நானும் உன்ன எந்த சூழ்நிலையிலயும் கஷ்டப்படுத்த விரும்ப மாட்டேன். ஆனா இப்ப என் மனசு அதோட எண்ணங்கள் சரியில்ல. வி…. வினோத்தோட.. ஹ்ம்ம் வினோத்தோட இதயம் என் மனச பாதிச்சிருச்சு. உன் மேல எனக்கு வந்த எண்ணமும் அதோட பாதிப்புத் தான். இது நிலையானது இல்ல மெய்மா. என்னோட எண்ணங்கள் நிலையா இருக்குமாங்குறது கூட சந்தேகம் தான். நாளைக்கு எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண பார்த்ததும் இந்த டெம்ப்ரவரி ஈர்ப்பு காணாம கூட போய்டலாம். நான் சீக்கிரம் சரியாகிடுவேன். ஸ்கூல் டேஸ்ல வர பப்பி லவ் போல தான்.. " அவன் சிரித்துக் கொண்டே சொல்ல,
"ஓஹ்.." என்பதுடன் நிறுத்தி விட்டாள்.அவளுக்கும் காதலுக்கும் எப்பொழுதும் ராசியில்லை போல. எல்லாமே சட்டென விட்டுச் சென்று விடுகிறது.
ஓவென பேரிரைச்சல் எழும்பியது அவள் இதயத்தில். சட்டென உடைந்து மடிந்து அழுதுவிடும் அபாயத்தை உணர்த்தியது அவள் மனம்.'இப்படியே ஓடிவிட்டால் என் மனம் வேறு புரிந்து விடுமே எதிரிலிருப்பவனுக்கு' துயரங்களை தொண்டையில் புதைத்தாள்.அபியைப் பார்த்து சின்னதாய் சிரித்து வைத்தவள், அவனின் சிகையை மெல்ல கலைத்து விட்டாள். பின்,
"உன்னை எனக்கு புரியும் அபி.." என்றதோடு எழுந்து கொண்டாள். பின் நொடி நேரம் தாமதிக்காமல் வெளியே சென்று விட்டாள். மாடியை விட்டுக் கீழிறங்கும் முன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் கேவலை வெளிப்படுத்தியவள் அப்படியே வாயை இறுக மூடிக் கொண்டாள்.
கட்டுப்படுத்த முடியாமல் கரைந்து செல்லும் கண்ணீரை அவள் தலையை சுற்றியிருந்த துவாலையில் ஆவேசமாய் துடைத்தாள். அப்படி துடைக்கும் போது வெளிப்பட்ட அபியின் மணத்தை வெறுத்தவளாய் துண்டை வீசி எரிந்தவள் தட தடவென கீழிறங்கி ஓடியே போனாள்.
நடந்தவை அனைத்தையும் இருவரும் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்த அன்புவின் மனதில் பாரமேறியது. அபியின் அறையை எட்டிப் பார்த்தான். மொழி போகும் போது எப்படி இருந்தானோ அப்பிடியே அமர்ந்திருந்தான்.
அப்போது அன்புவைத் தாண்டிக் கொண்டு புயலாய் உள்ளே போனாள் நிலா. அமர்ந்திருந்த அபியின் முடியை கோத்தாக பிடித்து தூக்கியவள் அவன் கன்னத்தில் பளீரென அறைந்தாள்.
"ஏய் அவனுக்கு உடம்பு சரியில்லடி" பதறிக் கொண்டு வந்தான் அன்பு.
ஆனால் அடித்த நிலாவின் காலைக் கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தான் அபிமன்யு.
கருத்துகள்
கருத்துரையிடுக