யாருமில்லா தனியரங்கில் -16
யாருமில்லா -16
நிவனின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நிலா சடாரென கதவு திறக்கும் வேகத்தில் எழுந்து அமர்ந்தாள். அப்போது உள்ளே வேகமாய் வந்த மொழி நிலாவைப் பார்த்ததும் சற்று தடுமாறிய பின் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அதற்கும் மேல் தாங்க முடியாதவளாய் உடைந்து அழ வெளியிலிருந்து அவளின் அழுகை சத்தத்தை கேட்ட நிலா அவளை தேற்றும் வழியன்றி தவித்தாள்.
மீண்டும் மீண்டும் இவளையே ஏன் உடைக்கிறாய் என கடவுளின் மீதே கோவம் வந்தது. அவளின் அழுகைக்கு காரணமான அபியின் மீது ஆத்திரம் மிகுந்தது. ஒன்றும் ஒன்றும் இரண்டென கணக்கிட அவளுக்கு நொடி நேரம் தான் பிடித்தது.
'இவனுக்கு என்ன தைரியமிருந்தால் மொழியை அழ வைத்திருப்பான் ' என அபியின் மீது கோவம் கொண்டு தான் இப்படி வந்து அறைந்ததே. ஆனால் பதிலுக்கு தன் காலை அணைத்துக் கொண்டு கதறிய பொழுது முற்றிலும் திகைத்துத் தான் போனாள்.
'ஐயோ இவனின் உடல்நிலைக்கு இந்த அழுகை நல்லதில்லையே 'பதறியது அவள் மனம். அபியை மெல்ல பிரித்து விட்டு அவனைப் போலவே மண்டியிட்டு அமர்ந்தாள். அபியோ முகத்தை மூடி விசும்பிக் கொண்டிருந்தான். இவள் அமர்ந்ததும் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
"அபி.. அபி.. இங்க பாருடா.. எதுக்கு இந்த அழுகை. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்."அவனின் தலையை கோதி முதுகை நீவி விட்டாள்.
"வலிக்குது நிலா.. ரொம்ப வலிக்குதுடி "
"அவளையும் வலிக்க வச்சு நீயும் ஏன் இப்படி கஷ்டப்படணும் அபி. "என்று கேட்க, தான் மறுப்பதால் மொழிக்கு ஏன் வலிக்க வேண்டும் என்ற யோசனை கூட அப்போதைய மனநிலையில் அவனுக்கு வரவில்லை. மாறாய்
"மொழி எப்பவும் கஷ்டப்பட கூடாது அதுக்கு நான் விடவும் மாட்டேன். என்னோட காதல் எனக்குள்ளயே செத்து போவட்டும். அது எப்பயும் மொழிக்கு கஷ்டத்தை குடுக்க கூடாது நிலா"என்றான்.
'உன்னோட காதல் அவளுக்கு கஷ்டத்தை குடுக்குதுன்னு அவ எப்போடா சொன்னா பைத்தியக்காரா ' வாய் வரை வார்த்தை வந்துவிட்டது நிலாவிற்கு. ஆனால் சொல்லாமல் மறுத்தவள்,
"அதெல்லாம் நீ அன்னைக்கு கட்டி உருளும் போது யோசிக்கலையாடா " நிலா கேட்க, சட்டென நிமிர்ந்து அமர்ந்தவன் சங்கடத்தில் முகத்தை தேய்த்துக் கொண்டான்.
"இதெல்லாம் எப்படா நடந்தது." வாயை பிளந்தான் அன்பு.
"நான் அவகிட்ட சாரி கேட்டுட்டேன் நிலா.."என்றான் அபிமன்யு தலையை குனிந்து கொண்டு.
"என்னனு! தெரியாம கட்டிபுடிச்சிட்டேன் மன்னிச்சுடுன்னா "அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
"ம்ம் "அவன் மெதுவாய் சொல்ல அவனை தள்ளிவிட்டு நகர்ந்து அமர்ந்தாள்.
"நான் வேறென்னடி பண்ண. அன்னைக்கு என்னை கண்ட்ரோல் பண்ண முடியல. அதுக்காக எவ்ளோ பீல் பண்ணேன் தெரியுமா "பாவமாய் பார்த்தான்.
"என்ன டேஸ்க்கு பீல் பண்ண. நீ மொழியை லவ் பண்ற தான.இல்ல இந்த டச்சிங் கிஸ்ஸிங்க்கு மட்டும் யூஸ் பண்ண உத்தேசமா" வேகமாய் கேட்க,
"நிலா.." வென கத்தியவாறு ஆவேசமாய் அவளின் தோள் பற்றினான்.
"இதுக்கும் மேல பேசுனே கொன்றுவேன்டி.அவ என்னோட மெய்மா. தப்பான எண்ணத்தோட ஒரு செகண்ட் பார்வை கூட அவ மேல விழாது. ஏன் எதுக்குன்னே தெரியாம பைத்தியம் மாதிரி லவ் பண்றேன்டி. அவளுக்கு கல்யாண விஷயம் கேட்ட நிமிஷம் செத்தே போயிட்டேன்." குமுறினான்.
இவளை மேலும் பேச விட்டால் அவன் அழுதே உடல்நிலையை மோசமாக்கிக் கொள்வான் என எண்ணிய அன்பு,
"நிலா போதும் எழுந்து வா " என்றழைக்க, அதை சட்டை செய்யாமல்,
"ஹான் இவ்வளவு லவ்வு இருக்கறவன் அவ கிட்ட போய் சொல்ல வேண்டியது தான. நான் உன்னை லவ் பண்றேன். கல்யாணம் பண்ணி கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவேன்னு " என்று கேட்க தொய்ந்து போய் பின்னால் சுவற்றில் சாய்ந்தான்.
"நான் அவளுக்கு வேண்டாம். இப்ப பார்த்திருக்க மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். மொழிக்கு பொருத்தமா இருப்பாரு."
"அத நீ முடிவு செய்யக் கூடாது. உனக்கு அவ வேண்டாம்ல. அப்போ அப்பிடியே இருந்துக்க. இன்னைக்கு அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை கேட்டே ஆஸ்பத்திரிக்கு போய் படுத்துட்ட. நாளைக்கு நிஜமாவே ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணிட்டு போடுவா. அப்போ நீயும் இதோ இந்த பேன்ல தொங்கிரு. கொஞ்சம் கொஞ்சமா எல்லாரையும் கொல்றதுக்கு இது பெட்டர்"
"வாய மூடுடி." கத்தினான் அன்பு.
"என்னத்துக்கு கத்தறீங்க.உங்களுக்கு உங்க தம்பி முக்கியம்னா எனக்கு எங்க அக்கா முக்கியம். இருந்திருந்து இவன் மேல…"சொல்ல வந்தவள் அப்பிடியே நிறுத்திவிட்டாள்.
'இவனே இவன் காதலை ஒத்துக்க தயாரா இல்லாத போது நான் ஏன் எங்கக்கா காதலை சொல்லணும் '
என எண்ணியவாறே அவனைப் பார்த்தாள். அழுத்தமாய் அமர்ந்திருந்தான்.
"உன்கிட்டயிருந்து இத எதிர்பார்க்கவே இல்ல மாமா " என்று கசப்பாய் சொன்னவளை இழுத்துக் கொண்டு தன்னறைக்கு சென்றான் அன்பு.
அவளின் அழைப்பிலேயே கோவம் புரிந்தது அபிமன்யுவிற்கு. பெருமூச்சுடன் விழிகளை மூடிக் கொண்டான். நெஞ்சமெல்லாம் கசந்து வழிந்தது.
"ப்ச் கைய விடுங்க மாமா. எப்ப பார்த்தாலும் லவ்வு பண்ற புள்ளைய கூட்டிட்டு ஓடற மாறியே இழுத்துட்டு வறீங்க " என்று நிலா சொல்ல சட்டென கையை விட்டு விட்டான் அன்பு.
"வர வர வாய் அதிகமா போச்சுடி உனக்கு " அவனின் திட்டை காதிலேயே வாங்காமல் கட்டிலில் தொப்பெனா அமர்ந்தாள்.
அவளுக்கு மிக நெருக்கமான இருவரின் வருத்தம் இவளையும் தாக்கியது.
"கஷ்டமா இருக்கு மாமா " என்றவள்,தன் முன் நின்றிருந்த அன்புவின் வயிற்றில் முகத்தை புதைத்து இடையைக் கட்டிக் கொண்டாள்.அதில் அவன் திகைத்து விழித்தான்.
"சும்மா இருந்தவளை காதலிக்க வச்சுட்டு இப்ப வேண்டாம்னு விலகிப் போனா அவளுக்கு வலிக்காதா மாமா. அழுகுறா மாமா அவ. இத்தனை நாள் கல்யாணமே வேணாம்னு இருந்தவ மனசு முழுக்க இப்ப அபி இருக்கான் மாமா. வாய்விட்டு எதுவும் சொல்லலை தான். ஆனா இன்னைக்கு அவளோட அழுகை எல்லாத்தையும் சொல்லுச்சே. இவனை கொல்லனும் போல வெறி வருது மாமா. "என்று சொல்லி அழ,
"உஷ் அமைதியா இரு நிலா" என்று அவளின் தலையை வருடி விட்டான்.சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள்,
"பேசாம நாமளே வீட்ல சொல்லிடலாமா மாமா."என்று ஆர்வமாய் அவன் முகத்தை பார்த்தாள்.
"வேண்டாம்டா. இது கொஞ்சம் சென்சிடிவ். அபி வேற மொழிய விட ஒரு வயிசு கம்மி. நாம சொன்னா நம்ம வீட்ல இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. நாளைக்கு மொழிய பொண்ணு பார்க்க வராங்க தானே. கண்டிப்பா அபினால பார்த்திட்டு இருக்க முடியாது. நானும் அவன் கிட்ட பேசறேன். அவனை வச்சே வீட்ல எல்லார்கிட்டயும் பேச வைப்போம்."என்று சொல்லவும்,
"ஹ்ம்ம்.."என அரை மனதாய் ஒப்புக் கொண்டாள்.அப்பிடியே யோசனையாய் தன் மேல் சாய்ந்திருந்தவளிடம்,
" எவ்ளோ நேரம் இப்படியே இருக்க பிளான். என் வயிறு பஞ்சு மெத்தை மாறி இருக்குன்னு தூங்கி கிது வச்சுறாத" கேலி பேசியவாறே அவளைணைப்பிலிருந்து விலகி நின்றான்.
தானும் அப்போது தான் தன் செயல் உரைத்தவளாய் விலகி எழுந்து நின்றாள்.
"சாரி மாமா "என்றாள் பதறி.
"நான் தான் சாரி சொல்லணும். அன்னைக்கு அப்பிடி கொட்டியிருக்க கூடாது."என்று கேட்டு அவள் தலையில் கை வைக்க,
"ஆஆ" வென அலறினாள்.
"சாரி சாரிடா. இன்னும் வலிக்குதா? ஹாஸ்பிடல் போலாமா?"
"ஹாஹாஹா போதும் மாமா. வலியெல்லாம் இல்ல. நான் சும்மா விளையாண்டேன். ஆனா இன்னொரு டைம் இப்படி கொட்டி வச்சா மீக்கு நேரா கோமா ஸ்டேஜ் தான். பிஞ்சு மண்டை நஞ்சு போய்டும்." என்று சொன்னவளின் பாவனையில் சிரித்தவன்,
"இனிமே கொட்ட மாட்டேன். ஆனா சேட்டை ஓவரா போனா மர ஸ்கேல் வாங்கி வச்சுருக்கேன். கையை நீட்ட சொல்லி அடிச்சு வச்சுடுவேன்."என்று மிரட்டினான்.
"ஆஹான்.. அடிச்சுட்டு அப்புறம் காத பிடிச்சு சாரி கேக்குற அழகத் தான் நாங்க பார்த்தோமே "
"அ…அது.. பாவம் பார்த்து கேட்டது.. "என்றான் கெத்தை விடாமல்.
"அதுசரி ஒத்துக்கறேன் மீசைல மண் ஒட்டலைன்னு "
"அப்பிடியே நில்லு.. இந்த ஸ்கேல இங்க தான் எங்கயோ வச்சேன் "அவன் போலியாய் தேட துவங்க,
"சர்ர்ரி சர்ர்ரீ சரண்டர் " வெள்ளைக்கொடியை பறக்க விடவும் வாய் விட்டு சிரித்தான் அன்பு.
"ஓடிப்போ உங்க வீட்டுக்கு "
"பின்ன இங்கயேவா இருப்பாங்க "என்று சிலுப்பிவிட்டு செல்ல,
"கூட கூட பேசலைனா தின்ன சோறே இறங்காது இவளுக்கு " என தனக்குள் முனுமுனுத்துக் கொண்டு நிமிர நிலாவோ செல்லாமல் ஏதோ யோசனையோடு அங்கேயே நின்றாள்.
"ஹே போகலையா நீ"
"ஒரு டவுட் மாமா. அதை மட்டும் கேட்டுட்டு போறேன்."
"கேக்கலைன்னா விடவா போற? சரி என்ன டவுட் அது "
"கோவப்பட கூடாது "
"சரி "
"ஸ்கேல் எடுத்துட்டு அடிக்க வர கூடாது"
"சரி.."
"ஹ்ம்ம் மொழிக்கு அபி மேல லவ் வந்த மாதிரி உங்களுக்கு அக்கா இறந்த பிறகு யாரு மேலையும் காதல் வரலையா மாமா " என்று கேட்க, சட்டென உடல் விறைப்புற இறுகி நின்றான்.அதை கவனியாதவள்,
"இந்த ஏழு வருசத்துல யாரையும் பிடிக்கவே இல்லையா மாமா. அப்பிடி பிடிச்சிருந்தும் சொல்லாம மறச்சுட்டீங்களா?" என்று கேட்க அவளின் கழுத்தை எட்டிப் பற்றினான். அதில் பயந்து போனவள்,
"மாமா கோவப்பட மாட்டேன்னு சொன்னீங்க தானே "என்றாள் பாவமாய்.
"அதுக்காக என்ன வேணா கேப்பியாடி "அவன் அவளை உறுத்து விழிக்க,
"சாரி மாமா சாரி மாமா "என பதட்டமாய் உறைத்தாள்.
அவளின் விழியில் தெரிந்த பயத்தில் இளகியவன் அவளின் கழுத்திலிருந்து கையை எடுத்தான். விட்டால் போதுமென ஓட முயன்றவளை தடுத்தது அவன் குரல்.
"உயிரோடு இருந்தாலும் இல்லைனாலும் எனக்கு மனைவின்னா மீனா மட்டும் தான். அது நான் செத்தாலும் மாறாது." என கடுமையாக உரைக்க,
"பெரிய ராமர் தான் "முனுமுனுத்துக் கொண்டே சென்று விட்டாள்.
அவள் சொன்னது அவனின் காதிலும் விழுந்தது.
"சொன்னாலும் சொல்லலைனாலும் என் மீனாக்கு நான் ராமன் தான் "என்று சொல்லிக் கொண்டிருந்தவன் பார்வை தனக்கு நேரே புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த மீனாவில் பதிந்தது.
அவனின் தோளில் முகம் வேதனையுடன் முகம் புதைத்துக் கொண்டிருந்த மீனாவின் ஸ்பரிசத்தை இம்முறை அவன் உணரவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக